வியாழன், 5 மே, 2016

சரத்குமார் :அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.

கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதால் அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்று சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், ராமையன்பட்டி, நெல்லை டவுன் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஆட்சியில் அமர்த்த தயாராகி விட்டார்கள் கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அறிவித்த 174 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த 185 திட்டங்களுக்கு செயல்முறை வடிவம் கொடுத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.


எனவே அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள். 

சந்தர்ப்பவாத கூட்டணி

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்படும் என்றனர். இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. சூரிய ஒளி மின்சாரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் தரையில் மின்கம்பிகள் பதிக்கப்படும். சுயநிதி கல்லூரிகளில் படிக்கின்ற தலித் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம், உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள். இவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. அவர், அ.தி.மு.க.வை குறை கூறுகிறார்.

தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியதே கருணாநிதிதான். அவர் தற்போது மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று கூறுகிறார். அவரால் அது முடியாது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் சொன்னதை நிச்சயம் செய்வார். 

விஜயகாந்த்

மக்கள் நல கூட்டணியின் சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. முதல்-அமைச்சர் வேட்பாளருக்கு உரிய இலக்கணம் அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட அவரிடம் நாட்டிற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தக்கூடிய தொலைநோக்கு பார்வையை எப்படி எதிர் பார்க்க முடியும். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மக்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டு வருவதில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படக்கூடியவர் ஜெயலலிதா. எனவே தமிழகம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: