ஞாயிறு, 30 ஜூன், 2013

சமசீர்கல்வியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதாசிவம் தலைமை நீதியரசர் நியமனம்

தலைமை நீதிபதியாக பி. சதாசிவம் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ் அறிக்கை

 சமச்சீர் கல்வி வழக்கிலும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்குகளிலும் இவர் அளித்த தீர்ப்புகள் பிரபலமானவை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய உச்சநீதிமன்றத்தின் நாற்பதாவது தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர்  திரு. பி. சதாசிவம் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய தலைமை நீதிபதி பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழர் நீதியரசர் சதாசிவம் அவர்கள் தான் என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள கடப்பநல்லூர் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் படித்தார். இவரது குடும்பத்தில்  இவர் தான் முதல் பட்டதாரி; இவரது ஊரில் இவர் தான் முதல் வழக்கறிஞர். எந்த வசதியும் இல்லாத கிராமத்தில், எந்த பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் இந்திய நீதித்துறையின் மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறியிருப்பது சமூக நீதிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும்.
தனியார் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி கல்விக்கும் தற்போது அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்த நீதியரசர் அவர்களின் முன்னேற்றம் தாய்மொழி வழிக் கல்வியின் வலிமையை உணர்த்துவதாக உள்ளது.

1973&ஆம் ஆண்டில் வழக்குறைஞராக பணியைத் தொடங்கிய சதாசிவம் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக வழக்குறைஞராகவும், சென்னை உயர்நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றங்களின் நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நீதித்துறைக்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார். சமச்சீர் கல்வி வழக்கிலும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்குகளிலும் இவர் அளித்த தீர்ப்புகள் கல்வித் துறை மீது கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுபவை ஆகும். தேசிய வளங்கள் மக்களுக்கு சொந்தமானவை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இவர் அளித்த தீர்ப்புகள் புரட்சிகரமானவை ஆகும்.

உச்சநீதிமன்ற நீதிபதியான பிறகும் விவசாயத்தின் மீதான பாசத்தை விடாதவர். தமது குடும்பத்தினர் மூலம் இன்றும் விவசாயத்தை செய்து வருவதும்,  விடுமுறைக் காலங்களில் தமது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு விவசாயம் மற்றும் பாசனம் தொடர்பான அறிவுரைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கவை.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட நீதியரசர் பி. சதாசிவம் அவர்கள் இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த காலங்களைப் போலவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: