சனி, 6 ஜூலை, 2013

மீண்டும் தலைதூக்கும் கல்லூரி மாணவர்கள் மோதல்: கடும் நடவடிக்கை அரசு உத்தரவு

மோதலில் ஈடுபடும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு, கல்லூரி நிர்வாகத்திற்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.எந்த கல்லூரி பெரிசு... ரூட் தல யாரு...?' என, சென்னை கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஆரம்பமாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாக, பச்சையப்பன், நந்தனம், புது, மாநில கல்லூரி மாணவர்களிடையே, கற்களை வீசி தாக்குதல், மாணவர் மண்டை உடைப்பு என ,மோதல் நடந்த வண்ணம் உள்ளன.கடந்தாண்டு, மாணவர்களிடையேயான மோதல், பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், மாணவர்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், அவ்வபோது, மோதல்கள் தொடர்ந்தன. இச்சூழ்நிலையில், மீண்டும் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஆரம்பாகி உள்ளது.இதை ஆரம்பத்திலேயே ஒடுக்க, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து, கல்லூரி முதல்வர்களுக்கும், இணை இயக்குனர்களுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


"பஸ்சில் கலாட்டா செய்ய கூடாது; படிக்கட்டு பயணம், மேற்கூரை பயணம் மேற்கொள்ளக் கூடாது' என, மாணவர்களுக்கு அறிவுறுத்த கூறப்பட்டுள்ளது.மேலும், பஸ்சில், எந்த கல்லூரி மாணவர்கள் அதிகளவில் மோதி கொள்கின்றனர், அவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து தருமாறு, கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கொண்டு, மோதலில் ஈடுபடும் மாணவர் குறித்து, அவர்களது பெற்றோரிடம் கூறியும், மாணவருக்கு அறிவுரை வழங்க சொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.எந்த ரூட்டில் அதிகம் பிரச்னை ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, பஸ்களின் வழித்தடத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ""கல்லூரியில் பயிலும், சில மாணவர்களின் செயலால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதை ஆரம்ப கட்டத்தில் தடுக்க, கல்லூரி முதல்வர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோதலில் ஈடுபடும் மாணவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, தயங்கக் கூடாது'' என்றார்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: