திங்கள், 1 ஜூலை, 2013

துக்ளக்: உண்மையைச் சொல்வதில்லை! சொன்னால் துரோகி பட்டம் கிடைத்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்

‘இலங்கையில் துக்ளக்’ என்ற இந்தத் தொடர் நமது வாசகர்கள் மத்தியிலும், இன்டர்நெட்டிலும், பெருவாரியான மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. ‘இது இலங்கைவாழ் தமிழருக்கு எதிரான தொடரில்லை’ என்பதை புரிந்து கொண்டு பலர் பாராட்டியுள்ளனர். ‘ஐ ஓப்பனர்’ என்கிற ரீதியில் இத்தொடர் பல பாராட்டுகளைப் பெற்றாலும், ஒரு சிலர் இந்தத் தொடரை விமர்சிக்கவும் செய்தனர். இலங்கைக்குச் சென்று வரும் முன் எனக்கு இருந்த யூகங்கள், கருத்துக்கள் அங்கு சென்று வந்த பிறகு மாறி விட்டன என்பதை ஏற்கெனவே இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டு விட்டேன். எனவே, இந்தப் பிரச்னையில் கருத்து மாறுபடுபவர்கள், முதலில் ஒருமுறை இலங்கை சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து வரவேண்டும். அதை விட்டு விட்டு ‘இதுவரை வந்த செய்திகளெல்லாம் பொய்யா? சேனல்-4 வெளியிட்ட ஆவணப்படம் பொய்யா?’ என்ற கேள்விகளையே கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி கூறிக் கொண்டிருப்பது நியாயமில்லை. இலங்கைத் தமிழர் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள், ஒருமுறை போய் அங்குள்ள மக்களை சந்தித்து விட்டு வர வேண்டும். அதை விடுத்து இங்கேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு ‘இது பொய். அதுதான் நிஜம்’ என்று குரல் எழுப்புவது என்ன நியாயமோ தெரியவில்லை.


இவ்வளவு ஆணித்தரமாக எழுதுகிறார்களே, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட இவர்களுக்கு எழவில்லையானால், அவர்கள் ஈழ போதையில் மதி மயங்கிப் போயிருக்கிறார்கள் என்றுதான் இதை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால்தான் ஃபேஸ்புக் விமர்சனங்களில் ‘அவனே... இவனே.... பார்ப்பான்’ என்பது போன்ற விமர்சனங்களைச் சிலர் வைத்துள்ளனர். ‘இதுதான் கண்ணை மூடிக்கொண்டு ஈழத்தை ஆதரிப்பவர்களின் தரம்’ என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நடுநிலையான நபர் இரு பக்கங்களையும் அலசி ஆராய்ந்து, ‘இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கக் கூடும்; அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கக் கூடும்’ என்று கணிப்பதுதான் இயல்பு.

rajah1‘நாங்கள் அங்குள்ள மக்களை நேரில் பார்த்துப் பேசினோம். ரெக்கார்ட் செய்து வந்துள்ளோம்’ என்று சொன்னால்கூட, ‘துப்பாக்கி முனையில் பேட்டியெடுத்தால், அவன் அப்படித்தான் சொல்வான்’ என்று பதில் சொல்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து நினைப்பதெல்லாம் ‘அங்கு ஈழத் தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் துப்பாக்கி முனையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு எந்தச் சுதந்திரமும் கிடையாது. அனுதினமும் செத்து பிழைக்கிறார்கள்’ என்கிற ரீதியில்தான். ஆனால், அங்குள்ள நிலைமை அப்படியில்லை.

யாழ்ப்பாணத்தில் ‘வெஸ்லி’ என்றொரு தியேட்டரை நாங்கள் பார்த்தோம். நாங்கள் போயிருந்தபோது அங்கு ‘கடல்’ படம் திரையிடப்பட்டிருந்தது. இலங்கை ராணுவத்தில் சேர்ந்துள்ள தமிழ்ப் பெண்கள் எங்களிடம் கேட்ட கேள்விகள் எல்லாம், பெரும்பாலும் தமிழ் சினிமா தொடர்புடைய கேள்விகள்தான். இந்தத் தகவல்களை எல்லாம் ஏற்கெனவே இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டு விட்டேன். நான் சொல்லாமல் விட்ட ஒரு தகவலும் இருக்கிறது. யாழ்ப்பாணம் பஸ் நிலையம் அருகே உள்ள புத்தகக் கடை ஒன்றில், இலங்கையிலிருந்து வெளியாகும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அத்தனையையும் நான் ஒன்று விடாமல் வாங்கினேன். 20-க்கும் மேற்பட்ட அந்த இதழ்களில் இரண்டு இதழ்கள், பச்சையான தமிழில் எழுதப்பட்ட மஞ்சள் பத்திரிகைகள். அனுபவக் கதைகள் என்ற பெயரில் படு ஆபாசமான சம்பவங்கள் அதில் ஈழத் தமிழில் எழுதப்பட்டிருந்தன. அதையும்தான் யாழ்ப்பாணத் தமிழர்கள் வாங்கி வாசிக்கிறார்கள்.

இதை நான் அங்குள்ள மக்களைக் குறை சொல்வதற்காகக் குறிப்பிடவில்லை. இங்குள்ளவர்கள் நினைப்பதுபோல் அங்குள்ள மக்கள் தினசரி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்றால், சினிமா பார்ப்பதற்கும், சினிமா கிசுகிசுக்களைக் கேட்பதற்கும், மஞ்சள் பத்திரிகை படிப்பதற்கும் யாருக்காவது தோன்றுமா? இவையெல்லாம் அங்கு இயல்பான மனித வாழ்க்கை துவங்கி விட்டது என்பதற்கான அடையாளங்கள் அன்றி வேறென்ன?

போர் முடிந்தபின் முதலிரண்டு வருடங்கள் இருந்த நிலை எப்படியோ தெரியாது. ஆனால், போர் முடிந்து நான்கு வருடங்கள் முடிந்த நிலையில், இலங்கையின் இப்போதைய நிலை இதுதான். நம்ப மறுப்பவர்கள் ஒருமுறை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்துதான் பேச வேண்டும். வெறும் கூச்சல் போட்டுக் குதிப்பதால் உண்மை நிலை அங்கு மாறி விடாது.

இறுதிப் போர் நடந்த கிளிநொச்சி, புதுக் குடியிருப்பு, முல்லைத் தீவு, வவுனியா பகுதிகளில், மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழத் துவங்கி விட்டார்கள். ஏராளமான கடைகள் வந்து விட்டன. வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் பள்ளிக்கு சைக்கிளில் தனியே தைரியமாகப் போய் வருகிறார்கள். ஆளே இல்லாத சாலைகளில் கூட, தமிழ்ப் பெண் சிறுமிகள், ராணுவம் இலவசமாக வழங்கிய சைக்கிள்களில் பள்ளி முடிந்து போகும் காட்சிகளை, கிளிநொச்சியில் நாங்களே நேரடியாகக் கண்டோம்.

இவர்களின் வாதப்படியே பார்த்தால் கூட, ராணுவத்தில் இருக்கும் தமிழ்ப் பெண்கள், மறுவாழ்வு மையத்தில் இருக்கும் முன்னாள் பெண் புலிகள் வேண்டுமானால் ராணுவத்துக்குப் பயந்து எங்களிடம் அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் உணவகங்களிலும், கடைகளிலும் நாங்கள் சந்தித்த மற்றவர்கள் ஏன் எங்களிடம் பொய் சொல்ல வேண்டும்?

முல்லைத் தீவிலிருந்து வவுனியாவுக்கு நாங்கள் போய்க் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் வாடகைக் கார் பஞ்சர் ஆகிவிட்டது. எங்கள் டிரைவர் ஸ்டெப்னி மாற்ற முயற்சி செய்தார். இரவு 10.30 மணி என்பதால் கும்மிருட்டு. காரில் டார்ச்லைட் ஏதுமில்லை. எங்களிட மிருந்த மொபைல் ஃபோன் லைட் வெளிச்சத்தில் ஸ்டெப்னி மாற்ற முயற்சி செய்தோம். ஆனால், ஜாக்கியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவ்வழியே வந்த ஒரு லாரியை நாங்கள் கை காட்டி நிறுத்தினோம். லாரியும் நின்றது. ஒரு இளைஞனும், வயதானவரும் இறங்கி வந்து பார்த்து, அவர்களிடமிருந்த டார்ச் லைட், ஜாக்கியை எடுத்து வந்து எங்களுக்கு உதவினார்கள். அந்த இளைஞன் எங்கள் டிரைவருடன் ஸ்டெப்னி மாற்ற உதவி செய்ய, அந்த முதியவரிடம் நான் பேச்சுக் கொடுத்தேன். அந்த இளைஞனின் அப்பாவான அவர் சொன்னார் :

“நாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். போர் முடிந்து சாலைகள் திறந்ததும், கையிலிருந்த நகைகளை விற்று அட்வான்ஸ் செலுத்தி, இந்த லாரியைக் கடனுக்கு வாங்கி ஓட்டுகிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரிசி வியாபாரிக்காக நாங்கள் இந்த லாரியை ஓட்டுகிறோம். எனக்கு இரு மகன்கள். ஒருவனை இயக்கம் இழுத்துக் கொண்டு போய் விட்டது. அவன் உடல் கிடைக்கவில்லை. அதனால் அவன் காணாமல் போனவர்களின் பட்டியலில் இருக்கிறான். இந்த இளையவனுக்கு இப்போது வயது இருபத்தி ஐந்து. இவனுக்கு பதினான்கு வயதானது முதலே,இவனை நாங்கள் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி, ரகசிய அறையில் வைத்துத்தான் காப்பாற்றி வந்தோம். வெளியே அனுப்பினால் இயக்கத்தினர் இவனையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று இவனை பள்ளிக்குக் கூட அனுப்பவில்லை.

“அப்படியும் திடீரென்று வீட்டிற்குள் வந்து இயக்கத்தினர் சோதனையிடுவார்கள். அதற்காக சமையல் அறையில் மூன்றடி ஆழத்திற்கு குழி தோண்டி வைத்திருந்தோம். இயக்கத்தினர் வருவது தெரிந்தால் உடனே அவனைக் குழிக்குள் ஒளியச் சொல்லி, மேலே ஒரு பலகையைப் போட்டு மூடி, அதன் மீது உணவுப் பாத்திரங்களை அடுக்கி வைத்து விடுவோம். அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறிய பிறகுதான் அவனை வெளியே எடுப்போம். இப்படி பாதி நாட்கள் அவன் பங்கர் குழியில்தான் இருந்தான்.
Kilinochchi-16
“சுமார் நான்கு வருடங்களாக வீட்டு வாசலை விட்டே இவன் வெளியேறியது கிடையாது. வீட்டுக் கதவையும் எப்போதும் தாழிட்டுத்தான் வைத்திருப்போம். 2005-ல் ராணுவம் முழுமையாகப் புலிகளை வெளியேற்றி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பிறகுதான், அவன் வீட்டை விட்டே வெளியே வந்தான். அதுவரை அவனுக்கு குகை வாழ்க்கைதான். அதன் பிறகுதான் எங்கள் வாழ்வில் நிம்மதி பிறந்தது. ஒருவனைப் பறி கொடுத்தாலும், ஒருவனாவது மிஞ்சினானே என்ற சந்தோஷத்தில் மீதிக் காலத்தைக் கழித்து வருகிறோம்.”

அந்த அர்த்த ராத்திரியில் தற்செயலாக நாங்கள் சந்தித்த ஒருவர் ஏன் எங்களிடம் பொய் சொல்ல வேண்டும்? அவருக்கு விருப்பமில்லையென்றால், எங்களிடம் பேசாமல் கூட ஒதுங்கி நின்றிருக்கலாமே? இத்தனைக்கும் நாங்கள் பத்திரிகையாளர்கள் என்பது கூட அவருக்குத் தெரியாது. ‘சுற்றிப் பார்க்க வந்தீர்களா?’ என்று அவராகக் கேட்டு விட்டு, ‘இப்போது எந்த பிரச்னையும் கிடையாது. எங்கே வேண்டுமானாலும் நீங்க போய் சுத்திப் பார்க்கலாம்’ என்று எங்களுக்குத் தைரியமும் சொன்னார்.

அவர் சொன்னபடி நாங்கள் சுற்றிய இடங்களில் எங்குமே யாரும் எங்களை விசாரிக்கவில்லை. முல்லைத் தீவிலிருந்து வவுனியா வரும் வழியில் ஒரே ஒரு இடத்தில் எல்லா வாகனங்களையும் நிறுத்தி ராணுவம் சோதனையிடுகிறது. சில வாகனங்களில் மட்டும் ‘எங்கே இருந்து எங்கே போகறீங்க’ என்பது போன்ற ஒரு ஃபார்மலான விசாரணை நடக்கிறது. அந்த சோதனை குறித்து பின்னர் வவுனியா ராணுவ அதிகாரியிடம் நான் கேட்டபோது, ‘இறுதிப் போர் நடந்த பகுதிகளில் முழுப் பிரதேசத்தையும் ராணுவம் இன்னும் சோதனையிட்டு முடிக்கவில்லை. கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்பட்டு வருகின்றன. (8 சதவிகிதம் பாக்கியுள்ளதாம்.) மரப் பொந்துகள், பூமிக்கடியிலுள்ள பாதாள அறைகளில் இன்னும் ஆயுதங்கள், வெடி மருந்துகள் இருக்கக்கூடும். அவற்றை யாரும் இலங்கையின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தச் சோதனை’ என்றார் அவர்.

இவையெல்லாம்தான் அங்கு நிலவும் உண்மை என்றாலும், அதை ஏற்க இங்கு பலர் தயாராக இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலருக்கு ஒரு ‘அரசியல் தேவை.’

இலங்கைத் தமிழரைப் பற்றி பேச இவர்கள்தான் அத்தாரிட்டி என்பது போல் நடந்து கொள்கிறார்கள். ‘மற்றவர்கள் இலங்கைத் தமிழரின் நலனைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. இவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பெற்றுத் தர விரும்புகிறார்களோ, அதைத்தான் மற்ற தமிழக மக்களும் விரும்ப வேண்டும். அவ்வளவு ஏன், இவர்கள் விரும்புவதைத்தான், இலங்கைத் தமிழர்களும் விரும்ப வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள். இலங்கை மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து கொள்வதில் கூட இவர்களுக்கு ஆர்வமில்லை. இவர்களுக்குத் தேவை தனி ஈழம். இவர்கள் அங்கு சென்று வாழப் போவதில்லை. ஆனால், அங்குள்ள மக்களுக்கு இவர்கள்தான் தீர்வு சொல்வார்கள். அங்குள்ள மக்கள் ‘தமிழீழம் வேண்டாமப்பா... எங்களை உயிரோடு விட்டால் போதும்’ என்று சொன்னால் கூட, ‘அதெல்லாம் கூடாது, நீ தமிழீழம் பெற்றுத்தான் தீர வேண்டும்’ என்று இவர்கள் அடம் பிடிப்பார்கள்.

‘அங்குள்ள பெருவாரியான மக்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார்கள்’ என்று சொன்னால், ‘அப்படியானால் பொது வாக்கெடுப்பு நடத்து, உண்மை தெரிந்து விடும்’ என்கிறார்கள். அப்படியே இலங்கைத் தமிழர் மத்தியிலும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி ‘தனி ஈழம் வேண்டாம்’ என்று ரிஸல்ட் வந்தாலும், இவர்கள் ஒத்துக் கொள்ளவா போகிறார்கள்? ‘இலங்கை ராணுவம் கள்ள ஓட்டு போட்டது; இலங்கை அகதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை; புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை; எங்களிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை’ என்றுதான் புகார் பட்டியல் வாசிப்பார்கள். அதிலென்ன சந்தேகம்?

‘தங்களுக்கு ஒரு தேவை என்றால் அங்குள்ள மக்களே போராட மாட்டார்களா?’ இந்தக் கேள்விக்கு ‘ராணுவம்தான் அவர்களை உருட்டி, மிரட்டி ஒடுக்கி வைத்துள்ளதே’ என்று பதிலளிக்கிறார்கள். இங்குள்ள இளைஞர்கள் ஈழத்துக்காகத் தீக்குளிக்கும்போது, அங்கு இன்னமும் ஈழக் கோரிக்கை இருக்கிறதென்றால், அங்குள்ள ஒரு இளைஞனாவது இந்த நான்கு வருடத்தில் ஈழத்துக்காகத் தீக்குளித்திருக்க மாட்டானா? தற்கொலை செய்து கொள்வதற்குமா ராணுவத்தைக் கண்டு பயப்படுவான்? அங்கு நிலைமை அப்படியில்லை என்பதால்தான் அங்கு போராட்டங்கள் இல்லை. புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது. இங்குள்ளவர்கள்தான் விடவில்லை.

‘தமிழர்கள் அங்கு சிங்களர்களால் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, அங்கு சேர்ந்து வாழ முடியாது. தனிநாடுதான் சரிப்பட்டு வரும்’ என்று ஒரு வாதம் வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அங்குள்ள மலையகத் தமிழர்கள்தான் யாழ்ப்பாண தமிழர்களை விட ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த நிலமில்லை, வீடில்லை. எஸ்டேட் வழங்கும் வரிசை வீடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழீழம் கேட்கவில்லை; தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.

Jaffna town1இங்கும் கூட பல கிராமங்களில் தலித் மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தெருவில் செருப்பு போடக் கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது, சைக்கிள்களை உருட்டிக் கொண்டுதான் போக வேண்டும், தேர்தலில் நிற்கக் கூடாது, காதல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இன்னமும் பல கிராமங்களில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த அளவுக்கா வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் அங்கு ஒடுக்கப்பட்டு இருந்தார்கள்? இங்கு ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காக நாம் என்ன தீர்வு காண்கிறோம்? தீண்டாமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வருகிறோம். அவர்களுக்குக் கல்வி வாய்ப்பில், வேலை வாய்ப்பில் சலுகைகள் தந்து முன்னேற்றி விட முயல்கிறோம். அந்த ரீதியில்தான் அங்குள்ள மக்களுக்கும் சம நீதி கிடைக்க நாம் முயல வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் தனி நாடு கோரிக்கை?

இப்போது இலங்கை அரசாங்கத்துக்கு உலக நாடுகள் குறித்து ஒரு பயம் இருக்கிறது. சர்வதேசப் பிரதிநிதிகள் அவ்வப்போது இலங்கைக்கு வருகிறார்கள். தமிழ் மக்களோடு இணக்கமாக இருந்தால்தான் அவர்கள் வரும்போது, தமிழ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்று இலங்கை அரசு செயல்படுகிறது. அந்தத் தைரியத்தில்தான் ‘இங்கு வந்து பாருங்கள்’ என்று எல்லோரையும் அழைக்கிறது இலங்கை அரசு. இந்த தருணத்தையும், இந்த மனோபாவத்தையும் பயன்படுத்தி, தமிழருக்கு அங்கு நல்ல உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு, ‘ஈழம்... ஈழம்...’ என்று அடித்துக் கொண்டால், அது வெற்றியும் பெறாது; அங்குள்ள தமிழர்களுக்கு நலனும் பயக்காது.

ஆறு நாட்கள் நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடி விட்டு வந்துதான் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதைச் சொன்னால் ‘நாங்களும்தான் தினசரி யாழ்ப்பாண தமிழர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் எல்லாம் ஈழம் வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்’ என்று சிலர் கூறுகிறார்கள். அதற்கும் மேல் ஒரு சிலர் அப்படிச் சொல்லியிருந்தால் கூட, அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அங்குள்ள மக்கள் தமிழக மக்களிடமும் சரி, புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் சரி, உண்மையைச் சொல்வதில்லை. தமிழ்த் துரோகி பட்டம் கிடைத்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். இது குறித்து, இந்தக் கட்டுரைத் தொடரில் பல இடங்களில் நான் குறிப்பிட்டுள்ளேன். ராணுவத்தில் சேர்ந்துள்ள தமிழ்ப் பெண்கள், பழிச் சொல்லுக்குப் பயந்தபடிதான் இருக்கிறார்கள். ‘நாங்கள் சேர்ந்தது தப்பா அண்ணா?’ என்று என்னிடமே அவர்கள் கேள்வி கேட்டதையும் நான் ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன்.

இலங்கையில் தமிழர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் உள்ள அத்தனை தமிழர்களின் ஒருமித்த கருத்தாக இருக்க முடியும். பிறகெப்படி தமிழக மக்களில் தமிழ் உணர்வாளர்கள் (?), தமிழ் துரோகிகள் (?) என்ற பாகுபாடு எழுகிறது? இதே தொப்புள் கொடி உறவான மலேசியத் தமிழர்கள், ‘ஹிண்ட்ராஃப்’ என்ற அமைப்பு மூலமாக சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் சம உரிமை கேட்டுப் போராடினார்கள். அதற்கு இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் ஏன் பெரிய அளவில் கொதிக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்த இதழில் பார்க்கலாம்.
– எஸ்.ஜே. இதயா

கருத்துகள் இல்லை: