வியாழன், 23 ஜனவரி, 2014

மீண்டும் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா? சோனியாகாந்தியுடன் கனிமொழி சந்திப்பு:


பாராளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை.
டெல்லி மேல்–சபை தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. தற்போது இரண்டு கட்சிகளுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உறுதியாக அறிவித்து விட்டார்
தி.மு.க. வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வை சேர்க்கவும் தீவிர முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அப்போது மேல்–சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. எனவே ஏற்கனவே உள்ள நட்பின் அடிப்படையில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேரவேண்டும் என்று விரும்பியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கனிமொழி சோனியா காந்தியை சந்தித்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
சோனியா காந்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவரது மகள் கனிமொழியை வரவழைத்து சந்தித்து இருக்கிறார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எனவே பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கனிமொழி சந்திப்பு அதற்கு அச்சாரமாக இருக்கும் என்றும் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. .maalaimalar.com

கருத்துகள் இல்லை: