புதன், 5 நவம்பர், 2014

காப்புரிமை கொள்ளையர்களால் பறிபோன மஞ்சள் வேம்பு பாஸ்மதி வரிசையில் காந்தி காதி உற்பத்திக்களுமா?

The government has objected to the German company's attempt to use the khadi trademark for selling a range of Indian-origin products.புதுடில்லி : மகாத்மா காந்தியடிகள் என்றவுடன் நினைவுக்கு வரும் காதி துணிகள் மற்றும் காதி பொருட்களுக்கான, சர்வதேச வர்த்தக உரிமை போராட்டத்தில், ஜெர்மனி நாட்டுடன் மோதுகிறது இந்தியா. அந்தப் பொருட்களை சொந்தம் கொண்டாடும் ஜெர்மனி, அது போன்ற பொருட்களை முன்னரே, ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்து வைத்துள்ளதால், காதி பொருட்களுக்கான வர்த்தக உரிமை, இந்தியாவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்திய கிராமங்களில், காலம் காலமாக, பெண்களின் அழகு சாதன பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் மஞ்சளுக்கான வர்த்தக குறியீடு மற்றும் வர்த்தக உரிமை, நமக்கு கிடைக்கவில்லை; அதை, ஐரோப்பிய நாடு ஒன்று தட்டிச் சென்றுவிட்டது.அதுபோல, கிருமி நாசினியாகவும், தெய்வீக பயன்பாட்டிற்காகவும், இந்துக்கள் அதிகம் பயன்படுத்தும் வேம்பு எனப்படும், வேப்ப மரம் மற்றும் அதன் துணை பொருட்களுக்கான வர்த்தக உரிமையும், நம்மை விட்டு போய்விட்டது.விருந்துகளின் போது, பிரியாணியையும், இந்தியர்களையும் பிரிக்க முடியாத நிலை, காலம் காலமாக உள்ள நிலையில், பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பாசுமதி அரிசிக்கான வர்த்தக உரிமை மற்றும் வர்த்தக குறியீட்டை, நாம் விட்டுக் கொடுத்து விட்டோம்.


அந்த வரிசையில் இப்போது, காதி வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தியடிகள் துவங்கி, நம் தேச அரசியல் தலைவர்கள் பலரும், காதி துணிகளை அணிந்து வருகின்றனர்; காதி என்ற பெயரில், குடிசைகளில் தயாரிக்கப்படும் எளிமையான, உயர்ந்த குணம் கொண்ட சோப்புகள், ஷாம்புகள், எண்ணெய், மசாலா பொருட்கள் போன்றவற்றை, பலரும் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால், அந்தப் பொருட்களின் சர்வதேச வர்த்தக குறியீடு மற்றும் தனிப்பட்ட வர்த்தக காப்புரிமையை, இந்தியாவிடம் இருந்து ரகசியமாக தட்டிப் பறித்துள்ளன சில ஐரோப்பிய நாடுகள்.'காதி துணிகள் போன்ற துணி ரகங்களை, நாங்களும் தயாரிக்கிறோம்; அதனால் எங்களுக்குத் தான், அந்தப் பொருட்களின் விற்பனைக்கான தனிப்பட்ட வர்த்தக குறியீடு மற்றும் காப்புரிமை வழங்க வேண்டும்' என, ஜெர்மனி, ஸ்பெயின், ஹங்கேரி போன்ற நாடுகள் தெரிவித்து, இந்தியாவின் தனிப்பட்ட உரிமைக்கு எதிராக, ஐரோப்பிய யூனியனில் குரல் கொடுத்து வருகின்றன.

காதி பொருட்கள் உற்பத்தி மற்றும் அபிவிருத்திக்கான காதி வாரியம், மத்திய, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, சர்வதேச அளவில் இந்த பிரச்னையை கொண்டு சென்று, இந்தியாவின் தார்மீக உரிமையான, காதி துணிகள் மற்றும் காதி பொருட்களுக்கான தனி உரிமை, காப்புரிமை மற்றும் வர்த்தக குறியீட்டை பெற, மத்திய அரசு முயற்சித்து வருகிறது.எனினும், ஐரோப்பிய யூனியனில் வலுவான நாடுகளாக இருக்கும் இந்த நாடுகள், இந்தியாவின் கோரிக்கையை ஏற்குமா... காதிக்கான வர்த்தக குறியீடு உரிமை இந்தியாவுக்கு கிடைக்குமா... என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது:


காப்புரிமை துறை வல்லுனர்களில் ஒருவரான, ஷாம்நாத் பஷீர் என்பவர், இதுகுறித்து கூறியதாவது: இந்தியா தன் நிலைப்பாட்டை ஐரோப்பிய யூனியனில் கொண்டு செல்ல, அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. இந்த பொருட்கள், இந்தியாவில் எத்தனை ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் உள்ளது; அதன் கண்டுபிடிப்பு எவ்விதம் அமைந்தது... இந்தப் பொருட்களின் உற்பத்திக்கான அமைப்புகள், வாரியங்கள் எப்போது ஏற்படுத்தப்பட்டன என்பன போன்ற விவரங்களை, விளக்கமாக அளிக்க வேண்டும்.அந்தப் பொருளுக்கு ஏன் அப்பெயர் வந்தது... இந்திய காதியின் சிறப்பம்சம், அதற்காக உள்ள விசேஷ தன்மைகள் போன்றவற்றை குறிப்பிட்டு, பிற நாடுகளின் காதி பொருட்களுக்கான ஒப்பீட்டை வழங்கினால், காதிக்கான சிறப்பு வர்த்தக குறீயீடு மற்றும் காப்புரிமை, இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


125 சதவீதம் விற்பனை அதிகரிப்பு:


வானொலியில் பிரதமர் மோடி, கடந்த மாதம் 3ம் தேதி பேசும் போது, 'காதி துணிகளையும், பொருட்களையும் அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய மோடி, 'காதி பொருட்களை நீங்கள் வாங்குவதன் மூலம், ஏழை குடும்பம் ஒன்றில் ஒளி ஏற்றுகிறீர்கள் என அர்த்தம்' என, பேசியிருந்தார்.கடந்த ஞாயிறன்று, வானொலியில் பேசிய மோடி, 'என் அழைப்பை ஏற்று, ஏராளமானோர், காதி துணிகளை வாங்கி அணியத் துவங்கியுள்ளனர் என, தகவல் கிடைத்தது; இது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின் படி, காதி பொருட்களின் விற்பனை, 125 சதவீதம் அதிகரித்துள்ளது. நம் நாட்டின் இளைஞர்கள், சமுதாய அக்கறையுடன் நடந்து கொள்வதை இதன் மூலம் அறிய முடிகிறது' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: