திங்கள், 6 ஜூன், 2016

ஆர்.கோவர்த்தனம்...பழம் பெரும் இசையமைப்பாளர் ! சேலத்தில் வசிக்கிறார்

R.Govarthanam-2016.ஆர்.கோவர்த்தனம் [இசையமைப்பாளர்]தன்னுடைய இசை அறிவாலும் உழைப்பாலும், திரையுலகில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக செல்வாக்கும் செல்வமும் பெற்றவர். எவ்வளவு வயதானாலும் பிறருடைய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட விரும்பாதவர். இவருடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.மின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம்.
இவரது தந்தை ராமச்சந்திர செட்டியார். சங்கீதம் அறிந்தவர். அவரே கோவர்த்தனுக்கு வர்ணங்களையும், கீர்த்தனைகளையும் சொல்லிக்கொடுத்தார். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூருவில் வசித்ததால் கன்னடமும் நன்கு தெரியும். இந்த மூன்று மொழிகளிலிருந்த பரிச்சயம், கோவர்த்தனத்தின் முதல் பட வாய்ப்பிலேயே கை கொடுத்தது. இவர் முதன்முதலாக இசையமைத்த “ஜாதகம்’’என்ற படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இசையமைக்கும் அரிய வாய்ப்பு கோவர்த்தனத்திற்குக் கிடைத்தது. கோவர்த்தனத்தின் இசையமைப்பில்தான் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழிலே அறிமுகமானார்.

ஏவி.எம்.மில் தலைமை மேலாளராக இருந்த வாசு மேனன் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளராகி, ‘ஒரே வழி’ என்ற படத்தை எடுத்தார். கதை, வசனத்திற்கு ஜாவர் சீதாராமன், பாடல்களுக்கு கண்ணதாசன், கேமராவிற்கு தம்பு, இயக்கத்திற்கு கே.சங்கர் என்று தேர்ந்தெடுத்த வாசுமேனன் இசைக்குக் கோவர்த்தனத்தை நியமித்தார். இப்படத்தில்தான் ‘அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால் அதுதான் ஆனந்தம்’ என்ற சுசீலாவின் அற்புதமான பாடலும், ரி.எம்.சௌந்தரராஜன், எஸ்.சி.கிருஷ்ணன் இணைந்து பாடிய ‘பணநாதா இன்ப குணநாதா, உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா என்ற அற்புதமான பாடலும் இடம்பெற்றது. இன்றும் விரும்பிக் கேட்கும் பாடலாக இப்பாடல்கள் விளங்குகிறது.

1967-இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமான ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் கோவர்த்தனத்தின் சிறந்த இசையமைப்பிற்கு ஓர் அற்புதமான சான்று. இது கண்ணதாசன் ஆரம்பித்த படம். அவர் மூலம் பின்னர் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தது. கண்ணதாசனின் சிபாரிசின் பேரில் கோவர்த்தனம் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். கண்ணதாசனின் தெரிவு மிகச் சரியானதே என்பதே ஒவ்வொரு பாடலிலும் ஊர்ஜிதப்படுத்தினார் கோவர்த்தனம். இப்படத்தில் ‘உலகத்தில் சிறந்தது எது”, ‘கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா’’, ‘சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன.

இதற்கடுத்து இவர் இசையமைத்த மற்றொரு சித்திரம் ‘பூவும் பொட்டும்’ 1968-இல் வெளிவந்தது. இதில் ‘நாதஸ்வர ஓசையிலே’, ‘உன்னழகைக் கண்டுகொண்டால்’ போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன.

இதையடுத்து இவரது அற்புதமான இசையில் வெளிவந்த படங்கள் ‘பொற்சிலை’,இப்படத்தில் ‘அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தையில்லை’’ என்ற இனிமையான பாடல் உள்ளது. ‘அஞ்சல் பெட்டி 520’ இப்படத்தில் ரி.எம்.எஸ்., சுசீலா  பாடிய சந்தன சிலையே கோபமா, ஆதிமனிதன் காதல் புரிந்தான் ஆடை அணிந்தா என்ற எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலுடன் ரி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பத்துப் பதினாறு முத்தம் முத்தம், திருமகள் என்வீட்டைத்தேடி வந்தாள் என்ற சுசீலா பாடிய இனிய பாடலும் இடம்பெற்றுள்ளது. தெலுங்கிலும், கன்னடத்திலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் போலீஸ்காரன் மகள் என்ற படம் ‘கான்ஸ்டபிள் கூதுரு’ என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்திற்கு இசையமைத்தவர் கோவர்த்தனம். இப்படத்தின் பாடல்களைக் கேட்க: ஏவி.எம்.புரொடக்சன்ஸ் தயாரித்த ‘மூகநோமு’ [களத்தூர் கண்ணம்மாவின் தழுவல்] என்ற படத்திற்கும் இசையமைத்தவர் கோவர்த்தனம்.
தமிழில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவா தலையா’ படம் 1971-இல் தெலுங்கில் பொம்மா பொருசா என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்திற்கும்  இசையமைத்தவர் கோவர்த்தனம். அதே போல ‘ராமு’ திரைப்படம் 1966-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியானது. அதற்கும்  இசையமைத்தவர் கோவர்த்தனம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் கோவர்த்தனம்.;
தற்போது தொண்ணூறு வயதை எட்டவிருக்கும் கோவர்த்தனம் தனது மனைவியுடன் சேலத்தில் வாழ்ந்து வருகிறார்.
தினமலர் நாளிதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.    antrukandamugam.wordpress.com/2016/05/25/r-govardhanam-music-director/#more-35827

கருத்துகள் இல்லை: