வெள்ளி, 24 ஜனவரி, 2014

பேசத் தயங்கும் விஷயங்களை இணைய எழுத்தாளர்கள் பேச வேண்டும் ! இது இணைய எழுத்தாளர்கள் காலமா?


கோப்புப் படம்
கோப்புப் படம்
விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு, புத்தகக் காட்சி நிறைவையொட்டி, 'தி இந்து' நாளிதழில் 'வலைஞர் எனும் எழுத்தாளர்' என்ற தலைப்பில் இன்று வெளியான செய்திக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள மூன்று எழுத்தாளர்களின் கருத்துகளை கவனிப்போம்.
சாரு நிவேதிதா, எழுத்தாளர்:
"இணையத்தில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தமிழில் வாசிப்பே கிடையாது; அவர்களுக்குத் தமிழில் எழுதவே தெரியவில்லை. இணையம் வழியாக நல்ல எழுத்தாளர்கள் உருவாகலாம். ஆனால், தற்போதைய சூழலில் அப்படி யாருமே உருவாகவில்லை என்றே சொல்வேன்.
ஆன்லைனிலேயே அமர்ந்து போதை அடிமைபோல புத்தக வாசமே இல்லாமல் எதையாவது மொக்கையாக எழுதிக்கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலான இணைய எழுத்தாளர்கள். அராத்து போன்றவர்கள் இதில் விதிவிலக்கு."

பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்:
"ஓர் ஊடகம் சமூகத்தில் புதிதாக வரும்போது பல்வேறு சலனங்கள் தோன்றும். இப்போது வெகுஜனப் பத்திரிகைகளில்கூட இணையத்தில் சுவாரசியமாக எழுதுபவர்களைப் பார்த்து வேலை கொடுக்கும் வழக்கம் உருவாகியுள்ளது. வெகுஜனப் பத்திரிகைகளில்கூட வலைப்பக்கம் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இவை எல்லாம் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியின் பக்கவிளைவுகள்தான்.
இப்படிப் புதிதாக வருகிற எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் துறைகளில் முக்கியமான எழுத்தாளர்களாக வருங்காலத்தில் வருவார்களா வர மாட்டார்களா என்பதை இப்போது கணிக்க முடியாது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதையும் மறுக்க முடியாது. இணையம் புதிய வகை எழுத்துகள் வருவதற்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது."
அராத்து, எழுத்தாளர்:
"பொதுவாக, சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களை இணைய எழுத்தாளர்கள் பேச வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக, 'பாரம்பரிய எழுத்தாளர்'களுக்கும் வாசகர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்துள்ளது. அந்த இடைவெளியை இணைய சமூகம் நிரப்பியுள்ளதாக நினைக்கிறேன்."
எழுத்தாளர் சாரு நிவேதிதா சொல்வதுபோல் 'இணையத்தில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தமிழில் எழுதவே தெரியவில்லையா?' 'தற்போதைய சூழலில் இணையம் வழியாக நல்ல எழுத்தாளர்கள் உருவாகும் நிலை இல்லையா?'
"இணையம் புதிய வகை எழுத்துகள் வருவதற்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது" என்ற எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் பாசிட்டிவ் பார்வையைக் கருத்திற்கொண்டால், அந்தப் புதிய வகை எழுத்துகள் தற்போதையச் சூழலில் எப்படி இருக்கிறது?
"சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களை இணைய எழுத்தாளர்கள் பேச வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்ற இணையம் மூலம் எழுத வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான எழுத்தாளர் அராத்துவின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இணையம் வாயிலாக எழுதத் தொடங்கியவர்களிடம் உங்களின் எதிர்பார்ப்புகள்தான் என்னென்ன?
உண்மையிலேயே இது இணைய எழுத்தாளர்கள் காலமா? 

கருத்துகள் இல்லை: