திங்கள், 16 ஏப்ரல், 2012

BJP பூப்போல் தூய்மையான அமைப்பு BUT ஊழலின் எலும்புக்கூடுகளும் எரிந்துபோன உடல்களும் தான்

திருவாளர் பரிசுத்தம்! -சோலை!

எங்கள் கட்சி வித்தியாசமான இயக்கம். தும்பைப் பூப்போல் தூய்மையான அமைப்பு. பாரதத்தின் பண்பாட்டைக் காப்பதே நாங்கள்தான் என்று முன்பெல்லாம் பி.ஜே.பி.யினர் பெருமை பேசுவார்கள்.
அவர்கள் எப்படி பாரதத்தின் பண்பாட்டைக் கண்ணின் மணிபோல் காக்கிறார்கள் என்பதனைக் கர்நாடக சட்டமன்றத்திலும் பார்த்தோம். குஜராத் சட்டமன்றத்திலும் பார்த்தோம். அமைச்சர்கள் காமன் கணையில் அடிபட்டு மன்றத்திலேயே நீலப்படங்களில் நீந்திக்கொணடிருந்தார்கள் என்று புகார்கள் எழும்பின. இதற்கு மேல் வேறு எவர்தான் இப்படிப் பாரதப் பண்பாட்டைக் காக்க முடியும்?
ஊழல் என்பதற்கு ஆரம்பத்தில் ஜார்கண்ட் மாநிலத் தில்தான் பி.ஜே.பி. புதிய இலக்கணம் வகுத்தது. கர்நாடக மாநிலத்தில் ஊழலின் சிகரத்தையே தொட்டது. முத லமைச்சரிலிருந்து பலப்பல அமைச்சர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
முதலமைச்சரும் பதவி இழந்தார். இன்னும் சில அமைச்சர்களும் வீட்டிற்குப் போனார்கள்.
முதல்வரின் புதல்வர்கள் நடத்தும் கல்வி அறக்கட்ட ளைக்கு ஒரே ஆண்டில் முப்பது கோடி ரூபாய் நன் கொடை வந்ததாக கணக்கு. அதன்மீதும் எடியூரப்பா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். பெங்களூரு நகரில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் மலிவான விலைக்கு அவருடைய சொந்தபந்தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகப் புகார். அந்த நிலங்கள் இப்போது திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன.
சுரங்க ஊழல் தாதாக்கள்தான் ஜார் கண்ட்டிலும், கர்நாடகாவிலும் பி.ஜே.பி.யின் கஜானாக்கள். எடியூரப்பாவிற்கு 450 கோடி ரூபாய் கொடுத்தோம் என்று அண்மையில் பெல்லாரி சுரங்க ஊழல் புகழ் ரெட்டி பிரதர்ஸ் தெரிவித்தனர்.
மேலிடத்தின் அனுமதியோடு பி.ஜே.பி. எம்.எல்.ஏ.க்களை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். அதற்கு அதன் குருபீடத்திற்குத் தட்சணை செலுத்த வேண்டும். அண்மையில் ஜார்கண்ட் மாநிலத் திலும், உத்தரகாண்ட் மாநிலத்திலும் ராஜ்ய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக் களித்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபைக்கு இரண்டு தொழிலதிபர்கள் போட்டியிட்டனர். அதேபோல உத்தர காண்ட்டிலும் செல்வச் சீமான்கள் போட்டியிட்டனர்.
கொஞ்சம்கூட கூச்சப்படாது வாக்குப்பதிவு மையத்திற்கு அருகிலேயே அந்தச் சீமான்கள் தங்கள் கடைகளைத் திறந்துவிட்டனர். கையில் காசு, வாயில் தோசை என்ற சித்தாந்தத்தைச் செயல்படுத்த ஆரம் பித்துவிட்டனர். கோடிகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஓட்டுப் போடுங்கள் என்பதுதான் அந்தக் கறுப்புப் பண காவலர்களின் கோரிக்கை. சந்தையில் மாடுகளை வாங்குவது போல அவர்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கட்சித் தலைமையிடம் அனுமதியும் பெற்றுவிட்டனர்.
ஜார்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. ஜார்கண்ட்டில் இரண்டரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
இப்போது அந்த மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.
பி.ஜே.பி. வித்தியாசமான கட்சி அல்லவா? எனவே அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கும் விலை உண்டு. அமைச்சர் பெருமக்களுக்கும் விலை உண்டு. அறிஞர் பெருமக்கள், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் இடம் பெற வேண்டிய ஆன் றோர் மன்றம் ராஜ்யசபை. இப்போதெல்லாம் அந்த மன்றத்தில் செல்வபுரியினரும், தொழிலதிபர்களும் திடீர் குபேரர்களும்தான் நுழைகிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தருகின்றன. ராஜ்யசபா சீட்டு என்பது இப்போது விற்பனைப் பொருளாகிவிட்டது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காகவும், மவுனமாக இருப்பதற்காகவும் பி.ஜே.பி. உறுப்பினர்கள் எத்தனையோ தட்சணை பெற்றனர் என்பதனைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். மகிழ்ந்தோம்.
இந்தியாவிலேயே பெரிய பரிசுத்தம் என்று ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டார். அவர்தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்று மணற் கோபுரம் மீது அவரை உட்கார வைத்தனர். இப்போது அந்தப் பரிசுத்தம் அரசியலில் சுத்தமா அசுத்தமா என்பது அம்பலத்திற்கு வந்திருக் கிறது. அவர்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடுகளால் 46 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருப்பதாக மாநில அரசின் கணக்குத் தணிக்கைக் குழு அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. நரேந்திர மோடிக்கு வேண் டப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் காட்டினர். அதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி இழப்பு. அந்த நிறுவனங்களுக்கோ கொள்ளை லாபம் என்று கணக்குத் தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் என்பது மாநில அரசுக்குச் சொந்தமானது. கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பதற்கான உரிமையை நரேந்திர மோடி இரண்டு நிறுவனங்களுக்கு அளித்தார். அந்த நிறுவனங்கள் மோடியின் கூட்டாளிகளுக்குச் சொந்தமானவை. கத்துக்குட்டிகள் நிர்வகித்து வருகிறார்கள். அந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களில் என்னென்ன ஓட்டை உடைசல்கள் என்பதனை தணிக்கைக் குழு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

கிருஷ்ணா-கோதாவரி படுகையில் 102 கோடி ரூபாய் செலவில் துரப்பணப் பணிகளை முடித்துவிடலாம் என்று மதிப்பிட்டிருக் கிறார்கள். ஆனால் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.

அந்தப் படுகையில் நான்கு துரப்பணக் கிணறுகளைத் தோண்டிப் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள். ஆனால் வெகுதூர ஆழத்தில் 16 கிணறுகள் தோண்ட வேண்டி வந்தது. இதற்கு அந்த நிறுவனங்கள் கனடா நிறுவனத்தை துணைக்கு அழைத்து வந்தன. அந்த நிறுவனத்தை தொழில்நுட்ப மேதைகள் நிர்வகிக்கிறார்களாம். ஆகவே கூட்டு முயற்சி என்றாலும், அந்த நிறுவனம் பத்து பைசா கூட பங்குத் தொகை போடவில்லை. அந்தப் பங்குத் தொகையை நரேந்திரமோடி அரசே செலுத்தியிருக்கிறது.

நிலவியல், கடலியலை ஆராய்ந்து பணிகளைத் தொடங்கினர். எனவே குஜராத் அரசின் கஜானா காலியாகிவிட்டது என்று தணிக்கைக் குழு அறிக்கை தகவல் தருகிறது.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் துரப்பணப் பணிகளுக்கு மட்டும் 531 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் 6 ஆயிரத்து 265 கோடி செல வாகியிருக்கிறது.

நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்த ஆண்டு மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இரண்டு நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் அவர் அரியணை ஏறியதிலிருந்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது.

மோடியின் செல்லப்பிள்ளை நிறுவனம் அதானி எரிசக்தி கம்பெனியாகும். மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய எரிவாயுவை குஜராத் பெட்ரோலிய நிறுவனம் கொள்முதல் செய் திருக்கிறது. அன்றைய மார்க்கெட் நிலவரத் திற்கு ஏற்ப விலை கொடுத்திருக்கிறது. ஆனால் அதானி நிறுவனத்திற்கு அதனைவிட குறைவான விலைக்கு கொடுத்திருக்கிறது. அரசுக்கு நூறு கோடிக்கு மேல் நட்டம். அதானி நிறுவனத்திற்கு ஒரே ஆண்டில் மட்டும் 70 கோடி ரூபாய் லாபம். அந்த நிறுவனம் ஏற்கனவே பெருந்தொகையை பாக்கியாக வைத்திருக்கிறது. அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தற்போது எடுக்கின்ற எரிவாயுவிற்கு மட்டும் பணத்தைக் கட்டுங்கள் என்று அதற்கு சலுகை அளித்திருக்கிறார்கள்.

இப்படி தனக்கு வேண்டியவர்களை மோடி மேயவிட்டதால் குஜராத் பெட்ரோலியம் நிறுவனம் பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. அதே சமயத்தில் அந்த அதானி நிறுவனம் எப்படியெல்லாம் கொள்ளை அடிப்பதற்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் என்பதும் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அப்போது நட்டத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முன்வந்தனர். மும்பை நட்சத்திர ஓட்டலும் டெல்லி நட்சத்திர ஓட்டலும் விற்கப்பட்டன. அந்த ஓட்டல்களை வாங்கியவர்கள் பி.ஜே.பி.யின் நெருங்கிய கூட்டாளிகள். அவர்கள் அந்த ஓட்டல்களை அடுத்த சில மாதங்களிலேயே விற்றுவிட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு பல கோடிகள் லாபம். அதேபோன்ற ஊழல் நரேந்திரமோடியின் பரிபாலனத்திலும் நடந்திருக்கிறது. கட்ச் வளைகுடாவின் கடற்கரை ஓரம் ஒரு சதுர கிலோமீட்டர் நிலம் தற்போது ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று விற்பனையாகிறது. இதுதான் இன்றைய மார்க்கெட் நிலவரம்.

ஆனால் மோடியின் கூட்டாளி அதானி கம்பெனிக்கு ஒரு சதுர கிலோமீட்டர் ஒரு ரூபாய் என்று விற்கப்பட்டி ருக்கிறது. சில இடங்களில் 32 ரூபாய் என்று விற்கப் பட்டிருக்கிறது. இப்படி அடிமாட்டு விலைக்கு ஐந்து கோடியே 84 லட்சம் சதுர கிலோமீட்டர் அரசு நிலம் அதானி கம்பெனிக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனம் என்ன செய்தது? ஒரு சதுர கிலோமீட்டர் ஒரு ரூபாய் என்று வாங்கிய நிலத்தை ஒரு சதுர கிலோ மீட்டர் ஆயிரத்து 500 ரூபாய் என்று உடனடியாக வேறு தொழிலதிபர் களுக்கு விற்பனை செய்துவிட்டது.

அதானி நிறுவனம் இடைத் தரகர் வேலைதான் செய்திருக்கிறது. பல்லாயிரம் பல்லாயிரம் கோடியை சுருட்டிவிட்டார்கள். இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது நமக்குத் தெரியாது. நாட்டிற்கும் தெரியாது. ஆனால் மிஸ்டர் பரிசுத்தம் (மோடி) விளக்க வேண்டும்.

திருவாளர் பரிசுத்தம் எவ்வளவு பெரிய மகா யோக்கியர் என்பதற்கு இன்னொரு உதாரணம். அவருடைய ஆட்சியின் மகா ஊழல்களைத் தணிக் கைக் குழு வகுத்துத் தந்துவிட்டது. அதனை மரபுப்படி சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சென்ற வாரம்தான் அந்த மன்றக் கூட்டம் முடிவடைந்தது.

அந்தக் கூட்டம் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு காரணம் கூறி சட்டமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முடியும் வரை அவர்கள் அவைக்கு வரக்கூடாது என்று சபாநாயகர் உத்தர விட்டார். அவை நடவடிக்கைகளின் கடைசி நாள். அவை முடிவதற்கு சற்று முன்பு தணிக்கைக் குழு அறிக்கையைச் சமர்ப் பித்தனர். விமர்சிப்பதற்கோ வினா தொடுப்பதற்கோ எவருமே இல்லை. மிஸ்டர் பரிசுத்தம் விவாதத்திற்கு வழியின்றி செய்துவிட்டார்.

இஸ்லாமிய மக்களின் ரத்தத்திலும் கண்ணீரிலும் நீந்தித்தான் திருவாளர் பரிசுத்தம் முதன் முதலாக அரியணை ஏறினார். அப்போது தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகளும் எரிந்துபோன உடல்களும் தான் கிடைத்தன. இப்போது தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் தோண்டத் தோண்ட ஊழல்கள், மகா ஊழல்கள்... மகா மகா ஊழல்கள்தான் காணக் கிடைக்கின்றன.

thanks nakkeeran +vijayakumar velacheri

கருத்துகள் இல்லை: