வியாழன், 19 ஏப்ரல், 2012

கடாபிக்கு டோனி பிளேயர் கொடுத்த அன்புப் பரிசு!

திங்கள் கிழமை ஒளிபரப்பான நவீன உளவாளிகள் நிகழ்ச்சி பயங்கரவாதத்தின் மீதான போர் எந்த அளவுக்கு சட்டமில்லா பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கியது. 2004-ம் ஆண்டு, அப்போதைய லிபிய அதிபர் கடா்பியின் எதிரியான, வெளிநாட்டில் வாழ்ந்து வந்த அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜை கடத்துவதற்கு பிரிட்டனின் உளவு நிறுவனம் எம்ஐ6, சிஐஏ மூலம் ஏற்பாடு செய்தது. அதன் மூலம் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் கர்னல் கடாபியை சந்தித்து நட்பை உருவாக்கிக் கொள்வதற்கான பாதையை எம்ஐ6 போட்டுக் கொடுத்தது.
பெல்ஹாஜூம் அவரது மனைவியும் பிரிட்டனுக்கு போகும் வழியில் பாங்காக்கில் பிடிக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் காலனியான டியேகோ கார்சியா வழியாக திரிபோலியின் தாஜௌரா சிறைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பெல்ஹாஜ் ஆறு ஆண்டுகளும், அவரது மனைவி நான்கரை மாதங்களும் கடாபியின் பாதுகாப்புத் தலைவர் மௌசா கௌசாவின் கருணை நிறைந்த பாதுகாப்பில் கழித்தார்கள். கர்ப்பமாக இருந்த பெல்ஹாஜின் மனைவி ஒரு மம்மியை போல ஸ்ட்ரெச்சரில் கட்டி வைக்கப்பட்டிருந்தார், பெல்ஹாஜ் முறையாக சித்திரவதை செய்யபட்டார். சித்திரவதையில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று கௌசா இப்போது மறுத்திருக்கிறார்.
இந்த பரிசுடன் வந்த எம்ஐ6-ன் மார்க் ஆலனின் கடிதம் விமான தபால் (பெல்ஹஜ்) பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கான வாழ்த்துக்களை கௌசாவுக்கு தெரிவித்தது. “பல ஆண்டுகளாக நாம் வளர்த்துக் கொண்ட தனிச் சிறப்பான உறவை வெளிப்படுத்த நாங்கள் உங்களுக்கும் லிபியாவுக்கும் செய்யும் குறைந்தபட்ச சேவை இதுதான்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள், பல்லை இளித்துக் கொண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை, கடாபி தனது பிரபலமான பாலைவன கூடாரத்தில் வரவேற்றார். பயங்கரவாதத்தை கை விடுவதாகவும், பேரழிவு ஆயுதங்களுக்கான திட்டங்களை கை விடுவதாகவும் கடாபி அறிவித்தார். அந்தத் திட்டங்கள் போலியானவையாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த ஒப்பந்தம், ஈராக் ஆக்கிரமிப்பு மோசமாக போய்க் கொண்டிருந்த கால கட்டத்தில் டோனி பிளேயர் வாஷிங்டனில் தலை நிமிர்ந்து நடக்க உதவியது.
இந்த வினோதமான உறவின் மற்ற விபரங்கள் போலியாக இருக்கவில்லை.
1. பிரிட்டன் பெல்ஹாஜை கடாபியிடம் கொண்டு சேர்த்தது மட்டுமின்றி, லிபியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியது.
2. அடுத்த சில மாதங்களுக்குள் கடாபி, எம்ஐ6 அதிகாரியாக இருந்து அரசாங்கத்தின் முழு ஒப்புதலுடன் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) ஆலோசகராக பொறுப்பேற்றிருந்த ஆலன் துணையுடன் வருகை புரிந்த  பிரௌன் பிரபுவை லிபியாவுக்கு வரவேற்றார்.
3. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் 15 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உடைந்து போகும் அபாயம் ஏற்பட்ட போது, ஆலன் லிபியாவைச் சேர்ந்த லாக்கர்பீ குண்டு வெடிப்பாளர் அப்துல் பாஸ்த் அல் மெக்ராஹியை விடுதலை செய்யும்படி தனது முன்னாள் எஜமான் ஜாக் ஸ்ட்ராவிடம் வலியுறுத்தினார்.
4. கடாபியின் உலகப் புகழை உயர்த்த உதவிய மானிடர் கன்சல்டன்சியின் மூத்த ஆலோசகராக ஆலன் இருந்தார் . அந்த கன்சல்டன்சி லண்டன் பொருளாதார கல்லூரிக்கு ஆலோசனை வழங்கியது. லண்டன் பொருளாதார கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் ஆலன் பங்கேற்றிருந்த நேரத்தில் கடாபியின் மகன் பெரிதும் போற்றப்பட்ட தனது பிஎச்டி பட்டத்தை அங்கிருந்து பெற்றார்.
2011 ல், கடாஃபியின் ஆட்சி வெளிப்படையாக தள்ளாடியபோது பிரிட்டன் அமைதியாக அவரை கைவிட்டது. பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன. ஆனால் திரிபோலி வீழ்ந்த போது 2004 சந்திப்பு குறித்த ஆவணங்களை தேடி கைப்பற்றும்படி அங்கிருந்த நேட்டோவின் சிறப்புப் படைகளுக்கு உத்தரவிட யாருக்கும் தோன்றவில்லை. எம்ஐ6க்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அங்கு முதலில் போய்ச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் ஆலனின் கடிதத்தை கண்டு பிடித்து பத்திரிகையாளர்களிடம் கொடுத்தது.
இன்னும் மோசம் என்னவென்றால், பெல்ஹாஜ் சிறையிலிருந்து வெளி வந்து இப்போது த்ரிபோலி இராணுவக் குழுவின் தலைவராக இருக்கிறார். அதை விட மோசம், அவரது பழைய எதிரி கௌசா, கடாபி வீழ்ந்த போது புத்திசாலித்தனமாக கட்சி மாறியிருந்தார். அவர் நடந்தவற்றில் பிரிட்டிஷாரின் பங்கு பற்றிய பெல்ஹாஜின் சந்தேகங்களை உறுதி செய்தார்.
பெல்ஹாஜ் தனது மனக் குறைகளை மூடி வைத்துக் கொள்பவராக இல்லாமல் ‘சித்திரவதைக்கு உடந்தை’, ‘மக்கள் பொறுப்பில் முறைகேடு’ என்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஆலன் மீதும் பிரிட்டிஷ் அரசு மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வாயை மூட பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 10 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டு (சுமார் 8 கோடி ரூபாய்கள்) வழங்கியதை வாங்க மறுத்து விட்டிருக்கிறார். பீதி மற்றும் குளறுபடிகள் நிறைந்த இந்த கதை ஸ்மைலியின் மக்களை (1979ல் வெளியான உளவாளி நாவல்) தோற்கடித்து விடுகிறது.
எம்ஐ6 வழக்கம் போல, ‘அமைச்சரவை அங்கீகரித்த அரசு கொள்கையை மட்டுமே தான் பின்பற்றுவதாக’ சொல்கிறது. அந்த கால கட்டத்தில் இதனுடன் தொடர்புள்ள அமைச்சர்கள் வெளியுறவுத்துறை செயலர் ஜாக் ஸ்ட்ரா மற்றும் பிரதம மந்திரி டோனி பிளேயர். அவர்களுக்கு 2004-ல் கடாபியின் தலைகீழ் மன மாற்றம் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் முழுமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். பெல்ஹாஜின் கடத்தல் மற்றும் சித்திரவதை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று மறுக்கிறார்கள். அந்த நிகழ்வும் மெக்ராஹியின் விடுதலையும் எண்ணெய் வர்த்தகத்துக்கான (பெட்ரோல்) பதில் உதவி என்பதை மறுத்தார்கள். ‘அமைச்சர்களுக்கு பொறுப்பு இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புகார் சொல்லும் குரலில் சொல்கிறார்கள்.
‘அவரது எஜமானர்கள் மிகத் தீவிரமாக விரும்பியதைத்தான் அவர் செய்தார்’ என்று ஆலனை நியாயப்படுத்தலாம்.
2004-ல் டோனி பிளேயர் வாஷிங்டனுக்கு அடிமைப்பட்டிருந்தார். போராடும் இஸ்லாமுக்கு எதிரான ஜார்ஜ் புஷ்ஷின் சிலுவைப் போரில் தன் பங்குக்கு ஒரு வெற்றியை காட்ட தவித்துக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் சிஐஏயின் சிறை பிடிக்கும் விமானங்கள் முஸ்லீம் கைதிகளை தரையில் கட்டி வைத்துக் கொண்டு உலகை வலம் வந்து கொண்டிருந்தன. அத்தகைய சூழலில் கருணை பொருந்திய ஒரு சர்வாதிகாரிக்கு பரிசாக இன்னொரு தம்பதியை பலி கொடுப்பது பெரிய விஷயமாக தோன்றவில்லை. இதைப் பற்றிய விபரங்களை ஜாக் ஸ்ட்ராவிடம் ஆலன் தெரிவித்தாரா என்பதை அவரோ ஜாக் ஸ்ட்ராவோ இதுவரை சொல்லவில்லை. ஆலன் எம்ஐ6-ன் தலைவராகும் முயற்சியை ஜாக் ஸ்ட்ரா ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போதைய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், இதைப் பற்றி கருத்து சொல்ல மறுப்பதற்கு பெல்ஹாஜின் நீதி மன்ற வழக்கை ஒரு சாக்காக பிடித்துக் கொண்டார். ‘மொத்த விஷயமும் நீதி மன்றத்தில் இருக்கிறது’ என்று பெரிய புன்னகையுடன் அவர் சொன்னார். அவர் கருத்து சொல்வது வழக்கை பாதிக்கும் என்று  என்று கருதுவது, வழக்கு வெளிப்படையாக நடத்தப்படும் என்ற ஊகத்தில்தான். ஆனால், இது போன்ற வழக்குகளை ரகசியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுகிறது என்கிறது அமைச்சரவை.
புதை மணல் இன்னமும் கெட்டியாகிறது. பிப்ரவரி 22 அன்று, லண்டனில் இருக்கும் மேல் முறையீடு நீதிமன்றம் (பிரபுக்கள் சபை) “பயங்கரவாதத்தின் மீதான போர்” தன்னையும் வசியப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தியது.  இணையத்தில் “பயங்கரவாதம்” பற்றிய தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட லண்டன் பல்கலைக்கழக மாணவர் முகமது குல்லுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அது உறுதி செய்தது. பரிதாபத்துக்குரிய, தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த முகமது குல்க்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்ததோடு நின்று விடாத மாண்புமிகு பிரபுக்கள், பயங்கரவாதத்தின் மீதான போர் பற்றிய அரசியல் கோட்பாட்டை விவரிக்கவும் செய்தார்கள்.
“பயங்கரவாதத்தின் மீதான போர் குல் போன்றவர்கள் மீது மட்டும் நடத்தப்படவில்லை. உலகின் எந்தப் பகுதியிலும் ஆயுதப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் கிளர்ச்சியாளர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். அத்தகைய நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களுக்காக அந்த நாட்டு அரசாங்கத்தை பாதிப்பதாக இருந்தால் அவை பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பங்காகவே கருதப்பட வேண்டும்”. பயங்கரவாதம் என்பது வன்முறை செயல்கள் மட்டும் இல்லை. ‘அரசியல் அல்லது மத அல்லது இன அல்லது சித்தாந்த வேறுபாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முன் வைக்கப்படும் எந்த ஒரு அச்சுறுத்தலும் அதன் வரையறையில் அடங்கும். இந்த அச்சுறுத்தல்கள் “ஒரு மின்னணு கட்டமைப்புக்கு (இணையம்) தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது’ ‘பொது சுகாதாரம் அல்லது பொது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது’ போன்ற செயல்களையும் உள்ளடக்கியவை.
அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வரையறையில் எந்த ஒரு அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மாற்றுக் கருத்தாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் ராணுவத்தை தாக்குபவர்கள் யாரையும் பயங்கரவாதி என்ற வரையறையிலிருந்து ஒதுக்க முடியாது என்று தோன்றுவதாக பிரபுக்கள் குறிப்பிட்டனர். குர்துகள், கோசோவர்கள், பெங்காசியர்கள், திபெத்தியர்கள், இரானிய போராளிகள், இன்றைய சிரிய எதிர்க் கட்சியினர் அனைவருக்கும் அதுதான் தலைவிதி. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான்.
இது முட்டாள்தனமானது. முகமது குல்லின் பின் லாடன் பற்றிய பகற்கனவுகள் கடாபியை எதிர்த்த பெல்ஹாஜின் எதிர்ப்புக்கு எந்த வகையிலும் ஈடானவை அல்ல. ஆனால் இரண்டு பேருமே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கையாட்களால் பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்கள்.
அவர்களுடன் கூடவே உலகெங்கும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக போராடும் அந்த அரசுகளின் ‘ஆயுதப் படைகளுக்கு’ தீங்கு விளைவிக்க எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான மக்கள் இந்த சட்ட புதைகுழியில் சிக்கியிருக்கிறார்கள். போராடும் ஒவ்வொரு மாணவரும் பயங்கரவாதி, ஒவ்வொரு இணைய ஹேக்கரும், டீக்கடையில் மாற்றுக் கருத்து பேசுபவரும் சுதந்திர போராட்ட வீரர் அல்லது மற்றும் கிளர்ச்சி படைத் தலைவர். பயங்கரவாதத்தின் மீதான போர் தான் கை வைக்கும் அனைத்தையும் கெடுக்கிறது. நாடாளுமன்றம் ஒடுக்குமுறைக்கான அரிவாளின் ஒவ்வொரு திருகுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.
___________________________________________________________________________
நன்றி: சைமன் ஜென்கின்ஸ் – கார்டியன்
தமிழாக்கம்: அப்துல்.

கருத்துகள் இல்லை: