மதச் சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை
நிறுத்தாவிட்டால் பிரச்சாரம், அறப்போர், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்
சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின்
அடிப்படைக் கடமை என்ற பிரிவுக்கும் விரோதமாக, தமிழ்நாடு அரசின் இந்து
அறநிலையத்துறை மழைக்காக யாகங்களை ஏற்பாடு செய்துள்ளதைக் கண்டித்தும்,
உடனடியாக இது நிறுத்தப்படா விட்டால் அறப்போர், பிரச்சாரம், நீதிமன்றம் ஆகிய
தளங்களில் கழகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்த ஆண்டு, சரியான மழை - காலத்தே
பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது.
வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு - பல்லாயிரம் பேர்களைப் பலி
கொள்ளும் அளவுக்கு அங்கே!
இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து
அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம்
நடத்தியும் சில கோயில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் - தீர்த்தங்களில்
தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள
பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத
மொழியில் வேத மந்திரங்களை கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது
வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?
இந்த மூடநம்பிக்கைகளை - பக்தி வேஷம்
போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம்
ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக்
கண்டனத்திற்குரியதாகும்!
இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லுவது என்ன?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்
மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை
கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல்
மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை,
சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,
அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும்
உண்டோ? அரசு துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும்
முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு,
மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர் மறை செயலில் ஈடுபடலாமா?
இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன?
மழை வேண்டி - பருவக் காற்றுத் துவங்கும் காலத்தில் மிக சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற?
சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம்.
சில கேள்விகள்
1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது
வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி
யாகம் செய்தால் அது இரட்டை வேடம் - மோசடி அல்லவா?
2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?
3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை
புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது
அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும்
என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! - எதற்காக
உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக?
மழை வெள்ளத்தைத் தடுக்க யாகம் உண்டா?
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள்
நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க
எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? - சொல்லட்டுமே பார்க்கலாம்!
அறியாமையை விட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்!
இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்க லாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?
இந்து அறநிலையத் துறையின் வேலை என்ன?
இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை
நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள்
சட்டமன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும்,
அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும்.
கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன்
பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை
செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர்
இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல!
உடனடியாக நிறுத்தப்படா விட்டால்...
இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில்
பறக்க விட்டு விட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector),
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்)
தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக்
கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்!
இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப்
போர்கள் ஒரு முனையிலும், பொது நல வழக்கு மறு முனையிலும், பிரச்சாரங்கள்
மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக