வெள்ளி, 7 நவம்பர், 2014

அம்மம்மா ஜெயலலிதா மாறவில்லை? சகாயம் விவகாரத்தில் அதிமுக அரசின் செயல்பாடுகள் Same Old Jeya!

கதிர் Kathir
ஜெயலலிதா போயஸ் தோட்டத்துடன் அன்றாட வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு, ஆட்சிக்கு தலைமையேற்க பன்னீர் செல்வத்தை நியமித்த பிறகும் அதிமுக அரசின் செயல்பாடுகள் எதுவும் மாறவில்லை என்பது மட்டும் தெரிகிறது. சகாயம் விவகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். தமிழகத்தின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த பொதுநல வழக்கு தொடரப்படுகிறது. உயர் நீதிமன்றம் மனுதாரர் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு, சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க ஆணையிடுகிறது. என்ன செய்திருக்க வேண்டும் பன்னீர் செல்வம் அரசு? நீதிமன்றத்தோடு இத்தனை காலமாக நடத்திய கண்ணாமூச்சி ஆட்டம் போதும். அதன் விளைவைத்தான் பெங்களூரில் பார்த்தோம்.
இனியாவது நீதிமன்றங்களோடு மோதும் போக்கை கைவிட்டு, அது சொன்ன மாதிரி சகாயத்தை அவர் பார்க்கும் பொறுப்பில் இருந்து விடுவித்து அரசாணை பிறப்பித்து, அவர் ஆய்வு நடத்த வழி விடுவோம் என்று தீர்மானித்து இருக்க வேண்டும். செய்யவில்லை. அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் போய் வாதிட்டது. சகாயத்துக்கு சகாயம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுதலா, என்ன? சகாயம்தான் ஆரம்பத்தில் கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் என்று பரவலாக நிலவும் நம்பிக்கையை நீதிமன்றம் பகிர்ந்து கொண்டது. அவ்வளவுதான். விஷயம் தெரிந்தவர் விசாரித்தால் தாமதம் தவிர்க்கலாம் என்ற ஏற்பாடு. அதைப்போய் நீதிபதிகளுக்கு உள்நோக்கம் இருப்பது போலவும் அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுவது போலவும் நினைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் போகலாமா? போயும் வேஸ்ட். உயர் நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று திருப்பி விட்டது. இங்கேயும் ஒரு மாதத்துக்கு மேல் தாமதித்து மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து குட்டு வாங்கி பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்தியிருக்கிறது.
 அரசாணை எதுவும் பிறப்பிக்காமலே சகாயத்துக்கு கூடுதல் பொறுப்பாக கிரானைட் ஆய்வை ஒப்படைத்தது அரசு. அந்த தகவலையே ரகசியமாக மதுரை கலெக்டருக்கு மட்டும் தெரிவித்தது. கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த நேரத்தில் அரசாணை பிறப்பித்து விட்டோமே என்று அவசரமாக ஒரு ஆணையின் நகலை தாக்கல் செய்தது. ஏன் இந்த ரகசியம்? மறைத்த பிறகு எதற்காக இந்த அவசரம்? அந்த ஆணையிலும்கூட சகாயத்தை அவர் வகிக்கும் தற்போதைய பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை. மேலும், தமிழக கனிம வளக் கொள்ளையை ஆய்வு செய்வார் என்பதற்குப் பதிலாக, மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் தொடர்பாக மட்டும் சகாயம் ஆய்வு செய்ய அரசு வட்டம் போட்டிருக்கிறது. எனினும் ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இதோடு அவமதிப்பு வழக்கை முடிக்கிறோம் என நீதிபதிகள் கூறிவிட்டனர்.  ஆனால் ஒரிஜினல் வழக்கு முடியவில்லை. அது விசாரணைக்கு வரும்போது, சகாயத்தின் ஆய்வு வரம்பை அதிமுக அரசு தன்னிச்சையாகச் சுருக்கி அரசாணை வெளியிட்ட விவகாரம் நிச்சயமாக விவாதத்துக்கு வரும். நாங்கள் ஒரு ஆணை பிறப்பித்தால் அதிலேயே நீங்கள் குறுக்கீடு செய்கிறீர்களா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது. இதுதான் ஆலோசகர்கள் அரசுக்கு காட்டும் வழி. நீதிமன்றங்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும் வழி. பொதுவாக நீதிமன்றங்கள் - கீழ் கோர்ட் தொடங்கி சுப்ரீம் கோர்ட் வரையிலும் - அரசுக்கு எதிராக சண்டை போடுவது போன்ற தோற்றத்தை எழுப்ப விரும்பாது. இரண்டுமே அரசியல் சாசன அதிகார அமைப்புகள் என்பது போக, அத்தகைய தோற்றம் எழுந்தால் மக்களுக்கு இரண்டு அமைப்புகள் மீதும் நம்பிக்கை குறைந்துவிடும் என ஒரு அச்சம் இருக்கிறது. தவிர, என்னதான் சுய அதிகார அமைப்பாக இருந்தாலும் சின்னச் சின்ன தேவைகளுக்குக்கூட அரசைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக அவை சும்மா வேடிக்கை பார்ப்பதாகவோ வேறுபக்கம் திரும்பிக் கொள்வதாகவோ அர்த்தமில்லை. சரியான நேரம் வரும்போது போட்டுப் பார்த்துவிட எந்த நீதிபதியும் தயங்குவதில்லை. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்த சொத்துக் குவிப்பு தனி நீதிமன்றம் கடைசியில் போட்டதல்லவா ஒரு போடு. ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அப்பீல் செய்தபோது உச்ச நீதிமன்றம் கேட்டதல்லவா ஒரு கேள்வி: ‘கீழ் கோர்ட்டிலும் ஸ்பெஷல் கோர்ட்டிலும் கேசை 18 ஆண்டுகள் இழுத்தடித்த நீங்கள், ஹைகோர்ட்டில் 20 ஆண்டுக்கு மேல் இழுத்தடிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?' ஜெயலலிதாவும் சரி அவரது நிழல் ஆட்சியாளர்களும் சரி, தெளிவாக உணர வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், 'இங்கு நடக்கும் எல்லாவற்றையும் எல்லாரும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்பதுதான். தவணை முறையில் தவறு செய்தாலும் மொத்தமாகத்தான் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். தவறு செய்பவர்களே மாறுங்கள். மாற்றம் ஒன்றே நிலையானது. உங்கள் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் அதை எதிர்பர்க்கிறார்கள். ரகசியம், ஒளிவுமறைவு போன்ற வார்த்தைகள் அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டிய காலகட்டம் வந்தாயிற்று என்பது அதிகார வர்க்கத்துக்கு உறைக்கும்போது நல்லது நடக்கத் தொடங்கும்!  முழு கட்டுரையும் படிக்க நாடுங்கள் /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: