சனி, 7 மே, 2016

மோடியின் ஆட்சி இந்தியாவுக்கு நல்லதல்ல...அருண் ஷோரி( முன்னாள் பாஜக மத்திய அமைச்சர்) கடும் விமர்சனம்


பிரதமர் நரேந்திர மோடி தன்னை மட்டும் முன்னிறுத்தி தனிநபர் அரசை நடத்துகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் செளரி குற்றம்சாட்டியுள்ளார்.
 வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் செளரி, சமீபகாலமாக பாஜகவின் செயல்பாடுகளில் இருந்து விலகியுள்ளார்.
 இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 மக்கள் அளித்த மிகப்பெரிய வாய்ப்பை மோடி வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமராக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பொருள்போல மக்களைப் பயன்படுத்துகிறார்.

 தாய்மதம் திரும்புதல், காதல்-ஜிஹாத், மாட்டிறிச்சைக்குத் தடை, விருதுகள் திருப்பி அளிக்கப்பட்ட விவகாரம், தேசவிரோதக் குற்றச்சாட்டு, பாரதமாதாவுக்கு ஜே கோஷம், மாணவர்கள் போராட்டம் போன்ற பிரச்னைகள் மத்திய அரசால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை. பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
 உத்தரகண்ட், அருணாசலப் பிரதேசம் ஆகிய காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களில் நிலைமையை மோசமாக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தது தவறு. இதனை பாஜக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது.
 வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான அம்சமான பாகிஸ்தானுடனான உறவை மோடிக்கு கையாளத் தெரியவில்லை. பாகிஸ்தான் தரப்பு இந்தியாவை முட்டாளாக நோக்கும் வகையில் மோடியின் செயல்பாடுகள் உள்ளன. சீனாவுடனான உறவிலும் அவரிடம் தெளிவான பார்வையில்லை.
 வரி விதிப்பு விவகாரம், பொருளாதாரக் கொள்கை, வங்கிகளின் பிரச்னை போன்றவற்றில் அரசு பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு வருகிறது. மோடி தான் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி தனிநபர் அரசை நடத்துகிறார். இது இந்தியாவுக்கு நல்லதல்ல. மோடியின் செயல்பாடுகள் சுயநலமிக்கவையாக உள்ளன. அதிபர் ஆட்சி முறையை அவர் செயல்படுத்தி வருகிறார் என்றார் அருண் ஷோரி. தினமணி.com

கருத்துகள் இல்லை: