வியாழன், 9 ஜூன், 2016

நீங்களே தேடிக் கொண்டது; அனுபவித்துத் தானே ஆக வேண்டும்!: கலைஞர்

மதுரவாயல் பறக்கும் சாலை விவகாரம் குறித்து திமுக தலைவர் கலைஞர் எழுதியிருக்கும் கடிதம் : 9-6-2016 தேதிய “தி இந்து” ஆங்கில நாளிதழில் முக்கியமான ஒரு செய்தி! “NHAI  terminates  Contract for elevated corridor project”  என்ற தலைப்பில் வந்துள்ள செய்திதான் அது.  இந்தத் தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியில், “தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கான காண்ட்ராக்டருடன் செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தம் அண்மையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது” என்று “இந்து” எழுதியுள்ளது. அதனைப் படிக்கும் போது பெரிதும் வருந்திய நான், அந்தத் திட்டத்திற்காகத் தொடக்கத்திலிருந்து பாடுபட்டவன் என்ற முறையில் பல்வேறு  நினைவுகள் என் சிந்தையில் எழுந்தன.


சென்னைத் துறைமுகத்துக்கு வர வேண்டிய அத்தனை வருவாயும், அண்டை மாநிலத்துக்குச் செல்கிறது என்ற காரணத்தால், சென்னைத்  துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மதுரவாயல் பறக்கும் பாதை உருவாக்கப்பட்டது.  சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் லாரிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே நகரத்துக் குள் நுழைய முடியும்.  இதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.  ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சென்னை துறைமுகம் மூலமாக பிற இடங்களுக்கு அனுப்புகிறார்கள். இந்தப் போக்குவரத்து  நெரிசல் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சென்னைத் துறைமுகத்துக்குப் பதிலாக, விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு இடம் பெயர்ந்து சென்றதால், தமிழகத்துக்கு வரவேண்டிய பெரும் வருவாய் ஆந்திராவுக்குச் சென்றது. இந்நிலையைச் சீர்படுத்துவதற்காக,  திராவிட முன்னேற் றக் கழக ஆட்சியில் பறக்கும் சாலை கட்டப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டு,  மத்திய அரசும் கழக ஆட்சிக் காலத்தில்  இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.  

2006ஆம்  ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப் பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதை அடுத்து,  மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி தொடங் கியது.  எக்ஸ்பிரஸ் சாலைக்கான ராட்சதத் தூண்கள் ஒவ்வொன்றாக எழுப்பப்பட்டன. மொத்தம் 889 தூண் களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. அதில் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டு விட்டது.  இதற்கிடையே  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. பொறுப்பேற்ற நிலையில், கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15 தூண்களும் ஆற்றின் நீரோட்டத் தன்மையைப் பாதிக்கும் என்று சொல்லி, தமிழக அரசு இந்தத் திட்டத்திற்குத்  தடை விதித்தது.  

“இந்தத் திட்டம் கைவிடப்பட்டால் ஏற்றுமதியாளர் களும், இறக்குமதியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படு வார்கள். அதோடு சென்னைத் துறைமுகத்தின் வருவாய் அடியோடு குறையும். தற்போது ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர்களை தென் மாவட்டங்களிலிருந்து கொண்டு வரும் டிரக்குகள் சென்னை புறவழிச் சாலை, மதுரவாயல், மாதவரம், புழல், நூறடி சாலை வழியாக துறைமுகத்தை வந்தடைகின்றன.  அதேபோல் வட மாவட்டங்களில் இருந்து வரும் டிரக்குகள், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ரோடு, எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக துறைமுகத்திற்கு வருகின்றன. மீஞ்சூர், மாதவரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த டிரக்கு வண்டிகள் ஊர்ந்தபடி தான் செல் கின்றன.  இதனால் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரிக்கிறது.  மணலி நெடுஞ்சாலையில் இருந்து துறைமுகத்தை வந்தடைவதற்கு சில நேரங்களில் டிரக்கு வண்டிகளுக்கு இரண்டு நாள் கூட ஆகிவிடுவதுண்டு.  இதன் காரணமாகக் கால தாமதம் ஏற்படுவதுடன் எரி பொருளும் வீணாகிறது என்பது டிரக்கு வண்டி உரிமை யாளர்களின் தொடர் குற்றச்சாட்டாகும்.  துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலைதான் மேற்கண்ட அனைத் துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.  இந்தத் திட்டம் கைவிடப்படும் அபாயம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, “உகந்த சூழ்நிலை வந்தால் இந்தத் திட்டம் தொடர்ந்து மேற் கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்” என்று “தினத்தந்தி” விரிவாக வெளியிட்ட செய்தியைத்தான் மற்ற நாளிதழ்களும் பக்கம் பக்கமாக எழுதி, போக்கு வரத்து நெரிசலைத் தீர்க்கும் நல்ல திட்டம் ஒன்று கைவிடப் பட்டுவிடுமே; அதனால் சென்னை மாநகருக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விடுமே என்று பதற்றத்தை வெளியிட்டன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் இது பற்றிக் கூறும்போது, “It was the “motivated, tainted” action of the State Government which had led to the situation of stalling of the project work” என்று தெரிவித்தது.   இந்தத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவோடு இணைக்கப்பட்ட மற்றொரு ஆவணத்தில், தமிழகத்திலே உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிறைவேற் றப்படும் பல திட்டங்களுக்குத் தேவையான நிலத்தைப் பெறுவ தில் எப்படிப்பட்ட சிக்கல்கள் இருக் கின்றன என்பதைத் தெரிவித்து, அந்த இடர்ப்பாடுகள் தாமதமின் றித் தீர்க்கப்படாத வரை, தற்போதுள்ள திட்டங்களை நிறைவேற்றுவது மிகவும் சிரமம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக “இந்து” நாளேட்டில் எழுதியிருந் தார்கள்.   இத்தகைய செயற்கையான பிரச்சினைகளால் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் புதிய திட்டங் களை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறது. மேலும் தமிழகத் திற்குப் புதிய திட்டங்களை வழங்குவது பற்றித்  தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கூறும் போது, “மாநில அரசு தனது ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு, அதன்படி உதவிட முன்வராத வரையில், மாநிலத் தில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்க இயலாது” என்று தெரிவிப்பதாகவும் அதே “இந்து” இதழ் எழுதியது.

மதுரவாயல் - துறைமுகம் சாலையை நம்பி,  ஏராளமான நிறுவனங்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொழிற் சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் பணிகளை நிறுத்தி விட்டன.  சென்னைத் துறைமுகம்;  திருப்பெரும்புதூர் அருகே 3,600 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய “கண்டெய்னர் டெர்மினலை” அமைக்கத் திட்டமிட் டிருந்தது.  மேலும் 500 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு உலர் துறைமுகப் பணிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது.  தற்போது அந்த இரண்டு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாம். இந்தச் செய்தியினை “இந்து” நாளிதழில் ஆனந்த் என்ற செய்தியாளர், “Two Chennai Port Trust Projects in Limbo” என்று எழுதியிருந்தார்.  சென்னை துறைமுகக் கழகத்தின் அதிகாரி ஒருவர், “The stoppage of Maduravoyal Project is ruining us.  We will be losing crores of rupees every year”என்று கூறியிருந்தார். இந்தத் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்த வழக்கு 12-8-2013 அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் அகர்வால், நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்குப் பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது.  மீண்டும் மீண்டும் அவர்கள் அவகாசம் கேட்டு வருகின்றனர்.  இது கண்டிக்கத்தக்கது.  வரும் 19ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கப்படுகிறது.  அன்று அரசு பதில் அளிக்க வேண்டும்.  தவறினால் நாங்களே முடிவெடுப்போம்” என்று கடும்  எச்சரிக்கை விடுத்தார்கள்.  

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக “டைம்ஸ் ஆப் இந்தியா” (10-8-2013) வெளியிட்ட செய்தியில், “இந்தத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்; ஒவ்வொரு நாளும் தற்போது 30 விபத்துகள் அங்கே நடைபெறுகின்றன;  இந்தப் புதிய திட்டம் வருமானால், இந்த விபத்துக்களைத் தவிர்க்க முடியும்” என்று தெரிவித்தது.   

இதைப் போலவே வியாபார நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், துறைமுகத்திற்குச் செல்வதற்கும், தங்கள் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் இந்தப் புதிய திட்டம் மிக மிக அத்தியாவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு சகல தரப்பினரும், அதிகாரிகளும், அனைத்து நாளேடுகளும்,  மத்திய அரசும் இந்தப் புதிய திட்டம் எவ்வளவு அவசர அவசியமானது என்று சொல்கின்ற நேரத்தில்; தமிழக முதல் அமைச்சரின் முடிவு காரணமாக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட ஒரு திட்டம் முடக்கி வைக்கப்பட்டது.   

அ.தி.மு.க. அரசு 2011ஆம் ஆண்டு மே திங்களில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப் பேற்றது.  1-2-2012 அன்று தமிழக அரசின் நீர் வளத் துறையின் தலைமைப் பொறி யாளர்,  தமிழக அரசின் அடுத்த ஆணை வருகிற வரை கூவம் ஆற்றில் நடைபெறும் அனைத்துப் பணிகளையும் நிறுத்த வேண்டுமென்றும், அமைக்கப்பட்டுள்ள தூண்கள் ஆற்றின் கரையிலே இல்லாமல், ஆற்றிற்குள் அமைக்கப்பட்டிருப்பது அரசாணையை மீறிய ஒன்றாகும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குத் தெரிவித்தார். 

17-2-2012 அன்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தமிழக அரசின் நீர் வளத் துறை, தலைமைப் பொறியாளருக்கு எழுதிய பதிலில், தமிழக அரசின் பொதுப் பணித் துறை அளித்த தடையின்மை ஆணையி லிருந்து மாற்றம் எதுவுமில்லாமல்தான் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தது. 

29-3-2012 அன்று நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர், பொதுப் பணித் துறையினால் எந்தத் திட்டமும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதாலும்,

17-2-2012 அன்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுப்பிய பதிலைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும், பணியை உடனே நிறுத்த வேண்டுமென்று “நோட்டீஸ்” அனுப்பியதோடு, அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப் பட்டது.  கூவம் ஆற்றின் அருகே ஏதாவது இயந்திரங்கள் இருந்தால் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டு மென்றும் தமிழக அரசின் தலைமைப் பொறியாளர் மற்ற பொறியாளர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.

2-4-2012 அன்று மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் தமிழக அரசின் தலைமைச் செயலா ளருக்கு எழுதிய கடிதத்தில், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் ஒப்பந்தக்காரரால் முடிக்கப்பட்டு விட்டது என்றும், அந்த நிலையில் அரைகுறையாகப் பணி யினை நிறுத்தினால் மத்திய - மாநில அரசுகளிடையே சட்டப் பிரச்சினைகளும், நிதிப் பிரச்சினைகளும் ஏற்படும் என்றும் தமிழக அரசை எச்சரிக்கை செய்து;   உயர் மட்ட அளவில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தால்; தானே நேரில் வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

9-11-2012 அன்று இந்தியப் பிரதமரின் ஆலோசகர், சென்னைக்கு வந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இதைப் பற்றி விவாதித்தார்.  12-11-2012 அன்று பிரதமரின் ஆலோசகர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக அரசின் மூத்த அதிகாரி களும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் அதிகாரிகளும் சந்தித்துப் பேசி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்.

28-1-2013 அன்று தமிழக அரசின் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், தமிழக அரசிடமிருந்து தேவையான  அனுமதியினையும், மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் (Coastal Regulatory Zone) ஒப்புதலையும் பெற்றிடுமாறு தெரிவித்தார். 14-2-2013 அன்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் எழுதிய கடிதத்தில், ஏற்கனவே பொதுப் பணித் துறை சார்பில் ஒப்புதல் அளித்ததற்கு மாறாக எந்தத் திட்டப் பணியும் நடைபெறவில்லை என்றும், தமிழக அரசின் நீர் வளத் துறை பரிந்துரைத்த பணிகளையும் திட்டப் பணி முடிந்த பிறகு செய்து விடுவதாகவும் தெரிவித்தது. எனவே இந்தியாவிலேயே முதன்முதலாக திட்டமிடப்பட்ட இவ்வளவு பெரிய இந்தத் திட்டத்தை முடிக்க உதவிடக் கோரி தேசிய நெடுஞ் சாலைத் துறை ஆணையம் தமிழக அரசிடம் தொடர்ந்து நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.   இவ்வளவிற்கும் பிறகு அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் உண்மை.  

கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை  தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்து விட்ட காரணத்தால்தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், 872 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.

முக்கியமான இந்த நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டம் என்னதான் ஆயிற்று என்று மத்திய அரசின் அப்போதைய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், திரு. பெர்னாண்டஸ் அவர்களிடம் செய்தி யாளர்கள் கேட்ட நேரத்தில், “Banks were refusing to finance the project in the absence of clear-cut information from the State Government about its stand and a delay in clearing encroachments” என்று தெரிவித் திருக்கிறார்.  அதாவது, மாநில அரசு அதன் நிலை பற்றித் தெளிவாகத் தெரிவிக்காததாலும், நில ஆக்கிரமிப்பு களை அகற்றுவதிலே ஏற்படும் தாமதத்தைப் போக்காததாலும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்காக நிதி அளிக்க மறுத்து வருகின்றன என்று சொல்லியிருக்கிறார்.    

மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

“சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின், திட்டப் பணிகள் துவங்கப்பட்டன.   ஆட்சி மாறிய பின், (அ.தி.மு.க. தலைமையிலான) மாநில அரசின் துறைகளில் இருந்து போதிய ஒத்துழைப்புக் கிடைக்க வில்லை.  நில ஆர்ஜிதம் மற்றும் பாதிக்கப்பட்டோர்க்கான மறுவாழ்வுப் பணிகளில், மாநில அரசிடம் இருந்து தேவையான  ஒத்துழைப்பு இல்லை. இதற்குக் காரணம் என்னவென்றும் தெரியவில்லை.  இந்தத் திட்டத்தில் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை. பொதுப் பணித் துறை நீர் ஆதார அமைப்பின்  தலைமைப் பொறியாளர் அனுப்பிய கடிதத்தில், சில பணிகளை மேற்கொள்ள, கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  இதில் எந்த நியாயமும் இல்லை.  உள் நோக்கம் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொது நலனுக்கு எதிராக உள்ளது.  இந்தத் திட்டத்துக்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போடுவது போல உள்ளது.  எனவே, தலைமைப் பொறியாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அதற்குத் தடை விதிக்க வேண்டும்; மேம்பாலத் திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, மாநில அரசு ஒத் துழைப்பு அளிக்க உத்தர விட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் அலுவலகமும், மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், தமிழ் மற்றும் ஆங்கில நாளேடு களும் எத்தனையோ முறை எவ்வளவோ எடுத்துரைத் தும், இடித்துரைத்தும், நீதி மன்ற நடவடிக்கை மூல மாகத் தீவிரமாக முயற்சி செய்தும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப் பட்ட காழ்ப்புணர்ச்சியி னால், 1,815 கோடி ரூபாய்ச் செலவில் நிறைவேறி யிருக்க வேண்டிய  - சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திடும் மாபெரும் திட்டம் முடக்கப் பட்டு தற்போது ஒப்பந்தமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.  திட்டத்திற்குச் சமாதி கட்டப்பட்டு விட்டதைக் கண்டு சென்னைவாழ் மக்கள் சஞ்சலம் கொள்கிறார்கள்; ஜெயலலிதாவோ சாதித்து விட்டதாகச் சந்தோஷம் கொள்கிறார்! என்ன செய்வது? நீங்களே தேடிக் கொண்டது; அனுபவித்துத் தானே ஆக வேண்டும்!’’   நக்கீரன்,in

கருத்துகள் இல்லை: