திங்கள், 2 மே, 2016

லெட்டர்பேட் கோஷ்டிகளுக்கும் வசூல் அபாரம்...50 கோடிவரை பெற்ற "ஆதரவு" அமைப்புக்கள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், 'எத்தனை சீட்?' என கூட்டணிக் கட்சிகள் அலைமோதுகிறதோ இல்லையோ, லெட்டர் பேடு அமைப்புகளுக்கு ஏக கொண்டாட்டம்தான். அதிலும் ஆட்டையைப் போடும் தில்லுமுல்லுகள் தற்போது அம்பலமாகியிருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில், லெட்டர் பேடு சங்கங்களில் இருந்து தி.மு.க, அ.தி.முக  கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு கடிதங்கள் பறக்கும். அ.தி.மு.க, தி.மு.கவுக்கு என காலம்காலமாக ஆதரவு தெரிவிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், புதிதாக ஆதரவுக்கரம் நீட்டும் எவரையும் கட்சித் தலைமைகள் புறக்கணிப்பதில்லை. கட்டுமானச் சங்கமோ, சிறுபான்மை சங்கமோ அனைவருக்கும் ஒரே மரியாதைதான். கூட்டணிக் கட்சிகளுக்கு கல்தா கொடுக்கும் கட்சித் தலைமைகள்கூட, லெட்டர் பேடு கட்சிகளிடம் சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தயங்குவதில்லை.
'தேர்தல் நெருக்கத்தில் எப்படியும் அழைத்து ஒரு தொகை கொடுப்பார்கள்' என உறுதியாக இந்த அமைப்புகள் நம்புகின்றன.  'கிடைக்கும் சிறிதளவு ஓட்டுக்களைக்கூட ஏன் வீணடிக்க வேண்டும்?' என்ற 'நல்ல' நோக்கத்தில், இந்த அமைப்புகளின் தேர்தல் செலவுக்கென்று ஒரு தொகையையும் கொடுப்பது வழக்கம். இதுநாள் வரையில் மறைமுகமாக நடந்து வந்த இந்தப் பணப்பரிவர்த்தனை நேற்று அம்பலமானது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்தார். 'இயற்கை விவசாயத்தை அ.தி.மு.க முன்னெடுக்கும் என்ற உறுதிமொழியைக் கொடுத்ததால், ஆதரவு கொடுத்தோம்' எனவும் தெரிவித்தார். நேற்று முன்தினம் அவருக்கு ஓர் போன் கால், ' உங்கள் அமைப்பின் லெட்டர் பேடை எடுத்துக் கொண்டு தலைமை அலுலலகம் வாருங்கள்' எனக் கூறியுள்ளார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். உடனே மகிழ்ச்சியோடு சென்றவருக்கு, இரண்டு ஐநூறு ரூபாய் கட்டுக்களைக் கொடுத்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என எண்ணிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அதிலும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் குறைந்திருக்கிறது. உடனே, பணக்கட்டுகளை அ.தி.மு.க நிர்வாகிகளிடமே திருப்பிக் கொடுத்தவருக்கு, உழவர் உழைப்பாளர் சங்கத்தின் லெட்டர் பேடு அறிக்கையை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியோடு ஊர் திரும்பியிருக்கிறார் மணிகண்டன்.

 
இதைப் பற்றி நம்மிடம் பேசிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெட்டர் பேடு சங்கங்கள் பெரும்பாலும் சாதியை முன்னிறுத்தி செயல்பட்டு வருபவைதான். இவர்கள் குறிப்பிடும் சங்கத்தின் பெயரே அதிர வைக்கும் அளவுக்கு இருக்கும். உதாரணத்திற்கு, கம்யூனிஸ்ட் ஜீவா என்ற பெயரில் எல்லாம் சங்கம் வைத்திருக்கிறார்கள். இந்த சங்கங்களுக்கு உள்ள ஓட்டு வலிமையைப் பொறுத்து ஒரு லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரையில் பணம் கொடுக்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கு 307 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்தக் கட்சிகளின் பெயர்களை எழுதி முடிக்கவே ஒரு நாள் ஆகிவிடும். இவர்களுக்கு தலா ஒரு லட்சம் என கணக்குப் போட்டால்கூட மூன்று கோடி ரூபாய் வருகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுக்கும் அமைப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிவிட்டது. ஆளுங்கட்சியாக இருப்பதால் பணத்தை கணக்கில்லாமல் கொடுப்பார்கள் என்பதுதான் பிரதான காரணம். இதுதவிர, தொகுதிக்குள் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும்போது, அங்கும் தனியாக கவனிக்கப்பட்டுவிடும். இதில், பெரும்பாலான சங்கங்களுக்கு அலுவலகமே கிடையாது. வீட்டு முகவரியில்தான் இயங்குகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.கவில் எப்போதுமே நடக்கும் பணப்பரிவர்த்தனைதான் இது. தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும்" என்றார்.

தமிழ்நாட்டில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் பல கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இவர்களுக்கு ஐம்பது கோடி ரூபாய் வரையில் பணத்தை செலவு செய்கின்றன பிரதான கட்சிகள். இவர்களின் மூலதனமே வெறும் லெட்டர் பேடு மட்டும்தான். 'இந்தப் பணமும் ஆணையத்தின் செலவுக் கணக்குகளுக்குள் வருமா?' என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.

-ஆ.விஜயானந்த் விகடன்.com

கருத்துகள் இல்லை: