செவ்வாய், 4 நவம்பர், 2014

டில்லி திரிலோக்புரியில் இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்க முயற்சி? மீடியாக்கள் அரசு விளம்பரத்திற்காக மௌனம்?

போலீஸ் கண்காணிப்பு விமானம் திரிலோக்புரிகிழக்கு டில்லியின் புறநகர் பகுதியில் அமைந்திருப்பது திரிலோக்புரி; தலித் மக்கள்  பெரும்பான்மையாக வாழும் பகுதி.
1976-ம் ஆண்டு எமர்ஜென்சியின் போது டில்லியின் அழகுக்கு இடையூறாக இருந்த சேரிகளை ஒழிக்க எண்ணினார் சஞ்சய் காந்தி. சுமார் 150 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 70,000 மக்கள் மத்திய டில்லியிலிருந்து பெயர்க்கப்பட்டு யமுனா நதிக்கரையில் அமைந்திருக்கும் திரிலோக்புரியில் குடியமர்த்தப்பட்டனர். இதன் பிறகு 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை காங்கிரஸ் அரங்கேற்றிய போது திரிலோக்புரிக்கு பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களும் அடைக்கலம் தேடி ஓடி வந்தனர். டில்லி அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியில் சிக்குண்ட மக்களுக்கு எப்போதும் அடைக்கலம் தந்து வந்த திரிலோக்புரி இன்று பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. கடந்த முப்பது வருடங்களாக பல்சமய நம்பிக்கை கொண்ட மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த திரிலோக்புரியிலிருந்து மக்கள் ஓட்டம் பிடித்த துயரம் கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதி வாரம் நடந்தது.
திரிலோக்புரி
மோடி டில்லியின் பிரதமராக செயல்படுவதன் அதிர்வை திரிலோக்புரி அன்று உணர்ந்தது. ஒரு கலவரத்துக்கு தேவையான சந்தர்ப்பச் சூழல் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வழிபாட்டுத்தலத்தை வைத்து சண்டை மூட்டப்பட்டது. திரிலோக்புரியின் ப்ளாக் 20-ல் அமைந்துள்ள மசூதியின் எதிரில் ஒரு தற்காலிக கோயில் முதலில் அமைக்கப்படுகிறது. மசூதி இருக்கும் திசை நோக்கி ஒலிபரப்பிகள் அலறவிடப்படுகின்றன. தற்காலிக கோயில் தானே என்ற சமாதானத்தில் முஸ்லிம்கள் அமைதி காக்கின்றனர். இந்த நிலையில் தற்காலிக கோயில் இனிமேல் அகற்றப்படாது என்று வதந்திகள் கசிய விடப்படுகின்றன. முஸ்லிம்களிடம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. தீபாவளி அன்று (அக். 23) ஊரில் கிடைத்த இலவச சாராயத்தை ஊத்திக் கொண்ட ‘இந்து’ தலித் இளைஞர்களும், முஸ்லிம் இளைஞர்களும் மோதிக் கொள்கின்றனர். முஸ்லிம் இளைஞர் ஒருவர் கோயிலை அசுத்தப்படுத்தியதாக ஒரு வதந்தி அந்த இரவு முழுவதும் திரிலோக்புரியை சுற்றி வருகிறது.
அக். 24-ம் தேதி ப்ளாக் 21-ல் இருக்கும் தனது இல்லத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய பா.ஜ.க.வின் சுனில் குமார் வைத்யா ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தை தடுக்க கல்யாண்புரி உதவி ஆணையர் ரோகித் மீனா முயன்றுள்ளார். கூட்டத்தின் முடிவில் சுமார் 600 இளைஞர்கள் சிறுசிறு கும்பலாக பிரிந்து கைகளில் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு முஸ்லிம்கள் வாழும் ப்ளாக் 20-ஐ முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் கொளுத்தப்பட்டன. இரண்டாவது அலையாக சனிக்கிழமையிலும் (அக். 25) வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள் தாக்குதலிலும் சுமார் 70 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இந்த வன்முறையை அடுத்து போலீசின் கைது படலம் ஆரம்பமானது. இந்துக்கள் தரப்பிலிருந்து சிலரையும், பெரும்பான்மையாக முஸ்லிம் இளைஞர்களையும் கொத்திக் கொண்டு போனது போலீஸ். கைதுக்கு அஞ்சி எஞ்சிய முஸ்லிம்கள் திரிலோக்புரியை விட்டு வெளியேறினர். தங்கள் தந்தை, மகன்கள் மற்றும் கணவன்களின் நிலை குறித்த ஏக்கப் பெருமூச்சில் இரவுகளை கடத்தினர் திரிலோக்புரியின் முஸ்லிம் பெண்கள்.
திரிலோக்புரியில் போலீஸ் கண்காணிப்பு விமானம்
திரிலோக்புரி வன்முறை அக்டோபரில் நிகழ்த்தப்பட்டாலும், அதற்கான விதை ஆகஸ்ட் மாதத்திலேயே ஊன்றப்பட்டது. ஆகஸ்ட் 17-ம் தேதி விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்கள் கைகளில் பட்டாக் கத்தி, காக்கி மட்டைகள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்தியுள்ளார்கள். அந்த கூட்டத்திலே பேசியவர்கள் இந்துக்களை எச்சரித்துள்ளனர். “முஸ்லிம்கள் வாழும் ப்ளாக் 15-ன் நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கையகப்படுத்தி இருக்கிறது அரசாங்கம். அதன் காரணமாக முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதியை விட்டு வெளியேறி, நீங்கள் வாழும் பகுதிக்கு வர இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்தால் உங்கள் பகுதியை கிரிமினல்களின் கூடாரமாக மாற்றி விடுவார்கள்” என்று எச்சரித்து விட்டு போய் உள்ளனர். விஸ்வ இந்து பரிசத்தின் இந்த பேச்சு குறிவைத்தது வால்மீகிகள் எனப்படுகின்ற தலித் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்திரையில் விரிந்த சதியின் கொலைக்கரங்கள் தெரியும் இந்த பிரச்சினையை மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் கவனமாக செய்திகளை வெளியிடுகின்றன ஊடகங்கள். திரிலோக்புரியில் இப்போது ஒரு மரண அமைதி நிலவுகிறது. இதனை அவசரமாக பகிர்கின்றன ஊடகங்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோவிலில் ஆரவாரம் நின்றபாடில்லை. போலிஸ் குவிக்கப்பட்டு இருப்பதால் நமாசுக்கு மட்டும் ஒலிபரப்பிகளை சற்று அணைத்து வைக்கின்றனர். (தன்னார்வக் குழு ஒன்று ஐம்பது பேர் கொண்ட அமன் கமிட்டியை அமைத்து மக்களிடம் ஒற்றுமைக்காக முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.) போலீசின் கண்காணிப்பில் அமைதியாக இருக்கிறது திரிலோக்புரி. இந்த அமைதி உங்களை சஞ்சலம் கொள்ள வைக்கவில்லையா?
- சம்புகன். vinavu.com

கருத்துகள் இல்லை: