வெள்ளி, 15 ஏப்ரல், 2016

இந்த "தெறி"யை பார்த்து நிஜமாகாவே அரண்டு போனதாக கிசு கிசு

விகடன்.com :பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். கலைஞர் வெளியே வருகிறார். அவரிடம், ""மதுவிலக்கை படிப்படியாகத்தான் குறைக்க முடியும் என்று தீவுத்திடலில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? 
முழுமையான மதுவிலக்கை உடனடியாகக் கொண்டு வர முடியாது என்கிறாரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' எனக் கேட்கிறார்கள். ஏப்ரல் 9-ந் தேதி இரவு அவரிடம் கேட்கப்பட்டதும், ""எல்லாக் கேள்விகளுக்கும் நாளை மாலை விடை கிடைக்கும்'' என்கிறார் கலைஞர்.
அதுதான் அவர் வெளியிட்ட டீசர். மெயின் பிக்சரைப் பார்க்க ஏப்ரல் 10-ந் தேதி அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் நிறைந் திருந்தது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட, பேராசிரியர் பெற்றுக் கொண்டார். பக்கத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள். முதல் நாள் சொன்னதுபோலவே பல கேள்விகளுக்கும் அதில் பதில் இருந்தது.


முதல் கேள்வி, மதுவிலக்கு சம்பந்தப்பட்டது. “தமிழ்நாட்டில் மதுவிலக்கு’’ என்று கலைஞர் சொன்னதும் ஒட்டுமொத்த அரங்கிலும் -குறிப்பாக பெண்களிடமிருந்தும் எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது. அவர்களை நோக்கி 5 விரல் காட்டிய கலைஞர், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்பதில் தொடங்கி, டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாற்று வேலை வரை விளக்கினார். அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பலவும் பலத்த வரவேற்பைப் பெற்றன.
மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தில் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் சாராம்சங்கள் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்தன. டி.ஆர். பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் வி.பி.துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, தங்கம் தென்னரசு,   மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ, பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோரும் இடம் பெற்று, ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த உதவினர்.இலவசங்களைப் பெருமளவு தவிர்த்து, அனைத்து தரப்பு மக்களுக்குமான வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்திருக்கிறது தி.மு.கவின் தேர்தல் அறிக்கை என்கிறார்கள் பொருளா தாரத் துறையினர். நேரடி மற்றும் மறைமுகமாக 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, எப்படி இந்த வாக்குறுதிகளை தி.மு.க.நிறைவேற்றும் என்ற விமர்சனமும் வெளிப்படுகிறது.

(பொருளாதார ஆய்வாளர் நரேன் ராஜகோபாலனின் பதிவு தனியாகத் தரப்பட்டுள்ளது) விவசாயத்துக்கு தனி பட்ஜெட், நம்மாழ்வார் பெயரில் இயற்கை  வேளாண்மை ஆய்வு மையம், விவசாயக் கடன் ரத்து, நீர்ப்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம், நெசவாளர் களுக்கு ஜவுளிப் பூங்கா, கல்விக்கடன் ரத்து, மதுரை முதல் தூத்துக்குடி வரையும் சென்னை முதல் ஓசூர் வரையும் தொழிற்சாலைகள் நிறைந்த நெடுஞ்சாலை, அனைத்து நாட் களிலும் இயங்கும் ரேஷன் கடைகள், விண்ணப்பித்த பதினைந்து நாட்களில் ஸ்மார்ட் வடிவ ரேஷன் கார்டு,  மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை, ஊழல் பற்றிய விசாரணைக்கான லோக் ஆயுக்தா சட்டம், அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள சேவை உரிமைச் சட்டம், மதுபானக் கடைகள் இருந்த இடங்களில் விரிவுபடுத்தப்பட்ட உழவர் சந்தைகள், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 7 குறைப்பு உள்பட மொத்தம் 501 வாக்குறுதிகளை அளித்துள்ளது தி.மு.க. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தனி தேர்தல் அறிக்கையும் கூடுதல் ஸ்பெஷல்.2006 தேர்தலின் கதாநாயகனாக அமைந்தது தி.மு.கவின் தேர்தல் அறிக்கை. இந்த முறை "சூப்பர் நாயகன்' என்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க இதனை எதிர்பார்க்கவில்லை. கார்டன் தரப்பிடம் பேசியபோது, "விவசாயக் கடன் ரத்து குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க இருந்தார் ஜெ. அப்போதைய சூழலில் தவிர்த்து, தேர்தல் அறிக்கையில் வெளியிட நினைத்தோம். தி.மு.க முந்திக் கொண்டது. நாங்கள் வைத்திருந்த பல திட்டங்களை தி.மு.க முந்திக்கொண்டுவிட்டது'' என்கிறார்கள் அதிர்ச்சி விலகாமல். கூட்டணி அமைப்பது உள்பட பல விஷயங்களில் கோட்டை விட்ட தி.மு.க.வினரின் கைகளில் தேர்தல் அறிக்கை எனும் ஆயுதத்தைக் கொடுத்து ஆளுந்தரப்புக்கு ஷாக் தந்திருக்கிறார் கலைஞர்.

-ஈ.பா.பரமேஷ்வரன்
படம்: எஸ்.பி.சுந்தர்

கருத்துகள் இல்லை: