புதன், 13 ஏப்ரல், 2016

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயின் 15 லட்சம் ரொக்கம் நகை களவு போனது



பத்து ரூபாய் நோட்டை கீழே போட்டு பழம் பெரும் நடிகை ராஜஸ்ரீயின் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் நூதன முறையில் கொள்ளை அடித்துச்சென்று விட்டான் பலே திருடன். கொள்ளையனைப் பிடிக்க 2 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயக நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ, வயது 72. இவர் சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான நகைகளை தி. நகர் பிரகாசம் தெருவில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று பகலில் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்தார். வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்ட ராஜஸ்ரீ, வங்கி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி உட்கார்ந்தார்.

நகைகள் மற்றும் பணத்தை ஒரு பையில் போட்டு, காரின் பின் சீட்டில் வைத்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கார் அருகில் சில 10 ரூபாய் நோட்டுகளை வீசினார். அந்த ரூபாய் நோட்டுகளை, உங்களுடையதா? என்று பாருங்கள் என்று நடிகை ராஜஸ்ரீயிடம் கேட்டார்.
ரூபாய் நோட்டுகளை பார்த்த ராஜஸ்ரீ, காரை விட்டு கீழே இறங்கினார். அருகில் சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை குனிந்து எடுத்தார். அந்த நேரத்தை பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளை வீசிய மர்ம ஆசாமி, காரில் நகைகள், மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.

 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு, காரில் ஏறிய நடிகை ராஜஸ்ரீ, பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான், தான் மோசம்போன விஷயம் அவருக்கு தெரியவந்தது. கொள்ளை போன நகைகளில் தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தன. வைரதோடு, வைர நெக்லஸ், தங்க சங்கிலி, வைர கைக்கெடிகாரம் போன்றவை இருந்ததாக தெரிகிறது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. நடிகை ராஜஸ்ரீ, உடனடியாக தனது மகனுடன் வந்து, பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அண்மையில் கின்னஸ் சாதனை விருது கிடைத்தது. அதற்காக பழம் பெரும் நடிகர், நடிகைகள் சார்பில் ஒரு விழா நடக்க உள்ளது என்றும், அந்த விழாவில் கலந்து கொள்ளும்போது தான் இந்த நகைகளை அணிந்து செல்ல, வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்ததாகவும், ராஜஸ்ரீ போலீசாரிடம் தெரிவித்தார். பாரம்பரியம் மிக்க பழங்கால நகைகள் பறிபோய் விட்டதே, என்று அப்போது அவர் கண் கலங்கினார்.

ராஜஸ்ரீ அளித்த புகாரின் பேரின் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில், கூடுதல் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாண்டிபஜார் பகுதியில் அடிக்கடி இதுபோல் கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

நடிகை சத்தியபிரியாவும் இதுபோன்ற சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்துள்ளார். குற்றப்பிரிவு போலீசில், திறமையான, நேர்மையான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த நபர், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளைச்சம்பவம் நடந்த பிரகாசம் தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: