வியாழன், 5 மே, 2016

பெண் பத்திரிகையாளர் பூஜா திவாரி தற்கொலை/ கொலை... மூன்று டாக்டர்கள் மீது சந்தேகம்


அரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா? என்று ‘ஸ்கேன்’ செய்துபார்த்து தெரிவிக்கும் வைத்தியசாலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், பணத்துக்காக ஆசைப்பட்டு, சட்டமீறலான இந்த காரியத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தனியார் வைத்தியசாலைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த வைத்தியசாலை நிர்வாகத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்தும் நோக்கத்தில் இங்குள்ள பெண் பத்திரிகையாளரான பூஜா திவாரி என்பவர் துப்புதுலக்க தொடங்கினார்.

அந்த வைத்தியசாலையின் வைத்தியர்களை நேரில் சந்தித்த பூஜா, வயிற்றில் வளரும் கரு ஆணா, பெண்ணா? என்ற விபரத்தை அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிப்படையாக தெரிவித்து வருவதற்கான ஆதாரங்களை திரட்டினார்.
இந்த உண்மை தெரியவந்ததும் அவர்மீது மேற்படி வைத்தியர்கள் வழக்கு தொடர்ந்தனர். பூஜாவை கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டிவந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, பூஜாவை அவர் பணியாற்றிவந்த பத்திரிகை அலுவலகம் வேலைநீக்கம் செய்தது. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பூஜா, நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த நிலையில், தனது சகோதரியின் மரணத்துக்கு மேற்படி வைத்தியர்தான் காரணம் என்று பூஜாவின் சகோதரர் நேற்று பொலிஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், பூஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக வைத்தியர் அனில் கோயல், அவரது மனைவி வைத்தியர் அர்ச்சனா கோயல் மற்றும் வைத்தியர் தாவால் ஆகியோர்மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  புதியதலைமுறை.com

கருத்துகள் இல்லை: