வெள்ளி, 5 ஜூலை, 2013

தனி தெலுங்கானா காங்கிரஸ் தயார்: ராவ், ஜெகன் செல்வாக்கை குறைக்க புதிய தந்திரம்

தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாராகி விட்டது. ஆனாலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள, தனி மாநிலம், எல்லோரும் எதிர்பார்ப்பது போல இல்லாமல், காங்கிரஸ் அல்லாத கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் உள்ள, தெலுங்கானா மாநிலமாகவே இருக்கும். அதற்கேற்ற வகையில், காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, சந்திரசேகர ராவின், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட, பல கட்சிகள், கடந்த பல மாதங்களாக, தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன. ஆலோசனை: ஆனாலும், இந்த கோரிக்கை மீது, காங்கிரஸ் இதுவரை கவனம் செலுத்தவில்லை. அடுத்த ஆண்டு, ஆந்திராவில், லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளதால், தற்போது, இதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில், இந்த விவகாரத்தில், முடிவெடுக்க காங்., விரும்புவதால், கடந்த சில நாட்களாகவே, டில்லியில், இது தொடர்பான, ஆலோசனைகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியில் நேற்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தெலுங்கானா விவகாரத்தில், இறுதி கட்டத்திற்கு காங்கிரஸ் வந்துள்ளது. தங்களுக்கே உரிய வியூகத்துடன், இதற்கான தீர்வை உருவாக்கியுள்ளது. அதன்படி, தற்போது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட, தெலுங்கானா ஆதரவாளர்கள் கேட்பது போல, புதிய மாநிலம் அமைக்கப்படாது.


கூறு போட திட்டம்:

தெலுங்கானா பகுதியை, ஒட்டு மொத்தமாக, புதிய மாநிலமாக உருவாக்காமல், அதற்கு பதிலாக, அதையே கூறு போட திட்டமிட்டு உள்ளது. அதாவது, தெலுங்கானாவில் உள்ள சில பகுதிகளை பிரித்து, ஆந்திராவுடன் இணைக்கவும், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் சிலவற்றை, தெலுங்கானா புதிய மாநிலத்துடன் இணைக்கவும் முடிவெடுத்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், தங்களின் அரசியல் எதிரிகளான, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவையும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியையும், ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த முடியும், அவர்களின் செல்வாக்கை குறைக்க முடியும் என, காங்கிரஸ் நம்புகிறது.

நிர்ணயிக்கும் சக்தி:

இந்த சாணக்கிய திட்டத்தின்படி, ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் உள்ள, அனந்தப்பூர் மற்றும் கர்நூல் மாவட்டங்கள், தெலுங்கானாவுடன் சேர்க்கப்படும். இந்த இரண்டு மாவட்டங்களிலும், முஸ்லிம்கள் மற்றும் ரெட்டி வகுப்பினர்தான், அதிக அளவில் வசிக்கின்றனர். ஆந்திராவில் ஐதராபாத், அனந்தப்பூர், கர்நூல் ஆகிய மூன்று இடங்களில்தான், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மூன்றையும் இணைப்பதன் மூலம், முஸ்லிம்களின் ஆதிக்கம் வலுப்பெறும். மூன்றையும் இணைத்து, இவ்வாறு உருவாகும் பகுதியில், மொத்தம், எட்டு லோக்சபா தொகுதிகள் வரும். இவை அனைத்திலும், வெற்றி தோல்வியை, முஸ்லிம்கள் நிர்ணயிப்பர். அதேபோல, ராயலசீமாவில் தற்போது ஜெகனின் ஆதிக்கம், அதிகமாக உள்ளது. அனந்தப்பூர், கர்நூல் இரண்டையும் பிரித்து, தெலுங்கானாவுடன் இணைத்தால், ராயலசீமா பகுதியில், ஜெகனின் செல்வாக்கு வலு இழக்கும். இந்த மாவட்டங்களை பிரிக்கும்போது, ராயலசீமாவில் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்கள் மட்டுமே, மீதமிருக்கும். கடப்பாவை சேர்ந்தவர் என்பதாலேயே, சித்தூரில் ஜெகனுக்கு ஆதரவு குறைவு. எனவே, ராயலசீமாவில் ஜெகனின் கதை முடிந்ததாகவே ஆகிவிடும்.

ரெட்டி வகுப்பினர்:

கடலோர ஆந்திரா பகுதிகள் எல்லாம், காப்பு மற்றும் கம்மா போன்ற வகுப்பினர் ஆதிக்கத்தில் உள்ளவை. அங்கெல்லாம், ஜெகனுக்கு செல்வாக்கு கிடையாது. அதனால், தெலுங்கானாவுக்கு பிறகு, உருவாகப் போகும் புதிய ஆந்திராவிலும், ரெட்டி வகுப்பைச் சேர்ந்த ஜெகனால், ஆதிக்கம் செலுத்தவே முடியாது. ராயலசீமா மீது, இவ்வாறு கை வைக்கும் காங்கிரஸ், தெலுங்கானாவையும் விட்டு வைக்கவில்லை. அந்த பகுதியைச் சேர்ந்த, வாரங்கல் மற்றும் கம்மம் என, இரண்டு மாவட்டங்களையும், ஆந்திராவுடன் சேர்க்க உள்ளது.

ஒரே தலைநகர்:

இதுதவிர, தெலுங்கானா விஷயத்தில் மற்ற பிரச்னைகளாக கோதாவரி ஆறும், ஐதராபாத் நகரமும் உள்ளது. மாநிலத்தை பிரிக்கும் போதே, கோதாவரி தண்ணீரை பிரிப்பது குறித்து, முறையான ஒப்பந்தம் போடப்படும். ஐதராபாத் நகரை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களுக்கும், உரிய ஒரே தலைநகராக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

உயர்மட்ட குழுவில் விரைவில் ஒப்புதல்:

தெலுங்கானா தனி மாநிலம் குறித்த இறுதி முடிவு எடுக்க, இன்னும் ஓரிரு நாட்களில், காங்கிரசின் உயர்மட்டக் குழு கூடவுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ள, அந்த கூட்டத்தின் இறுதியில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்படலாம். தெலுங்கானா அறிவிப்பு வெளியானவுடன், முதல்வர் பொறுப்பில் இருந்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் மாற்றப்படலாம்.

"மாஜி' எம்.எல்.ஏ., உண்ணாவிரதம்:

தெலுங்கானா மாநில பிரச்னையை தீர்ப்பதற்காக, ராயலசீமா பகுதியின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள், எம்.எல்.ஏ., பைரெட்டி ராஜசேகர ரெட்டி, நேற்று, 52 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை, ஐதராபாத்தில் துவக்கினார். ஆந்திராவின் முக்கிய அரசியல் தலைவர்களான, தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு நாயுடு, முதல்வர், கிரண்குமார் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி போன்ற பலர், ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: