புதன், 3 ஜூலை, 2013

தயாளு அம்மாள் மனுவை விசாரிக்க மறுத்தார் நீதிபதி!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், உடல்நிலை காரணமாக ஆஜராக முடியாது என்று செய்த மனுவை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீணா பீர்பால் மறுப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இம்மனுவை நீதிபதி வீணா பீர்பால் நேற்று விசாரித்திருந்தார். வழக்கை இன்று ஒத்தி வைத்திருந்தார். இன்று திடீரென ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ இந்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியாது என்று கூறியிருப்பதே, பரபரப்புக்கு காரணம்.
அந்த ‘தனிப்பட்ட காரணங்கள்’ எவை என்பதே டில்லி மீடியாவை போட்டு குடைந்து கொண்டிருக்கும் விஷயம். நீதிபதிக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே டில்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலைஞர் டிவியும் ஆதாயம் அடைந்ததாக விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலைஞர் டிவியின் பங்குதாரரான தயாளு அம்மாள் இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சி என்று தெரிவித்திருந்த சி.பி.ஐ., அவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.
இதைத் தொடர்ந்து தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் உடல்நலம் குன்றியுள்ளதால் தம்மால் டில்லி வர இயலாது என்றும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்தார். அதை சி.பி.ஐ. நீதிமன்றம் நிராகரித்தது.
அதையடுத்து டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவைத்தான் விசாரிக்க முடியாது என்று கூறியுள்ளார் நீதிபதி வீணா பீர்பால்.
இதே மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வீணா பீர்பால் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டார். அவர் கூறுகையில், “தயாளு அம்மாளின் மனு விசாரணையை முடக்கும் உள்நோக்கம் கொண்டது. அவர் டில்லி வந்தால்தான் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய முடியும்” என்று கூறியதுடன் விசாரணையை இன்று ஒத்திவைப்பதாகக் கூறியிருந்தார்.
இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, தம்மால் தயாளு அம்மாளின் மனுவை தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரிக்க முடியாது என்றும் நாளை வேறொரு பெஞ்ச் இம்மனுவை விசாரிக்கும் என்று கூறினார்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: