சேலம்: வாகன சோதனை என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரின்
சட்டையைப் பிடித்து காவலர் இழுத்ததில், பின்னால் அமர்ந்திருந்த பெண்
சாலையில் தவறி விழுந்து, லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், களரம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் தனது மனைவி சுசீலாவுடன்
அப்பகுதியில் உள்ள ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து
வந்தார். வழக்கம்போல், கணவரும், மனைவியும் இன்று காலை தங்களது இருசக்கர
வாகனத்தில் பணிக்கு கிளம்பினர். நாகராஜன் வண்டியை ஓட்டிச் செல்ல, சுசீலா
பின்னால் அமர்ந்திருந்தார்.
Woman dies in Salem
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த
போக்குவரத்து போலீசார், நாகராஜனின் வாகனத்தையும் வழி மறித்துள்ளனர்.
அப்போது நாகராஜன் தனது வாகனத்தை சற்று தள்ளி நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால், அவர் தப்பிச் செல்வதாக நினைத்த போக்குவரத்து காவலர் பெரியதம்பி,
நாகராஜனின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நாகராஜனின் வாகனம் நிலை தடுமாறியது. பின்னால் அமர்ந்திருந்த சுசீலா
சாலையில் தவறி விழுந்தார். அவர் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஏறியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல்
அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுசீலாவின் உறவினர்கள் போலீசாரைக்
கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட
போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள்
வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் செல்வராஜ்,
பொதுமக்களையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தி, சம்பந்தப்பட்ட காவலர்
மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல்
கைவிடப்பட்டது.
இதனால் சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே விபத்திற்குக் காரணமாகக் கூறப்படும் போக்குவரத்து காவலர்
பெரியதம்பி, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
Read more at: /tamil.oneindia.com/
Read more at: /tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக