கோல்கட்டா: ""திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அந்தக் கட்சியினருடன் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது'' என, மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார். திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநில உணவுத் துறை அமைச்சருமான ஜோதிபிரியா மாலிக் , வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில், ஹப்ரா என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரசுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் பரம எதிரி.
அதனால், அவர்கள் விஷயத்தில், விலகியே இருக்க வேண்டும். அவர்களுடன் சேரக் கூடாது. மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுடன், அந்தக் கட்சியின் உள்ளூர் தலைவர்களுடன், எந்த விதமான திருமண உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர். தெருவோர டீக்கடைகளில் கூட, அவர்களுடன் உட்கார்ந்து கதை பேசாதீர். மார்க்சிஸ்ட் கட்சியினருடன் உறவு வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாடுகளை நாம் எதிர்க்க முடியாது. மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு ஊராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதுவரையாவது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாலிக் கூறினார்.
மாலிக்கின் இந்தப் பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் சலீம் கூறுகையில், ""மாலிக்கின் பேச்சு துரதிருஷ்டமானது, கேலிக்கூத்தானது, திமிர்த்தனமானது. உயர் பொறுப்பில் உள்ளவர்கள், இப்படி சகிப்புத்தன்மை இல்லாத நிலையை மக்களிடையே ஊக்கப்படுத்துவதால், ஜனநாயக மரபுகள் சீர்குலைகின்றன. சாதி, மத, இன பேதம் இல்லாமல், மாநில மக்களிடையே நிலவும் சமூக கட்டமைப்பை, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், அவரின் பேச்சு உள்ளது. மக்கள் மத்தியில் விரோதத்தை உருவாக்க, ஆளும் கட்சியினர் முற்படுவது வருந்தத்தக்கது'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக