வியாழன், 23 ஜனவரி, 2014

ராஜ்யசபா - 4 வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.- சிபிஎம்முக்கும் ஆதரவு


சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக நான்கு இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பெயரை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒரு இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு தருவதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த, முகமதுஅலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த ரங்கராஜன், ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ம் தேதி, நிறைவு பெறுகிறது. இந்த பதவிக்கு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. ராஜ்யசபா தேர்தல்- சசிகலா புஷ்பா உள்பட 4 வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.- சிபிஎம்முக்கும் ஆதரவு இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு பேரைத் தேர்வு செய்ய முடியும். மற்ற இரண்டு இடங்களில் பிற கட்சிகளால் சுயமாக யாரையும் தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. இருப்பினும் திமுக தேர்தலில் குதித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் திருச்சி சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிற கட்சிகளின் ஆதரவுடன் சிவாவை வெல்ல வைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அதிமுக நான்கு இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஒரு இடத்திற்கு சிபிஎம்முக்கு அது ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ்யசபா தேர்தலில், அதிமுக சார்பில், நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜிலா சந்தியானந்த். திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ். முத்துக்கருப்பன், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என்.சின்னதுரை, கழக மகளிர் அணிச் செயலாளர் எல்.சசிகலா புஷ்பா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார். 5வது இடத்துக்கு சிபிஎம்முக்கு ஆதரவு 5வது உறுப்பினர் இடத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன் களம் காணவுள்ளார். இந்த இடத்துக்கு ஆதரவு கோரி முதல்வர் ஜெயலலிதாவை, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சமீ்பத்தில் கொடநாடு போய் ஆதரவு கோரியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். 2 பெண்கள் - இருவருமே மேயர்கள் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவுள்ள விஜிலா சத்தியானந்த் நெல்லை மாநகராட்சியின் மேயர் ஆவார். அதேபோல சசிகலா புஷ்பா தூத்துக்குடி மேயராக இருக்கிறார். ஒரே சமயத்தில் இரு மேயர்களுக்கு, அதிலும் பெண்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நால்வரில் பாதிப் பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: