செவ்வாய், 17 ஏப்ரல், 2012

Hindi நடிகையை கொன்று தலையுடன் சுற்றிய ஜோடி: பணத்துக்காக


இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மதூர் பண்டார்கர் தயாரித்த, "ஹீரோயின்' என்ற படத்தில், சிறிய வேடத்தில் நடித்தார் மீனாட்சி தபா. 2011ம் ஆண்டில் வெளியான பேய்ப் படமான "404'லும் நடித்துள்ளார்.ஒரு மாதத்திற்கு முன், மும்பை அம்போலியில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை என, புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, வழக்கறிஞர் ஜோடி ஒன்றை கைது செய்தனர். இவர்களும், சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தவர்களே.அமித் ஜெய்ஸ்வால் (36) மற்றும் பிரீதி எல்வினா சூரின் என்ற அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:
ஜெய்ஸ்வாலும், சூரினும் அலகாபாத்தில் வழக்கறிஞருக்கு படித்தவர்கள். அங்கு, மாணவர்களுக்கு தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தை நடத்தியுள்ளனர். அதில், போதிய வருமானம் இல்லாததால், கடந்த ஆண்டு மும்பை வந்து, விரார் என்ற இடத்தில் தங்கியுள்ளனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துள்ளனர். அப்படி அலைந்த போது, திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில், நடிகை மீனாட்சி தபாவுடன் நட்பு கொண்டுள்ளனர்.

அப்போது, தபா அவர்களிடம், "நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பொழுதுபோக்காக, பாலிவுட் படங்களில் நடிக்கிறேன்' எனக் கூறியுள்ளார். ஏற்கனவே திருமணமான ஜெய்ஸ்வாலுக்கு, சூரினைச் சந்தித்த பின், அவரின் திருமண வாழ்வில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், இருவரும் சினிமாவில் நடிக்கலாம் என, மும்பை ஓடி வந்துள்ளனர். மும்பை வந்த அவர்கள், மீனாட்சி தபா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என அறிந்ததும், அவரை கடத்தி பணம் பறிக்கத் திட்டம் போட்டனர்.கடந்த மாதம் 13ம் தேதி, திரைப்பட படப்பிடிப்பு ஒன்று இருப்பதாகக் கூறி, தபாவை அலகாபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். போகும் வழியில் கோரக்பூரில் தபாவை கொன்று, அவரின் ஏ.டி.எம்., கார்டு மற்றும் சிம் கார்டை எடுத்துக் கொண்டுள்ளனர். பின், தபாவின் தாயாரை தொடர்பு கொண்ட இருவரும், அவரிடம், 15 லட்ச ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளனர். தரவில்லை எனில், தபாவை வைத்து ஆபாசப் படம் எடுத்து விடுவோம், அவரை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மேலும், தபாவின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும்படி, அவரின் சகோதரரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தபாவின் சகோதரர் நவ்ராஜ், டேராடூன் போலீசில் புகார் செய்தார். அவர்கள், அந்தப் புகாரை அம்போலி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.தபாவை கடத்திய ஜோடியை, போலீசார் தேடிக் கொண்டிருக்கும் போதே, நவ்ராஜ் இருவருக்கும், 60 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். தபாவின் மொபைல்போனில் இருந்து ஜெய்ஸ்வாலும், சூரினும் பேசியுள்ளதால், அதை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
ஆரம்பத்தில், குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்த இருவரும், பின் ஒப்புக் கொண்டனர். ஆனாலும், தபாவின் உடலை போட்டது எங்கே என்பதை தெரிவிக்கவில்லை. தபாவை கொன்ற அவர்கள், உடலை ஒரு இடத்தில் போட்ட பின், தலையை மட்டும், இரண்டு நாட்களாக தங்களுடன் வைத்திருந்துள்ளனர். அதன்பின், இரவில் பஸ் ஒன்றில் அதைப் போட்டுள்ளனர். எந்த பஸ் என்பது, அவர்களுக்கு தெரியவில்லை. அதனால், அதையும் இப்போதைக்கு கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு போலீசார் கூறினர்.

கருத்துகள் இல்லை: