வியாழன், 5 மே, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளராக Donald Trump !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து டெட் குரூஸ் திடீரென விலகினார். இதனால் டொனால்டு டிரம்ப் கட்சியின் உத்தேச வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சியில் லாரியின் வாய்ப்பும் பிரகாசம் ஆக உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாகாணங்களில் நடந்து வருகின்றன. இண்டியானா மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார். அவர் 52 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். டெட் குரூஸ் தோல்வி அடைந்தார்.


டெட் குரூஸ் விலகல்

இந்த தோல்வியை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு கடும் போட்டியை அளித்து வந்த டெட் குரூஸ் போட்டியில் இருந்து திடீரென விலகினார். 

இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, “பாதை முன்கூட்டியே அடைக்கப்பட்டு விட்டது. வாக்காளர்கள் மற்றொரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டனர். எனவே கனத்த இதயத்துடன் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, பிரசாரத்தை நிறுத்திக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

உத்தேச வேட்பாளர்

டெட் குரூஸ் விலகலை தொடர்ந்து குடியரசு கட்சியின் தேசியக்குழு தலைவர் ரெய்ன்ஸ் பிரிபஸ், “ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளர்” என அறிவித்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், “ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளர் என அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்துள்ள கவுரவம். நமது கட்சியை ஒற்றுமைப்படுத்தவும், லாரி கிளிண்டனை தோற்கடிக்கவும் உரிய தருணம் வந்து விட்டது” என கூறினார்.

பாராட்டு

மேலும் டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகியதை அவர் பாராட்டினார். அப்போது அவர், “நான் டெட் குரூசை பாராட்டுகிறேன். அவர் கடினமான, அருமையான போட்டியாளர்” என குறிப்பிட்டார். ஆனால் இண்டியானா மாகாண தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். 

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு டிரம்ப் 1237 பிரதிநிதிகள் வாக்குகளை பெற்றாக வேண்டும். அவர் இதற்கு இன்னும் 190 ஓட்டுக்களை பெற வேண்டி உள்ளது. இன்னும் சில மாகாணங்களில் வேட்பாளர் தேர்தல் நடைபெற உள்ளதால் அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவதும் உறுதியாகி விட்டது.

ஜனநாயக கட்சி நிலவரம்

ஜனநாயக கட்சியை பொறுத்தமட்டில் இண்டியானா மாகாணத்தில் நடந்த தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார். லாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவினார். ஆனால் இந்த தோல்வி அவரை எந்த விதத்திலும் பாதிக்காது.

அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகள் ஆதரவை பெற வேண்டும். லாரி 2,202 பிரதிநிதிகள் ஆதரவை பெற்று விட்டார். அவர் இன்னும் 181 பிரதிநிதிகள் ஆதரவை பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவருக்கு போட்டியாக உள்ள பெர்னி சாண்டர்ஸ் 1,400 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். எனவே லாரி கிளிண்டன், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவது உறுதியாகி விடும். dailythanthi.com

கருத்துகள் இல்லை: