இஸ்லாமிய தேசம்’ என்று சொல்லப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அநீதிகளை
எதிர்த்துப் போராடுகிறார்களோ இல்லையோ, வெளிநாட்டினரின் தலைகளைத்
துண்டிப்பதில்தான் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். சிரியாவில்
உள்நாட்டுப் போர்ச் செய்திகளைத் திரட்ட வந்த அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ்
ஃபோலே, ஸடீவன் சாட்லாஃப்ட், பிரிட்டன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட்
ஹெயின்ஸ், ஆலன் ஹென்னிஸ்கின் முதலானோரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கழுத்தைத்
துண்டித்துக் கொலை செய்தனர். பிணைக் கைதிகளுக்கு மட்டுமல்ல,
எதிர்ப்பாளர்கள் மாற்று இனத்தவர்கள் போன்றவர்களுக்கும் மரணம்தான் தண்டனை.
கடவுளின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகவும், கடவுளின் ஆட்சியை நிலைநாட்டவே
போராடுவதாகவும் சொல்லிக்கொள்ளும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஒவ்வொரு முறை
பிணைக் கைதிகளின் தலையைத் துண்டிக்கும்போதும், துண்டிக்கப்பட்டுத் தரையில்
வீழ்வது மனிதர்களின் தலைகள் அல்ல, மகத்தான ஒரு மார்க்கத்தின் மானமும்
மரியாதையும்தான்.
உண்மையான இஸ்லாம் எது?
வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டியுள்ள ஓர் அருள்நெறிதான் இஸ்லாம்.
பலரும் கருதுவதுபோல் இஸ்லாம் என்றாலே ‘ஜிஹாதும் பலதார மணமும் தலாக்கும்
தான்’ என்பது உண்மையல்ல. பிறப்பிலிருந்து இறப்பு வரை, மனிதர்களுக்குத்
தேவையான எல்லா வழிகாட்டுதல்களையும் குறைவின்றி நிறைவாக வழங்கியுள்ளது
இஸ்லாம். இந்த உன்னதமான வழிகாட்டுதலில் போர்களும் அடங்கும். போர்க்களத்தில்
பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்குறித்து இஸ்லாம் நிறையப் பேசியுள்ளது.
குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், துறவிகள் ஆகியோரைக் கொல்லக் கூடாது;
வயல் நிலங்களைப் பாழ்படுத்தவோ தீயிடவோ கூடாது; மரங்கள் போன்ற தாவரங்களுக்கு
ஊறு விளைவிக்கக் கூடாது; கால்நடைகளைக் கொள்ளையிடக் கூடாது; போர்க்களத்தில்
இறந்த எதிரி களின் உடல்களைச் சிதைக்கக் கூடாது; பிடிபட்ட கைதிகளைத்
துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் நிறைய
வழிகாட்டுதல் கள் உள்ளன. ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
பாதுகாப்பாகச் சேர்த்துவிடுங்கள்
எதிரிகளுடன் கடுமையான போர் நடந்துகொண்டிருந்த ஒரு சூழலில், எதிரிப் படையைச்
சேர்ந்த ஒருவர் இறைமார்க்கத்தை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் முஸ்லிம்
ராணுவத்தினரிடம் வந்தால், அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இதோ,
குர்ஆன் கூறுகிறது: “இணை வைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உங்களிடம்
(இறைவனின் வேதத்தைச் செவி யுறுவதற்காக) வந்தால் அப்போது இறைவனின் வேதத்தை
அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளியுங்கள். பிறகு, அவரை
அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்துவிடுங்கள்.” (குர்ஆன் 9:6) இந்த
வசனத்தின் இறுதிப் பகுதி அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியதாகும்: “பிறகு,
அவரை அவருடைய பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடுங்கள்.” அதாவது, அவர்
தமக்குப் பாதுகாப்பான இடம் என்று எந்த இடத்தைக் கருதுகிறாரோ அந்த இடம் வரை
அவரைப் பாதுகாப்பாகக் கொண்டுசேர்த்துவிட வேண்டும். இதுதான் இஸ்லாமே தவிர,
‘கிடைத்தான்டா எதிரி’ என்று தலையை வெட்டுவது ஒருபோதும் இறைமார்க்கம் ஆகாது.
பிணைக் கைதிகளை எப்படித் தண்டிப்பது?
பிணைக் கைதிகள் விஷயத்தில் நபிகள் நாயகம்(ஸல்) எவ்வாறு நடந்துகொண்டார்
என்பதையும் இந்த இடத்தில் அறிந்துகொள்வது மிகவும் பயன்தரும். ஹிஜ்ரி
இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற பத்ருப் போர் இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத்
தக்க ஒன்றாகும். மதீனாவில் நபிகளாரின் தலைமையில் ஓர் இஸ்லாமிய அரசு
உருவாகிக்கொண்டிருந்தது. அந்த அரசை முளையிலேயே கிள்ளியெறிய மக்காவிலிருந்து
குறைஷிகள் படை திரட்டிக்கொண்டு வந்தார்கள். அந்தப் போரில் முஸ்லிம்
வீரர்களின் மொத்த எண்ணிக்கையே முந்நூற்றுச் சொச்சம்தாம். இந்த வீரர்களும்
பெரும்பாலும் ஏழைகள், வறியவர்கள். போதிய ஆயுதங்களோ தளவாடங்களோ
இல்லாதவர்கள்.
ஆனால், மக்காவிலிருந்து படையெடுத்து வந்த வர்களோ ஆயிரத்துக்கும்மேல்.
எல்லோரும் முழு ஆயுதபாணிகளாக, குதிரைகள், ஒட்டகங்கள், அம்பு, வில், ஈட்டி
என்று அனைத்துப் போர்த் தயாரிப்பு களுடனும் வந்திருந்தனர்.
போர் மூண்டது. இஸ்லாத்துக்கு ‘வாழ்வா, சாவா’ என்ற போராட்டம். நபிகளார்
செய்த ஒரு பிரார்த்தனையிலிருந்து போரின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்:
“இறைவா, இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு நீ தோல்வியை அளித்தால், பிறகு
உலகில் அல்லாஹ் என்று உன் பெயரை உச்சரிப் பதற்குக்கூட யாரும் இருக்க
மாட்டார்கள்” போரில் நபிகளார் வெற்றிபெற்றார்.
இதில் முக்கியமான செய்தி, எதிரிப் படையைச் சேர்ந்த 70 பேர் பிணைக்
கைதிகளாகப் பிடிபட்டனர். இந்த இடத்தில்தான், கேடுகெட்ட இந்த ஐ.எஸ். பயங்கர
வாதிகள் வரலாற்றை ஆழ்ந்து படிக்க வேண்டும். பத்ருப் போரில் பிணைக்
கைதிகளாய் பிடிபட்ட 70 பேரையும் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.
பலதரப்பட்ட யோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு, நபிகளார் ஒரு
தீர்மானத்துக்கு வந்தார். அது என்ன தீர்மானம்? 70 பேரின் தலைகளையும்
துண்டித்து எறிந்துவிட வேண்டும் என்றா?
அதுதான் இல்லை. “பிணைக் கைதிகளில் யாருக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ
அவர்கள் ஒவ்வொருவரும் பத்து முஸ்லிம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க
வேண்டும்; எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் உரிய இழப்பீட்டுத் தொகையைச்
செலுத்திவிட்டு விடுதலை ஆகலாம்” என்று அறிவித்தார். அவ்வாறுதான் நடந்தது.
பிணைக் கைதிகள் முஸ்லிம் பிள்ளைகளுக்கு எழுதவும் படிக்கவும்
கற்பித்துவிட்டு விடுதலை பெற்று ஊர் திரும்பினார்கள், இஸ்லாத்தையும்
நபிகளாரின் அருஞ் செயலையும் புகழ்ந்தபடியே.
இதுதான் இறைத்தூதரின் வழிமுறை. இதுதான் இஸ்லாமிய நடைமுறை. இன்றைக்கும்கூட இந்த வழி முறை பின்பற்றத் தகுந்ததே.
முகமூடிக் கொள்ளையர்கள் போன்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின்
காட்டுமிராண்டித்தனத்துக்கும் இஸ்லாமியத் திருநெறிக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை. இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் நாம் சொல்ல விரும்புவது ஒன்றே
ஒன்றுதான்:
“அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள்.”
- சிராஜுல் ஹஸன், மூத்த இஸ்லாமிய இதழாளர்,‘சமரசம்’ இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்.
தொடர்புக்கு: siraj.azhagan@gmail.com tamil.hindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக