சனி, 25 ஜனவரி, 2014

அழகிரி : தி.மு.க.வின் சொத்தை அபகரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் ! அடடா பட்டென்று உண்மையை போட்டுடைக்கிறாரே !

தி.மு.க.வில் இருந்து நேற்று அதிரடியாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி. நேற்று இரவு தந்தி டி.வி.க்கு தொலைபேசி மூலம் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க.அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:–
நியாயம் வெல்லும்
கேள்வி:– உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:– என்னை நீக்கியதை பற்றி என்னிடமே கேட்கிறீர்களா?. நியாயம் என்றும் வெல்லும். அவ்வளவுதான். ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியில் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது.

தி.மு.க. அழிவுக்கு காரணம்
கேள்வி:– திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உங்களைப் பற்றி விமர்சித்திருக்கிறாரே?.
பதில்:– எப்போதெல்லாம் ஆட்சி மாறுகிறதோ, அப்போதெல்லாம் அவர் கருத்து தெரிவிப்பார். ஆட்சி மாறும் போதெல்லாம் கருத்து சொல்லும் கறுப்பு மனிதர் அவர். கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னார். பின்னர் (அ.தி.மு.க. ஆட்சியின்போது) சமூக வீராங்கனை என்று சொன்னார். தற்போது, தி.மு.க.வின் அழிவிற்கு அவரும் ஒரு காரணம் ஆகி வருகிறார்.
குழப்பம் ஏற்படுத்தவில்லை
கேள்வி:– நீங்கள் குழப்பம் விளைவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறதே?.
பதில்:– நான் ஒன்றும் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. நான் 3 நாள் ஹாங்காங் சென்றுவிட்டு நேற்று இரவு தான் வந்தேன். ஹாங்காங்கில் போய் நான் கட்சிக்கு எதிராக தவறாக ஏதாவது செய்துவிட்டேனா? ஒன்றுமில்லை. 5 பேர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கு காரணம் கேட்டேன். அதற்காகத்தான் இந்த நடவடிக்கை.
அதாவது கட்சிக்காரர்களுக்காக எதுவும் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்த கட்சிக்காரர்களுக்காக நான் கேட்டேன். இன்றைக்கு புதிதாக வந்த கட்சிக்காரர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். நேற்று வரை அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அவ்வளவு தான்.
தே.மு.தி.க.
கேள்வி:– தி.மு.க–தே.மு.தி.க கூட்டணி ஏற்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?.
பதில்:– நிச்சயமாக தே.மு.தி.க.வினால் தி.மு.க.விற்கு எந்த லாபமும் கிடையாது.
கேள்வி:– வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. எப்படி கூட்டணி அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.
பதில்:– அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னைத்தான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்களே. இனிமேல் தி.மு.க.வை பற்றி எனக்கு என்ன?. எனக்கு அக்கறை இல்லை.
சொத்தை அபகரிக்க முயற்சி
கேள்வி:– எதற்காக உங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்?.
பதில்:– சந்தர்ப்பவாதமாக அவர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். சிலருடைய வலுக்கட்டாயத்தினால் இதெல்லாம் நடக்கிறது. தி.மு.க.வின் சொத்தை அபகரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதனால் தான் இந்த நடவடிக்கை. அவ்வளவு தான்.இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.Dailythanthi.com/

கருத்துகள் இல்லை: