வெள்ளி, 7 நவம்பர், 2014

சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியின் தேவை . உச்சநீதிமன்றம் சமுக நீதிக்கு எதிராக? ராமதாஸ் கருத்து ,


சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய  உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல்: ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931 ஆம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்தியா விடுதலை அடைந்தபிறகு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், உண்மையான சமூகநீதியை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரேவழி என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.அருந்ததி ராய் அவர்கள் குறிப்பிடுவது போல மேல்ஜாதினர்கள்தான் பெரும்பாலும்  நீதிபதிகளாக இருக்கின்றனர் . சிதம்பரம் நடராஜர் கோவிலை எல்லாவிதமான  சட்டங்களையும் மீறி சுசாமி போன்றவர்களின் துணையோடு உச்சநீதிமன்றமே தீக்ஷதர்கள்  கையில் தாரைவார்க்க முடியும்  என்றால் நீதிதுறையை  பற்றி  என்னதான்  சொல்வது ?

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு வகையான இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. வி.பி.சிங் முதல் மன்மோகன்சிங் வரை மத்தியில் பிரதமர்களாக இருந்தவர்களை சந்திக்கும்போதெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். 
2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை எனது தலைமையில்  பா.மக. நடத்தியது. அதில் பங்கேற்ற தேசியத் தலைவர்கள் அனைவரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தினார்கள். 

அதைத்தொடர்ந்து 24.10.2008 அன்று  பா.ம.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அப்போதும், அதன்பிறகும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய ஆட்சியாளர்கள் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில்  இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதி வாரியாக நடத்தப்படாத நிலையில், அந்த   தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. 
உச்சநீதிமன்றத் தீர்ப்பைவிட, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு  கூடுதல் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும்போது ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்பதை அறிந்து, அதன்படி இட ஒதுக்கீடு வழங்குவது தான் முறையானதாக இருக்கும். இல்லாவிட்டால், ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, அந்த வகுப்பில் பெரும்பான்மையாக உள்ள சாதியினரை புறக்கணித்து விட்டு, சிறுபான்மையாக உள்ள சமூகத்தினர் அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இது நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த அநீதியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனைவராலும் எழுப்பப்படுகிறது.

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது, அதை ஒழுங்குபடுத்துவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்பது முரண்பாடாக உள்ளது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான அமர்வு, ‘‘தமிழ்நாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும்’’ என்று தெளிவாக ஆணையிட்டிருந்தது. இவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு  தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான இந்தத் தீர்ப்பை குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட சாதாரண அமர்வு எந்த அடிப்படையில் வழங்கியது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், தனியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், இந்த கணக்கெடுப்பே சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிய சமூகநீதியாளர்களை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட மோசடியாகும். இதில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வகை செய்யப்படவில்லை என்பது தான் இந்த முடிவுக்கு காரணம் என்றால் அதுவும் சரியல்ல. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு வகைசெய்யும் விதத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர, அதில் உள்ள குறையை காரணம் காட்டி சாதிவாரிக் கணக்கெடுப்பை மறுப்பு செருப்புக்கு ஏற்ப கால்களை வெட்டும் செயலாகும்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் இந்த தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டையே ரத்து செய்யும் நிலை ஏற்படலாம். எனவே, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்தோ, வேறு சட்ட ஏற்பாடுகளை செய்தோ சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
nakkheeran,in

கருத்துகள் இல்லை: