புதன், 13 ஏப்ரல், 2016

கேடுகெட்ட நடுநிலை! அதிமுகவுக்கு போகிறவர்கள் கொள்கை மறவர்கள்.......நடுநிலையாளர்கள் போர்வையில் போயஸ் பீ டீம்

சுப.வீரபாண்டியன்:
சில நாள்களுக்கு முன், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளரும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பொண்ணுப் பாண்டி இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலிருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில், ஒரு பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. உறுப்பினராகச் சேர்ந்து விட்டார். அவர் பொதுவுடமைக் கட்சியில் நெடுநாள் உறுப்பினர். அவருடைய தொலைபேசி கூட, "இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா..." என்றுதான் பாடி அவரை அழைக்குமாம்.
அப்படிப்பட்டவர் திடீரென்று கட்சி மாறி விட்டார்.
உடனே அவர் எவ்வளவு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு கட்சி மாறினார் என்று நம் வைகோ சொல்லி விடுவார் என்று எதிர்பார்த்தேன். எல்லோருக்கும் எவ்வளவு பணம் பரிமாறப்படுகிறது என்பதைக் கணக்கிடும் அதிகாரி அவர்தானே! ஆனால் இம்முறை அவர் வாயே திறக்கவில்லை.
யாரேனும் தி.மு.க. பக்கம் சென்றால் மட்டும்தான் அந்தக் கூக்குரல்கள் எழும் போலிருக்கிறது. அண்மையில் பீட்டர் அல்போன்ஸ் த.மா.கா..விலிருந்து விலகியவுடன் கூட அப்படி ஒரு குரல் எழுந்தது. தந்தி தொலைக்காட்சியில் உரையாடிய விடியல் சேகர், பீட்டருக்கு எவ்வளவு விலை பேசப்பட்டதோ என்றார்.
மனசாட்சி உள்ள எவருக்கும், பணத்துக்கு விலை போகக் கூடியவர் அல்லர் பீட்டர் என்று தெரியும். ஆனாலும் விடியல் சேகர் ஏன் அப்படிச் சொன்னார்? "இன்றையத் தேர்தலின் கதாநாயகன் கலைஞர்தான்" என்று பீட்ட்டர் சொல்லி விட்டார் அல்லவா! உடனே சேற்றை வாரி இறைக்க வேண்டியதுதான்.

யார் வேண்டுமானாலும் அ. தி.மு.க.விற்குப் போகலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. அவர்கள் எல்லோரும் காசுக்கு ஆசைப்பட்டுப் போகின்றவர்கள் இல்லை. அவர்கள் கொள்கை மறவர்கள். ஆனால் தி.மு.க. பக்கம் சென்றுவிட்டால், விலை போகின்றவர்கள் ஆகி விடுவார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் ஒரே மாதிரி நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்கின்றவர்களை எல்லாம் கவனித்துப் பாருங்கள். இரண்டு எதிர்ப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரியும்.

 "நடுநிலையாளர்" தமிழருவி மணியன் தன் இதழில், "அ.தி.மு.க. ஓர் அரக்குக் கோட்டை, தி.மு.க. காகிதப் புலி" என்று எழுதுகிறார். இதுதான் இவர்களின் கேடுகெட்ட நடுநிலை.   subavee.com/

கருத்துகள் இல்லை: