சனி, 8 நவம்பர், 2014

இந்தியாவிலும் எபோலா பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன! அரசின் மெத்தன போக்கு?


நோய் கண்டவரிடம் தொடர்பில் இருப்பவர்கள் 28 நாட்களில் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும்
மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டில் லோபா என்ற மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு அந்த மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தலையில் மூட்டை, கையில் குழந்தைகள், வியர்வை வழிந்தோடும் முகத்தில் மரண பயம்! ஆனால், பக்கத்து கிராமத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். உள்ளே வாராதபடி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
“உள்ளே நுழைந்தால் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டுகிறார்கள், பக்கத்து கிராமத்து மக்கள். அவர்களும் அச்சத்தால் உறைந்திருக்கிறார்கள். தங்கள் ஊருக்கும் எபோலா பரவிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. ஓடிவந்தவர்களுக்கோ தங்கள் கிராமத்துக்குத் திரும்பிப் போக பயம். கிராமத் தெருக்களில் எபோலா தாக்குத லால் கைவிடப்பட்டவர்கள் நினைவற்றுக் கிடக்கிறார்கள். சில உடல்களும் கேட்பாரற்ற முறையில் ஆங்காங்கே கிடக்கின்றன.  எபோலா வெளியில் இருந்து வரவேண்டியதில்லை நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகலிலேயே உருவாக்கிவிடுவார்கள்

மருத்துவமனைகளின் நிலை…
அந்த ஊரின் சிறிய மருத்துவமனைக்கு வெளியே ‘இடமில்லை’ என்ற பலகை தொங்குகிறது. மருத்துவ மனையின் வெளியே நோயால் தாக்கப்பட்ட பெரிய கூட்டம் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட உறவினர்களைப் பற்றி அறிந்துகொள்ள, கவலையோடு நிற்கிறார்கள் பலர்.
ஊரின் இன்னொரு மூலையில் இருக்கும் மருத்துவ மனையோ கைவிடப்பட்டிருக்கிறது. அங்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் இறந்து கிடக்கிறார்கள். மருத்துவர்களும் தாதிகளும் மருத்துவமனையை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்களும் நோய்க்கு ஆளாகிவிட்டதால், எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. லைபீரிய அரசோ எபோலாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
மருத்துவ சேவை செய்துவந்த வெளிநாட்டு மருத்துவர்
களையும் செவிலியர்களையும் எபோலா விட்டுவைக்க வில்லை. அமெரிக்க மருத்துவர்களான கென்ட் பிரான்ட்லி, சாமுவேல் பிரிஸ்பேன், தமாஸ் ஈரிக் டங்கன் ஆகியோரும் இந்நோயால் பாதிக்கப்பட்டார்கள். மூவரும் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் சாமுவேல் பிரிஸ்பேன், ஈரிக் டங்கன் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்கள். நோயுடன் போராடி கென்ட் பிரான்ட்லி குணமடைந்துள்ளார். எபோலா நோய்குறித்த அச்சத்தை அகற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இறங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
எமனின் மறு உருவம்
எபோலா வைரஸ் பெரும்பாலும் மிருகங்கள், பறவைகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவுகிறதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்படும் பழந்தின்னி வவ்வால்கள், கொரில்லா குரங்குகள், புனுகுப் பூனைகள் போன்ற காட்டு விலங்குகளின் உடலிலிருந்து கசியும் நீர், மனிதர்கள் மேல் படுவதால் இந்நோய் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ப்ளு காய்ச்சல்போல இது காற்றில் பரவுவது அல்ல. ஆனால், தொட்டால் உடனடியாக ஒட்டிக்கொள்ளும் நோய்.
பாதிக்கப்பட்டவரின் வியர்வை, எச்சில், ரத்தம், கண்ணீர், சிறுநீர், மலம், அவர் உபயோகித்த உடை, படுக்கை, போர்வை, தலையணை போன்றவற்றின் மூலமாக இந்த நோய் ஒட்டிக்கொள்ள சாத்தியம் இருக்கிறது. நோய் கண்டவரிடம் தொடர்பில் இருப்பவர்கள் 28 நாட்களில் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும். 10 பேரில் 9 பேர் மரணிப்பது நிச்சயம். அத்தனை கொடூரமானது எபோலா.
லைபீரியா உள்ளிட்ட பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுகாதாரப் பழக்க வழக்கங் களில் மோசமான நிலையில் இருப்பதால், இங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கொள்ளை நோய் போன்ற கொடூரம்
13-ம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளில் பல கோடி மக்களைக் கொன்ற கொள்ளை நோயான பிளேக் போல, எபோலாவும் பரவக்கூடும் என்று அஞ்சுகிறது உலக சுகாதார நிறுவனம். இந்த நோயின் பயங்கரத்தை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 7,000 கோடியை இதற்காக ஒதுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவக் குழுக்கள், மருந்துகள், மருத்துவமனைத் தளவாடங்கள் போன்றவற்றை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது. பொருளாதார பலம் இல்லாத நாடு என்றாலும் இந்த விஷயத்தில் கியூபா காட்டிவரும் அக்கறை உலகளாவிய பாராட்டைப் பெற்றிருக்கிறது. எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடு களுக்கு 460 மருத்துவர்கள் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை அனுப்பி சேவை செய்துவருகிறது கியூபா.
தங்கள் நாடுகளுக்கு இந்தக் கொடிய நோய் பரவாமல் இருக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துகளை ரத்து செய்தன. ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தின் தனி வழியாகக் கொண்டுவரப்பட்டு, தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டனர். நோயின் அறிகுறி ஒரு பயணியிடம் இருந்தால்கூட, அந்த விமானத்தில் வந்த அத்தனை பேரும் சோதனைக்காக 28 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இந்தியாவின் அலட்சியம்
சில நாடுகள் இன்னும் இந்த நோயின் பயங்கரத்தை அறிந்துகொள்ளாமல் அசட்டையாக இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து நேரடியாக வரும் பயணிகளைச் சோதிக்க முடியும்; ஆனால், டிரான்சிட் வழியாக வரும் பயணிகள் இந்தச் சோதனையிலிருந்து விடுபட்டுப்போகலாம்.
எபோலா விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சுகாதார விஷயத்தில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மோசமான நிலையில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள், சாக்கடை, ஆறு, குளம், மழைக் காலங்களில் தெருக் களில் தேங்கி நிற்கும் தண்ணீர் என்று இவை அனைத்தும் எபோலாவுக்குச் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்பது போலாகும்.
உலகில் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படு பவர்கள் இந்தியர்களே. டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா பாதிப்புகளால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய்கள் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிய வில்லை. இந்த சுகாதாரக் கேடுகளுக்கு மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரியவில்லை.
“வெளிநாட்டுப் பயணிகள் நுழையும் மையங்களில் தீவிரப் பரிசோதனையை இந்தியா நடத்தவில்லை!” என்று ‘வேர்ல்ட் ஹெல்த்’ பத்திரிகை குறைகூறியிருக்கிறது. இந்தியாவில் நுழைந்தவுடனேயே குடியேற்றம் தொடர்பான நுழைவுத் தாளில் கேட்கப்படும் கேள்வி, முந்தைய வாரம் பயணம் செய்த நாடுகளைப் பற்றியதுதான். அண்மையில் ஒரு பயணி தன்னுடைய ஆப்பிரிக்கப் பயணத்தைக் குறிப்பிட்டிருந்தும், அவருடைய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பரிசோதித்த குடியேற்றத் துறை அதிகாரி அவரிடம் ஒன்றும் கேட்க வில்லை. “இந்தியா அசட்டையாக இருக்கிறது!” என்கிறது அந்தப் பத்திரிகை.
லைபீரியா பெரிய அளவில் இந்தியாவுக்கு மரங்களை ஏற்றுமதி செய்துவருகிறது. அதனால், இந்திய வணிகர் கள் அங்கு அடிக்கடி போய்வருகிறார்கள். இந்தப் பயணிகளின் ஆரோக்கிய நிலையைக் கணிக்க விமான நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் யாருமில்லை என்று கூறப்படுகிறது.
சுனாமியாக மாறும்
எபோலா வைரஸை முதலில் கண்டறிந்த மருத்துவர் பீட்டர் பியோட் இன்னொரு எச்சரிக்கையும் விடுக்கிறார். “இந்த நோய் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டால், இதை அங்கு நிர்வகிப்பது பெரிய கஷ்டம். அதிகமான மக்கள் தொகை; எபோலா அனுபவம் இல்லாத மருத்துவ வட்டாரம்; உரிய சிகிச்சை பெறாத நோயாளிகள்; தயார் நிலையில் இல்லாத மருத்துவ மையங்கள்! இந்நிலையில், எபோலா சுனாமியாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.”
எபோலா உள்ளே நுழைந்துவிட்டால், வருடக் கணக்கில் அதோடு போராட வேண்டிவரும். எல்லாத் துறைகளும் அப்படியே ஸ்தம்பித்துவிடும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே, எபோலா விஷயத்தில் இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், விளைவு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமாக இருக்கும்.
- ஏ.வி.எம். ஹாஜா
சமூக ஆர்வலர். avmhaja2@gmail.com tamil.hindu.com 

கருத்துகள் இல்லை: