2004-க்கும் 2012-க்கும் இடையில் அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்களில் 75% பெயர் தெரியாதவர்களிடமிருந்து அதாவது கணக்கில் இல்லாததாக பெறப்பட்டதாகவும், 25% பெயர் பதிவு செய்யப்பட்டு பெறப்பட்டது என்றும் அதில் 87% கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது குறித்த செய்தியை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டபூர்வமான வழிகளில் மட்டும் ரூபாய் 378.8 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.
2012, 2013-ம் ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, கட்சிவாரியாக, துறை வாரியாக, நிறுவன வாரியாக நன்கொடை விபரங்களை தொகுத்து ஜனநாயக சீர்திருத்ததிற்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் கடந்த ஜனவரி 8-ம் தேதி வெளியிட்டுள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பணம் பெறுவதில் பாஜக முதல் இடத்தில் உள்ளது. அது சுமார் 1,334 நிறுவனங்களிடமிருந்து ரூ 192.47 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 418 நிறுவனங்களிடமிருது ரூ 172.25 கோடி நன்கொடையாக பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவுக்கு காங்கிரசை விட மூன்று மடங்கு அதிகமான கார்ப்பரேட் நிறுவனங்கள் படி அளந்திருக்கின்றன. ஆனாலும், காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கும் நிறுவனங்கள் பெருந்தொகையாக அக்கட்சிக்கு வெட்டியிருக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் இவ்வளவு பணம் செலவு செய்ய் வேண்டும். இந்த பணத்தை இவ்வளவு எளிதாக கொடுக்கிறார்களே இது யாருடைய பணம்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு “ஜனநாயகத்தின்” மேல் ஏன் இந்த தீராக் காதல்? அதிலும் டிரஸ்டுகளை ஏற்படுத்தி மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ள வைப்பதில் வேதாந்தாவுக்க்கு, டாடாவுக்கு, பிர்லாவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?
செலவு குறைப்பு (Cost cutting) என்ற பெயரில் எங்கெல்லாம் தம் லாபத்தை பெருக்கலாம் என்று இண்டு இடுக்குகளை கூட விட்டு வைக்காமல் துழாவும் முதலாளிகள் இவ்வளவு தொகையை கொடுக்கிறார்கள் என்றால் இதனால் முதலாளிகள் அடையும் பயன் என்ன?
அதிகமாக நன்கொடை வழங்கிய நிறுவனங்களில் ஆதித்யா பிர்லாவின் பொது தேர்தல் டிரஸ்ட் (General Electoral Trust) காங்கிரசு மற்றும் பாஜகவுக்கு முறையே ரூ 36.41 கோடி மற்றும் ரூ 26.57 கோடி வாரி இறைத்து முதல் இடத்தில் உள்ளது. நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில் குமார மங்கலம் பிர்லாவின் பெயர் சிக்கிய போது, பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அவரது நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கியதை நியாயப்படுத்தியதும், ‘அவர் மீதான சிபிஐ வழக்கு அரசியல் பழிவாங்கல்’ என்று பாஜக வாதாடியதும் தற்செயலானதல்ல என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளலாம்.
டொரென்ட் பவர் லிமிட்டெட் நிறுவனம காங்கிரசுக்கு ரூ 11.85 கோடியும், பாஜகவுக்கு ரூ 13 கோடியும் கொடுத்துள்ளது என்ற செய்தியும் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிறுவனம் 1990-களின் பிற்பகுதியில் குஜராத் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சூரத் மற்றும் அகமதாபாத் மின்வினியோக நிறுவனங்களை சகாய விலைக்கு வாங்கிப் போட்டு 2012-13 நிதி ஆண்டில் மட்டும் ரூ 8,269 கோடி மொத்த வருவாய் சம்பாதித்து அதில் ரூ 622 கோடி லாபம் பார்த்திருக்கிறது. அடுத்த கட்டமாக தனது நடவடிக்கைகளை மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் விரிவுபடுத்தி வருகிறது. இப்படி மக்கள் சொத்தை தமக்கு வாரி வழங்கிய பாஜக, காங்கிரஸ் கும்பலுக்கு தான் குவிக்கும் லாபத்தில் ஒரு சிறுபகுதியை கிள்ளிக் கொடுத்து, எதிர்கால கொள்ளையடிப்புகளையும் உத்தரவாதப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். ஆட்சிக்கு காங்கிரஸ் வந்தாலும், பாஜக வந்தாலும் டொரென்ட் பவருக்கு ஏறுமுகமாகத்தான் இருக்கும்.
மோடிக்கு நெருக்கமாக அறியப்படும் அதானி குழுமம் கூட இரு தரப்பையும் சமன் செய்து காங்கிரசுக்கு ரூ 1.50 கோடியும், பாஜகவுக்கு ரூ 3 கோடியும் கொடுத்துள்ளது.
ஏர்டெல் பிராண்டை சொந்தமாக வைத்திருக்கும் பாரதி நிறுவனத்தின் பாரதி தேர்தல் டிரஸ்ட் காங்கிரசுக்கு ரூ 11 கோடியும், பாஜகக்கு ரூ 6 கோடியும் கொடுத்துள்ளது. இந்தியா முழுவதும் செல்பேசி சேவைகள், அவற்றுக்குத் தேவையான அலைக்கற்றை ஒதுக்கீடுகள், இலங்கையில் தொழில் செய்ய சுமுகமான அரசியல் இது போன்ற அனைத்து தேவைகளுக்கும் ஏர்டெல் பாரதிக்கு தொண்டு செய்யும் காங்கிரஸ், பாஜகவுக்கு அந்நிறுவனம் மனமகிழ்ந்து கொடுக்கும் பாக்கெட் மணிதான் இது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நாடெங்கும் சுரங்க வேட்டை ஆடும் நிறுவனங்களும் தமக்கு சேவை புரியும் அரசியல் கட்சிகளை சரியான முறையில் கவனித்துக் கொண்டிருக்கின்றன. டாடா நிறுவனத்தின் தேர்தல் டிரஸ்ட் காங்கிரசுக்கு ரூ 9.96 கோடியும் பி.ஜே.பிக்கு ரூ 6.82 கோடியும் கொடுத்துள்ளது. வேதாந்தாவின் Public & Political Awareness Trust பாஜகவுக்கு ரூ 90 கோடி கொடுத்துள்ளது. சிவகாசியின் அரசன் குரூப் நிறுவனம் பாஜகவுக்கு ரொக்கமாக ரூ 25 லட்சம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் ஜனநாயகத்தை ஆட்டுவிக்க பாவம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இணைப்பில் பார்க்கலாம்.
உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் ரூ 99.71 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளன. வீடியோகான் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ 2.25 கோடியும், பாஜகக்கு ரூ 6.25 கோடியும்; பூஞ்ச் நிறுவனம் காங் ரூ 1.40 கோடியும், பாஜகக்கு ரூ 4.60 கோடியும், ஐ.டி.சி ரூ. 4 கோடி காங்கிரசுக்கும், ரூ 4.38 கோடி பாஜகக்கும், எல்&டி ரூ 3.25 கோடி காங்கிரசுக்கும், ரூ 3.60 கோடி பாஜகவுக்கும் இன்னும் எஸ்ஸார், ஜின்டால் நிறுவனங்கள் பல கோடி கொடுத்துள்ளார்கள்.
கல்வித்துறை முதலாளிகள் மூலம் காங்கிரசுக்கு ரூ 1.92 கோடியும் பாஜகவுக்கு ரூ 1.69 கோடியும் நன்கொடையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மாணவர்களிடமும் நோயாளிகளிடமும் அடிக்கும் கட்டணக் கொள்ளையில் ஒரு சிறு பகுதியாக ரூ 21 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளன.
ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் காங்கிரசை விட பாஜகவுக்கு அதிகமாகவும், வர்த்தக கழகங்கள் மற்றும் சுரங்க தொழில் நிறுவனங்கள காங்கிரசுக்கு அதிகமாகவும் நிதி அளித்துள்ளன. அளவில் கூடுதல் குறைகள இருந்தாலும் எல்லா நிறுவனங்களும் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கு நிதி அளிப்பவைகளாகவே உள்ளன.
மேற்குறிப்பட்டவை அனைத்தும் அரசியல் கட்சிகளின் 25% பரிவர்த்தனைகள் மட்டுமே. 75% நிதிவரவுகள் எங்கிருந்து வந்தன என்று குறிப்பிடாமலேயே பெறப்பட்டுள்ளன.
இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காடுகளும் மலைகளும் ஆறுகளும் என இயற்கை வளங்கள் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன. வேதாந்தாவும், டாடாவும், எஸ்ஸாரும் ஸ்டெர்லைட்டும் நியம்கிரி முதல் தூத்துக்குடி வரை நாசப்படுத்த அனுமதிக்கப்படுகிறது. காங்கிரசாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி ஆட்சியில் இருக்கும் போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் நிலம், மலிவாக மின்சாரம், தேவையான அளவில் தண்ணீர், வரி விலக்கு, வரி விடுப்பு, குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கின்றன.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது என மைய அரசு அறிவிக்கிறது. அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் நிலம் போன்ற இயற்கை வளங்களும், சாலைகள், விமான நிலையங்கள் போன்ற அடிக்கட்டுமான வசதிகளும் சட்டபூர்வமான முறையில் தனியாரின் கொள்ளைக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் என தனியார் முதலாளிகள் சுருட்டிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது அரசு.
இப்படி மக்களின் சொத்தை முதலாளிகள் சட்டபூர்வமாக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இந்த பாராளுமன்ற ஜனநாயக முறை. பொதுமக்களின் சொத்தை சூறையாடும் இந்த முதலாளிகளின் கொள்ளை பணத்தின் சிறு பகுதி ஓட்டுக்கட்சிகளுக்கு போய், அதன் பலத்தில் அவர்கள் தேர்தலில் வெல்கிறார்க்ள் அல்லது தோற்கிறார்கள். மக்கள் ஒரு கட்சியின் மீது நம்பிக்கை இழக்கும் போது அடுத்த கட்சியை இதே முதலாளிகள் முன்னிறுத்துகிறார்கள்.
இங்கிருக்கும் அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், சட்டம், நீதிமன்றம், சிறை, காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களும், இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களும் வேறு வேறு அல்ல. இந்த இரு (ஜீவ)ஆத்மாக்களும் சந்தை என்னும் ஒரே பரமாத்மாவுக்குள் அடங்கியதுதான். இந்த ஜீவாத்மாக்கள் ஈருடல் ஓர் உயிர் போன்றவை. இவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இந்த ஊடாடல்தான் கார்ப்பரேட்களுக்கு ‘வளர்ச்சியை’ கொடுக்கிறது. மக்களுக்கு துனபத்தை கொடுக்கிறது. இந்த ஊடாடலுக்கு பிறந்தவைகள் தான் லஞ்சம், ஊழல், கார்ப்பரேட் கொள்ளை எல்லாம். இந்த பரமாத்மா (முதலாளித்துவ அமைப்பு) இருக்கும் வரை இவர்களின் ஊடாடல் நடந்துகொண்டு தான் இருக்கும் இந்த ஊடாடல் நடக்கும் வரை லஞ்சம், ஊழல் பிறந்து கொண்டு தான் இருக்கும்.
பூவுலகில் இந்த ஆத்மா/பரமாத்மாக்களுக்கு இடமில்லை என இவர்களுக்கு சிவலோக பதவி கொடுத்து முக்தி அடைய வைக்க வேண்டியது நமது கடமை.
- ரவி vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக