திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக-
தேமுதிக கூட்டணி உறுதியாகும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்ததில் திமுக கூட்டணியில் தேமுதிக இணணய வேண்டும்
என்று கருணாநிதியும், ஸ்டாலினும் மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு
விடுத்து வருகின்றனர்.
ஆனால் திமுக-தேமுதிக கூட்டணியை ரசிக்காத அழகிரி தன்னுடைய கருத்துக்களை
கடுமையாக பதிவு செய்தார். அதற்கு கருணாநிதி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்.
அதோடு நிற்காமல் தேமுதிகவை எப்படியாவது திமுக கூட்டணியில் இழுக்க வேண்டும்
என்பதற்காக அழகிரியை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர்.திமுக
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த
அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு அரசியல்வாதியாகவே நான்
மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகமே இல்லை. என்னுடைய தலைமையின் கீழ்
இருந்தால், கூட்டணியில் இருப்பேன் என்று கூறுகிறார். அப்படிப்பட்டவரை திமுக
கூட்டணியில் எப்படி சேர்ப்பது? டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்டு
வெறும் 2,000 ஓட்டுகள் வாங்கி இருக்கிறார். அவருடன் சேர்ந்தால் கூட்டணி
எப்படி உருப்படும்? என்று கேட்டார்.
இந்த கருத்து ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. இந்த கருத்து எதிர்ப்பு
தெரிவித்த கருணாநிதி, தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் என்று மு.க.
அழகிரி கூறியதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்கும்,
அல்லது அழகிரி அப்படி கூறியிருந்தால் அந்தக் கருத்துக்கும் திமுகவுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி சேருவது என்று தீர்மானிப்பது திமுக
செயற்குழு, பொதுக் குழு அல்லது அந்தக் குழுக்களால் அதிகாரம் தரப்பட்ட திமுக
தலைமை மட்டுமே. அந்த வகையில் தேமுதிகவுக்கும், திமுகவுக்கும் கூட்டணி
அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று திமுக தலைவர் என்ற முறையில் நான் சொன்ன
கருத்துக்கு மாறாக மு.க.அழகிரி பேட்டி அமைந்திருப்பது வருந்தத்தக்கது
மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்
கூட்டணிக்கு எதிராக தேவையில்லாத கருத்து மாறுபாடுகளை வெளியிட்டு
கழகத்தின் கட்டுப்பாட்டைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கழகத்தின் உறுப்பினர்
பொறுப்பிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்பதை மிகவும் கண்டிப்பாக
தெரிவித்துக் கொள்வதோடு, இந்த முடிவு நேற்றைக்கும், இன்றைக்கும்,
நாளைக்கும் கழகத்தினர் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகும் என்று கருணாநிதி
கண்டிப்போடு அறிவித்திருந்தார்.
தேமுதிக உடனான கூட்டணியை திமுக இன்னமும் விரும்புகிறது என்பதை
கருணாநிதியின் சமீபத்திய பேட்டிகள் உணர்த்துகின்றன. அதை வழிமொழியும்
வகையிலேயே மு.க.ஸ்டாலினும் பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் அழகிரி
மட்டும் விஜயகாந்த் உடனான .கூட்டணியை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கட்சியில் அழகிரி இருந்தால் கூட்டணிக்கு வருவதற்கு விஜயகாந்த் தயக்கம்
காட்ட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டே அவரை உடனடியாக நீக்கி
உத்தரவிட்டுள்ளது திமுக தலைமை
தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அழகிரி பேட்டி
கொடுத்ததால் தான், சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க.,வுடன், நான் கூட்டணி
வைத்தேன். கூட்டணி அமைப்பது தொடர்பாக, என் மனதில் பல ரகசியங்கள் உள்ளன அதை
உளுந்தூர்பேட்டை மாநாட்டில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அழகிரியின்
தற்போதைய பேட்டியினால் விஜயகாந்த் பாஜக பக்கம் சாய்ந்து விடக்கூடாது
என்பதற்காக இப்போது அழகிரியை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மலேசியாவில் விஜயகாந்துடன் திமுகவுக்காக பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் மு.க.அழகிரியை வைத்துக் கொண்டு
எப்படி கூட்டணிக்குள் வருவது? என்று விஜயகாந்த் கேட்டதாகவும்
கூறப்படுகிறது. இதனடிப்படையில்தான் தற்போது அழகிரி
நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அழகிரி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் திமுக- தேமுதிக
கூட்டணிக்கான முட்டுக்கட்டை நீங்கிவிட்டதாகவே ஸ்டாலின் தரப்பு கருதுகிறது.
அதனால் நிச்சயம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது.
திமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், என் நடவடிக்கை எப்படி
இருக்கும் என்பது பற்றியெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அரசியலில் எது
வேண்டுமானாலும் நடக்கலாம். நானும், என் ஆதரவாளர்களும் எந்த சோதனை வந்தாலும்
திமுகவில்தான் இருப்போம் என்று பேட்டியில் .கூறியிருந்தார் அழகிரி.
ஆனால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அமைதியாக இருக்கும் அழகிரி
அதிரடி நடவடிக்கையில் இறங்குவாரா? நாடாளுமன்றத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு
எதிராக அழகிரியும் ஆதரவாளர்களும் செயல்படும் பட்சத்தில் அது அதிமுகவிற்கே
சாதகமாக அமையும் வாய்ப்புள்ளது என்கின்றனர் திமுகவினர்.
பசுவுக்காக மகனையே தேர்க்காலில் பலிகொடுத்தான் மனுநீதி சோழன்..
தேமுதிகவுக்காக மகனை தேர்தல் களப் பலியாக்கிருக்கிறார் கருணாநிதி?
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக