திங்கள், 1 ஜூலை, 2013

World War Z – மற்றும் ஹாலிவுட்டின் அட்டக் கத்திகளும்

வே.மதிமாறன்
ஹாலிவுட் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைய வளர்ச்சியடையComputer Graphics (CG) வந்ததற்குப் பிறகு மிகப் பெருபான்மையான ஹாலிவுட் படங்கள் ‘விந்தை’ காட்டுகிற தன்மைக்கு மாறியிருக்கிறது. பார்வையாளனை முட்டாளாக கருதுகிற முறை அதிகமாகி இருக்கிறது.
அதோட நம்பகத்தன்மையை அது இழந்துக்கிட்டு வருது. குறிப்பாக
இன்றைய அதி நவீன தொழில்நுட்ப சினிமாவாக இருக்கிற ஹாலிவுட் படங்கள் எவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகளை CG யில் உருவாக்கினாலும், 1959 ஆம் ஆண்டு வெளிவந்த Ben Hur  படத்தில் வரும் chariot race சை வெல்ல முடியவில்லை. காரணம் அதன் நம்பகத் தன்மை. Ben Hur - பிரம்மாண்டத்தின் உன்னதம். மிகைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களோடு திரைக்கதை இருந்தாலும் அது காட்சியாக்கப்பட்ட விதம் அதன் கேமரா கோணங்கள் முழுக்க முழுக்க மனிதர்களாலே செய்யப்பட்டது. அதுதான் இயந்திரங்களால் வெல்ல முடியாத பிரம்மாண்ட அழகிற்கு காரணம்.
ஒரு கீ போர்டு எழுப்புகிற வயலின் ஓசைக்கும், ஒரு வயலின் மேதை வாசிக்கிற  இசைக்கும் வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசம் உணர்வுகளை உருக்குகிற உன்னதம். Ben Hur வயலின் மேதையால் வாசிக்கப்பட்ட இசை.
‘நடிகர்’ Arnold Schwarzenegger – Conan the Barbarian  - Kindergarten Cop - True Lies - Terminator போன்ற படங்களில் தனது திடகாத்திரமான, பிரமாண்டமான உடலாலும் முறுக்கேறிய கைகளினாலும் காட்டிய வீரத்தை விட, சிரியா நாட்டை பூர்வீகமாக கொண்ட சிரியன் அமெரிக்கரான இயக்குனர் முஸ்தபா அக்காட் இயக்கிய Lion of the desert (omar mukhtar) திரைப்படத்தில் ஒமர் முக்தர் வேடத்தில் வயதானவராக நடக்க முடியாமல் குனிந்து நடந்த Anthony Quinn - கூன் முதுகில் இருக்கிறது வீரம்.
அழகியலை இயந்திரங்களால் உருவாக்க முடியாது. அதை மனிதர்களால்தான் உருவாக்க முடியும். கலை வடிவங்களில் யதார்த்தமோ – யாதர்தத்தை மீறியதோ (சாப்ளின்) எதுவுமே மனிதர்களின் நுட்பமே அழகியலின் நுட்பமும்.
ஆனாலும் அன்றைக்கு இல்லாத ஒரு சிறப்பு இன்றைய சினிமாவின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கிடைத்திருப்பது ஒலி. sound system. மிகத் துல்லியமான ஒலிப்பதிவு. யார் எங்கிருந்து பேசுகிறார்களோ அங்கிருந்து மொழி, அத்திசையிலிருந்து ஒலி. dolphy, dts போன்ற இந்த முறைகள் சினிமாவை மட்டுமல்ல, இசையையே இன்னொரு கட்டத்திற்கு உயர்த்தி இருக்கிறது. யதார்த்தமாக நம்பகத் தன்மையுடன் இனிமையாகவும் இருக்கிறது.
சரி.
World War Z - என்னுடைய மகன் கவின், இந்தப் படத்தை பார்த்தே ஆகணும்ன்னு அவன்தான் என்னையும் கூட்டிக்கிட்டுப் போனான். படம் வருவதற்கு முன்பே பத்திரிகைகள் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்ததையும் சொன்னான்.
வெளியாவதற்கு ஒருவாரத்திற்கு முன் இந்த படத்தின் official trailer ரையும் You Tube ல் காண்பித்தான். சரி நல்லாதானே இருக்கு அப்படின்னு நானும் நம்பி அவன்கூட படம் வெளியான முதல் நாளே (21.06.2013) போனேன்.
பிரச்சினை தியேட்டர் உள்ளே போகும்போதே ஆரம்பிச்சிடுச்சி. 3 D  படம். அதனால் கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம். மூன்றாம் உலகப்போர் பற்றிய படம் என்ற நினைப்பில் நானும் பொறுத்துக் கொண்டு ஆர்வத்தோடு இருந்தேன்.
‘அந்தக் காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்திய விஞ்ஞானிகளை  மதவாதிகளோடு இணைந்து மக்கள் கல்லால் அடித்தார்கள். அது மக்களின் மூடநம்பிக்கை.
துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், அணுகுண்டையும் கண்டுபிடித்து மனிதர்களை கொன்று குவிக்கிறார்கள் நவீன விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகளை கல்லால் அடிப்பதுதான் பகுத்தறிவு’ என்றோ நண்பர் ஒருவர் சொன்னது, இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியங்களை படிக்கையில் அது எவ்வளவு உண்மை என்பதை உணர்த்தியது.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி படைகள் செய்த கொடுமைகளுக்கு இணையாக அல்லது அதைவிட கூடுதலாக, அமெரிக்கவும் செய்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் அமெரிக்கப் படைகள் வீசிய அணுகுண்டு மனிதகுல விரோதத்தின் சாட்சியாக ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி இன்னும் நடுங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த வரலாற்றுப் பின்னணியோடு, ‘மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் அதன் கொடூரம்?’ என்பதை இந்தப் படம் விளக்கும் என்று எதிர்ப்பார்த்து போனேன்.
ஆரம்பம் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருந்தது. அதுக்குப் பிறகுதான் கடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. வெறிபிடித்த தெரு நாய்கள் போல் பாக்கறவனை எல்லாம் கடிக்கிறதுதான் உலகப் போர் என்று படம் சொல்லியது. மூன்றாம் உலகப்போர் நடந்தால் இப்படி கொடிய கிரிமிகளை பரப்புவதின் மூலம்தான் நடக்கும் என்பதுதான் அதன் செய்தி. இப்படி மனிதர்களை மனிதர்களே கடிக்கிறவர்களுக்கு பேரு Zombies. (World War Z என்கிற பெயரில் 2006 ல் வந்த நாவலைத்தான் படமாக்கி இருக்கிறார்கள். இது எனக்கு முதலிலேயே தெரியமா போச்சு.)
ஆனாலும் இதுவும் ஹாலிவுட்டுக்கு புதியது இல்லை. சில வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு படத்தின் பிரச்சினையும் இதே ‘கடி’ தொல்லைதான். அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஒரு வீட்டில் ஆரம்பித்து அந்தக் குடியிருப்புகள் முழுவதும் கடித்துக் கொண்டே இருப்பார்கள். கடித்து, கடித்து விடிவதற்குள் படம் முடிந்துவிடும்.
அடுக்குமாடி குடியிருப்பில் மட்டும் நடந்த கதையை உலகம் முழுவதும் நடப்பதுப்போல் விரிவாக்கி காட்டியிருக்கிறார்கள் World War Z ல். இதுக்கு அடுக்குமாடி ‘கடி’ யே எவ்வளவோ பரவாயில்லை.
எப்போதுமே ஹாலிவுட் படங்களில் அமெரிக்கா மீது கொடூரத் தாக்குதல்களை நடத்துவது, வேறு ஒரு நாடாக காண்பிக்க மாட்டார்கள். காரணம், அமெரிக்காவை தாக்குகிற அளவிற்கு எந்த நாடும் வலுவாக இல்லாததால், அதைப் பார்க்கிற அமெரிக்க பார்வையாளர்களுக்கு பரபரப்பு இருக்காது. வில்லன் கதாநாயகனைவிட சக்தி உள்ளவனாக இருந்து அவனை வீழ்த்துவதுதானே நாயகனுக்கு அழகு.
அதனால்தான் வேற்றுக் கிரகவாசிகள், டைனோசர், மனிதக் குரங்கு, அனகோண்டா போன்றவைகளோடும்; spiderman, badman போன்ற படங்களில் வருகிற விசித்திர வில்லன்களுடனும் இப்படியான கற்பனை எதிரிகளோடு கட்டிப் புரள்வதையும் அவைகளை வெற்றிக் கொள்கிற கோமளித்தனங்களைத்தான் ஹாலிவுட்டில் படமாக்குவார்கள். அதைத் தான் அறிவாளி அமெரிக்க மக்களும் கைதட்டி ரசித்து மகிழ்கிறார்கள்.
ஏனென்றால் ஹாலிவுட் திரைப்படத்தில் அமெரிக்க நகரத்தை தாக்குகிற குரங்கு போல், நிஜத்தில் உலக நாடுகள் பலவற்றை தாக்குகிற குரங்குதானே அமெரிக்கா. அதை ரசிக்கிற மனோபாவம்தான் இதையும் ரசிக்க வைக்கிறது.
இந்தப் படமும் அதே பாணிதான். படம் ஆரம்பத்திலிருந்து முடியும்வரை ஒரே சம்பவம் வேறு வேறு சூழலில் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொரிய நாடுகளுக்கு எதிரான அரசியல் என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சுவாரஸ்யத்திற்கு மட்டும் என்று படம் பார்க்க முயற்சித்தாலும் முடியவில்லை.  அப்படி ஒரு மரண மொக்கை. எனக்கு மட்டுமல்ல, என் மகனுக்கும் பிடிக்கல.
இரவு படம் பார்த்துவிட்டு வரும்போது, கலிபோர்னியாவிலிருக்கும் (ஹாலிவுட்டுக்கு பக்கத்துலதான்) அன்பிற்கினிய நண்பன் சிவகுமார் போனில். மழை.. என்னால பேசமுடியில.. அதனால் காலையில் திரும்பவும் கூப்பிட்டான். ‘இரவு பேச முடியாததற்கு காரணம், உங்க ஊர்ல இருந்து இப்படி ஒரு கொடுமையான படத்தை எடுத்து விட்டுறுக்கானுங்களே அதனால்தான்…’ என்றேன்.
அதற்கு அவன், ‘அட நீ வேற.. படம் பரவாயில்லை. இங்க நிலமை அதவிட மோசம், Zombies வந்து கடிச்சிடப்போகுது என்று வீடு வாசல வித்து துப்பாக்கியும் நிறைய தோட்டக்களையும் வாங்கி வைச்சிக்கிட்டு, பல நாட்களுக்கான உணவோடு ‘வீட்டுக்குள்ள’ பல அமெரிக்கர்கள் பதுங்கி இருக்காங்க..’ என்றான். அங்கேயே இப்படியா?
பெரியார் ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது ஒரு தொண்டர் வேகமாக பெரியாரிடம் வந்து ‘அய்யா, இந்த பேப்பர பாருங்க, என்ன அநியாயம்? ஜப்பான்ல கூட அலகு குத்திக்கிட்டு சாமியாடுறாங்களாம்’ என்று பதட்டப்பட்டிருக்கிறார்.
அதற்கு பெரியார், ‘ஏன் பதட்டப்படுறீங்க, உலகத்துல இருக்கிற ஒட்டுமொத்த மூடத்தனமும் தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமா?’ என்றாராம்.
தமிழனுக்கும் ஜப்பான்காரனுக்கும் மட்டுமல்ல, அமெரிக்காகாரனுக்கும் தான் சொந்தம். அதாங்க மூடநம்பிக்கை. கடவுள் இருக்கிற ஊர்ல எல்லாம் சாத்தானும் இருப்பான் என்பதுபோல, நிச்சயம் இறைநம்பிக்கையோடு தொடர்புடையதுதானே மூடநம்பிக்கையும்.
சாத்தானே இல்லை என்றால் யாராவது கடவுளா மதிப்பாங்களா?
ஆக, கடவுள் பாதி சாத்தான் பாதி கலந்து செய்த கொடுமை World War Zஇந்தப் படத்தோட கதையை ஒன்லைனில் சொல்லனும் என்றால், நிஜமாவே ஒரே ஒரு வரியில் சொல்றேன்,
படத்துல Zombies பலரை கடிக்குது. படமோ Zombie யை விட மோசமா படம் பாக்குறவன கடிக்குது.
எச்சரிக்கை:
படம் வெளியாவதற்கு முன்பே p.r.o வின் சிறப்பான கவனிப்பால் படத்தைப் பாராட்டி பத்திரிகையில் விரிவாக   தண்டோரோ போட்டவங்களை சும்மா விடக் கூடாது.
என்ன பண்ணலாம்?
Zombie ஆக மாறி கடிக்க வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை: