திங்கள், 20 ஜனவரி, 2014

அட காங்கிரசில் டெபாசிட்டே பறி போனாலும் கூட. சின்னதாக செட்டிலாகி விடலாமே ! சீட் வாங்க அடிதடி ஆரம்பமாகி விட்டதாம்

சென்னை: ஊரை பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்... இது பழைய மொழிதான். ஆனாலும் இன்று வரை காங்கிரஸாருக்கு இது பாந்தமான, பொருத்தமான மொழியாகவும் இருக்கிறது. அப்படித்தான் இப்பவும் ஒரு சம்பவம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. யாருடன் கூட்டணி என்பதே இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி இருக்குமா என்பதும் தெளிவாகவில்லை. ஆனாலும் அதற்குள்ளாகவே சீட் வாங்க அடிதடி ஆரம்பமாகி விட்டதாம் காங்கிரஸில். எனக்கு சீட் கொடுங்க என்று பலரும் முண்டியடித்து தத்தமது கோஷ்டித் தலைவர்களிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனராம். ஆளே இல்லாத கடையில் யாருக்குப்பா இப்படி வேகம் வேகமா டீ ஆத்துறீங்க என்று ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவுக்கு ஆர்வக் கோளாறு அதீதமாக இருக்கிறதாம் காங்கிரஸ் வட்டாரத்தில்.
திமுகவுடன் கூட்டணி வரலாம் என்ற நப்பாசையில் பலர் இருந்தனர். சிலரோ திமுகவே வேண்டாம் என்று கூறி வந்தனர். பின்னர் பலர் தேமுதிகவுடன் சேரலாம் என்று ஆசைப்பட்டனர். இப்பவும் சிலருக்கு அந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் எதுவும் நடப்பதற்கான அறிகுறியே இல்லாத நிலைதான் இப்போது.காங்கிரசில் 
ஆனால் இப்போது காங்கிரஸ் வட்டாரத்திற்குள் செமத்தியான சத்தம் கடகடபுடவென்று ஒலிக்க ஆரம்பித்துள்ளது. என்ன சத்தம் என்று காதை கொஞ்சம் உற்று வைத்து கேட்டால் நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.. தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் ஆர்வ அலறல்தான் அது.
அதாவது லோக்சபா தேர்தலில் சீட் வாங்க காங்கிரஸாரிடையே அதீத ஆர்வம் இருக்கிறதாம். எனக்கு சீட் கொடுங்க என்று கேட்டு கோஷ்டித் தலைவர்களிடம் நெருக்கி வருகிறார்களாம்
சரி ஏன் இந்த ஆசை என்று விசாரித்துப் பார்த்தால் அது ஆசை அல்ல பேராசை என்று தெரிய வந்தது. அதாவது சீட் வாங்குவதை விட சீட் பெற்று பிரசாரத்திற்காக மேலிடத்திலிருந்து வரும் பணப் பெட்டிக்குத்தான் பலரும் குறி வைத்து சீட் வாங்க துடிக்கிறார்களாம்.
காங்கிரஸ் கட்சியில் ஒரு நல்ல வழக்கம் உள்ளது. அதாவது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையிடமிருந்து குறிப்பிட்ட அளவுக்கு பிரசாரத்திற்காகப் பணம் தருவார்கள். குறிப்பிட்ட அளவு என்பது ஒரு பேச்சுக்குத்தான்.. ஆனால் பலருக்கு அது மிகப் பெரிய பணம் என்பதால்தான் இந்த அடிதடியாக இருக்கிறதாம்.
அதாவது தேர்தலில் தனியாகவே நின்று போட்டியிட்டாலும் கூட, தோத்தே போயிட்டாலும், அட, டெபாசிட்டே பறி போனாலும் கூட.. பிரசாரத்திற்காக கட்சி தரும் பணம் போதுமே.. அதை வைத்து சின்னதாக செட்டிலாகி விடலாமே என்பதுதான் இந்த சீட் கேட்டு சிணுங்குவோரின் சின்னச் சின்ன ஆசையாக இருக்கிறதாம்
எனவேதான் சீட் கேட்டு விட்டு அதற்கான பதிலை எதிர்பார்த்து சத்தியமூர்த்தி பவன் பக்கமும், டெல்லி பக்கமும் காதை டியூன் செய்து திருப்பி வைத்து காத்திருக்கிறார்களாம் பலரும். காங்கிரஸ் காங்கிரஸ்தாய்யா....!
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: