புதன், 4 மே, 2016

படவிமர்சனம்: கோமளவல்லி வீரத்துடன் பேச பேச அமைச்சர்கள் எல்லாம் வெயிலில் சுருண்டு ஒவ்வொருவராக...

கடைசி வரைக்கும், காட்டை தனது ஆதிக்கத்தில் வைத்திருக்க நினைக்கும் ராணிக்கு ஏற்படும் திடீர் சறுக்கலும், அதை சமாளிக்க அவர் படும் பாட்டையும், கொஞ்சம் கலாட்டாவாக சொல்லியிருக்கும் படம் தான், 'காட்டு ராணி கோட்டையிலே'.
'செய்வீர்களா... செய்வீர்களா...' என்ற உறுமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும், அந்த காட்டிற்குள் செல்ல, ஒரு கதவு திறப்பதாக படம் துவங்குகிறது.ஐவர் படையினர், பல்லக்கில் ராணியை சுமந்து கொண்டு வர, 'காட்டு ராணி தோட்டத்திலே கதவுகள் உண்டு - இங்கு காவல் காக்க எங்களை தவிர யாரு உண்டு' என, படை வீராங்கனைகள் கலர்மதி, கோகுலமதி, 'கோரஸ்' ஆக பாடும் காட்சிகள், ஆச்சரியம் கலந்த ரசனை. எதிரிகள் யாருமே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த ராணியின் கோட்டைக்குள் ஒற்றன் நுழைகிறான். 'காட்டை கைப்பற்ற, எதிரி நாட்டு அரசர்கள் காட்டுக்குள் புகுந்து விட்டார்கள், மகாராணி' என அவன் அபாயச் செய்தி வாசிக்க, அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன், படம் வேகம் எடுக்கிறது.


படை பரிவாரங்களுடன் ராணி, போர் தந்திரங்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், 'எதிரிகளை பாட்டு பாடியே விரட்டி அடிக்கலாம்' என கூறியபடியே, உள்ளே நுழைகிறார், அமைச்சர் சத்தம் புஷ்பநாதன். சபாஷ் என ராணி சத்தமிட, பரபரப்பு தொற்ற, படம் இடைவேளையில் முடிகிறது.

அடுத்த காட்சியிலேயே, 'குனிந்த கும்பிடும், கொய்யாக்கா வாயில் பொய் சிரிப்பும், சட்டை பைக்குள் தலைவி அட்டையும் காணப் பெற்றால், அமைச்சர் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே...' என, பாடிக் கொண்டே அய்யகோ தேசிகர் என்ட்ரி ஆகும் காட்சிகள் செம காமெடி.
'அய்யகோ சரிவர மாட்டார்... அவர் பாட்டு எடுபடாது... எதிரிகளை மாய வலையில் வீழ்த்த, மோகினி கும்தாவை கொண்டு வரலாம்' என அரசவை புலவர் பீப்பியஸ், ஒரு ஐடியா சொல்ல, ராணி புன்னகைக்கிறார்.

'அர்ஜுனா... அர்ஜுனா... நான் ராணி கட்சி அர்ஜுனா - நம்புடா... நம்புடா... இனி மச்சான்ஸ் காடு நம்புடா...' என்ற கவர்ச்சி பாடலுடன் கும்தா களமிறங்குகிறார்.

'கும்தலக்கடி கும்தாவாம்... எதிரிங்க எல்லாம் சும்மாவாம்...' என, அமைச்சர்களும், படை தளபதிகளும் கூட சேர்ந்து பாட, ராணி குலுங்கி சிரிக்கிறார்.'எதிர் தரப்பில் சிக்பூ, சிக்மா போன்ற பல மோகினி கள் இருக்க, நாம், ஒரே ஒரு கும்தாவை கொண்டு எப்படி சமாளிப்பது' என, ஒற்றர் ஒருவர், ராணி காதை கடிக்க, ராணி கவலை கொள்கிறார்.

இதற்கிடையே, 'இன்னொரு ஐடியா இருக்கு' என, அமைச்சர் காட்பாடி கந்தசாமி சொல்ல, 'யாருமே ஆணியை பிடுங்க வேண்டாம்' என, ராணியே கிளைமாக்ஸ் ஆட்டம் ஆடுகிறார்.
எதிரிகளை வீழ்த்த அவர் வீரவசனம் பேச, அதைக் கேட்டு அவரது படை வீரர்கள் எல்லாம் வெயிலில் சுருண்டு விழுந்து இறக்கின்றனர்.

இதனால், ராணி அப்செட். அன்றிரவே, 'அறிக்கை ஒன்று இருக்கு... எதிரிகளை வீழ்த்தும் ஆயுதம் அது' என, அசரீரி ஒன்று கேட்கவே, ராணி வாளை இரண்டு முறை வீசி, 'என் கண்ணுக்கு எட்டிய துாரத்தில், எனக்கு எதிரியே இல்லை' என சத்தமாக பேசும் காட்சிகளில், காட்டை கிராபிக்ஸில் சுழல வைத்திருப்பது மிரட்டல்.

இறுதி ஆட்டத்தில், ராணி காட்டை தக்க வைத்தாரா; எதிரிகள் கைப்பற்றினரா என்ற கேள்விக்குறி யுடன் படத்தின் முதல் பாகம் முடிகிறது. அடுத்த பாகம், ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவரும் என்ற கார்டு காட்டப்படுகிறது.

எஸ்.விவேகானந்தன், சென்னை  தினமலர்.com

கருத்துகள் இல்லை: