திங்கள், 3 நவம்பர், 2014

காங்கிரஸ் அதிரடி! வாசன் நீக்கம்! கட்சிக்கு எதிராக பேசியதால் நடவடிக்கை! இனி மீண்டும் சேர்க்க முடியாது!

சென்னை: புதிய கட்சி தொடங்கப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அறிவித்த சில மணி நேரங்களில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம். தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்ததால், வாசனை நீக்கியதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.  தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே. வாசன், புதிய கட்சியின் சின்னம் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து விலக வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டார். ஆனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் வாசனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். வாசன் தனிக்கட்சி தொடங்குவதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார். வழக்கமாக முக்கியத் தலைவர்கள் விலகும் நிலை வரும்போது காங்கிரஸ் தலைமை சமாதானம் பேசிப் பார்க்கும். ஆனால் வாசனை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: