செவ்வாய், 17 ஏப்ரல், 2012

போயஸ் கார்டனுக்குள் போன திவாகரனின் ‘ராஜநடை’ போட்டோக்கள்!

 சின்னம்மா கார்டனுக்கு போயிட்டாங்க. இவங்க நிச்சயம் வெளியே வந்திடுவாங்க
Viruvirupu,
 திவாகரனின் ‘டபுள் நெஞ்சுவலி’ கதையும், கூடவே சில போட்டோக்களும், ஆயிரத்தில் ஒருவனில் சோழர் காலத்துக்கு போனதுபோல, மந்திரக் கதவுகளை எல்லாம் கடந்து, போயஸ் கார்டனுக்கு போய்விட்டன என்கிறார்கள். அடுத்த கட்டம், சோழ இளவரசியின் கருணைப் பார்வைதான்.
எந்த நிமிடமும் சோழ இளவரசி திருச்சி மத்திய சிறைச்சாலை இருக்கும் திசையில் பார்வையை திரும்பலாம் என்ற நம்பிக்கைக் குரல்கள் சசி சின்டிகேட்டில் ஒலிக்கின்றன.
கார்டனுக்குள் சசிகலா மீண்டும் சகோதரியாக நுழைந்தபின் தமக்கு ‘ஒளி தெரிவதாக’ நினைத்துக் கொண்ட நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர், தற்போது முகம் இருண்ட நிலையில் காணப்படுகின்றனர். கார்டனுக்கு உள்ளே சென்ற சசிகலாவால், இன்னமும் ஏன் தங்களை வெளியே கொண்டுவர முடியவில்லை என்பது இவர்களுக்கு புரியவில்லை.

என்னதான் ஜெயலலிதாவுக்கு இவர்கள்மீது கோபம் இருந்தாலும், சசிகலா கார்டனுக்குள் சென்றுவிட்டால், ஜெயலலிதாவின் மனதை மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை மன்னார்குடி குடும்பத்தில் பரவலாக இருந்தது. ஆனால், அதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல்தான் அவர்கள் குழம்புகின்றனர்.
குழப்பம் அவர்களுக்கு மட்டுமல்ல, காவல்துறைக்கும்தான்.
“வழிமாறிச் சென்ற சகோதரியை மீண்டும் வரவேற்கிறேன்” என்ற ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான உடனே, நடராஜன், திவாகரன், ராவணன் மீதான வழக்குகள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்ற ஊகம் திருச்சி, மற்றும் தஞ்சை காவல்துறை அதிகாரிகளுக்கு இருந்தது. “ஆகவேண்டியதை கவனியுங்கள்” என்ற மெசேஜ் சென்னையில் இருந்து எந்த நிமிடமும் வந்துவிடும் என்று பார்த்துக்கொண்டு இருந்தனர்.
தகவல் சென்னையில் இருந்து வருவதற்கு முன்னரே, நடராஜன் மற்றும் திவாகரன்மீது புகார் கொடுத்தவர்கள் வரிசையாக வரத் துவங்கினர். “புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்” என்றார்கள் அவர்கள் குரலில் லேசான நடுக்கத்துடன்.
தமாஷ் என்னவென்றால், திருச்சி மற்றும் தஞ்சை போலீஸ் அதிகாரிகளே, “கைது எபிசோட் முடிந்துவிட்டது. இனி புகாரை வாபஸ் வாங்குங்கள்” என்று என்கரேஜ் செய்ததும் ஓரிரு நாட்கள் நடந்தது. அந்த நாட்களில்தான், இவர்களின் அந்த வழக்கு வாபஸ்.. இந்த வழக்கு வாபஸ்.. என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்திகன் சென்னைக்கு போனபோது, அங்கிருந்து வேறு விதமான உத்தரவு வந்தது. “மன்னிப்பு சசிகலாவுக்கு மட்டும்தான். அவருடைய தளபதிகளுக்கு அல்ல” என்பதே அந்த மெசேஜ். அப்படி வந்தாலாவது பரவாயில்லை.. உள்ளே இருப்பவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு இரு தஞ்சை அதிகாரிகளுக்கு, மேலிடத்தில் இருந்து டேஸ்கூட விழுந்தது.
இதையடுத்து டெல்டா பகுதியில் மீண்டும் காட்சி மாறியது. புகார் கொடுத்தவர்களிடம், “வாபஸ் வாங்குங்கள்” என்று கூறிய அதே போலீஸ் அதிகாரிகள், மீண்டும் புகார் கொடுத்தவர்களை தாஜா பண்ண வேண்டியதாயிற்று. “ஐயோ சார்.. புகாரை வாபஸ் வாங்கிடாதிங்க”
இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம், புகார் கொடுத்த ஆட்களே இந்த டபுள் ஸ்டான்டை நம்பவில்லை. “சின்னம்மா கார்டனுக்கு போயிட்டாங்க. இவங்க நிச்சயம் வெளியே வந்திடுவாங்க. அப்புறம் 3 மாதத்தில் அவங்கதான் அ.தி.மு.க.-வை நடத்தப் போறாங்க. புகார் கொடுத்த நம்மை கொத்தா தூக்கிருவாங்க” என்று அலறி ஓடியவர்களை துரத்திப் பிடிக்க வேண்டிய நிலை காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
எப்படியோ சமாளித்து, உள்ள கேஸ்களை தக்க வைத்துக் கொண்டார்கள். புதிதாக ஓரிரு கேஸ்களை அரேஞ்ச் பண்ணியும் கொண்டார்கள்.
காவல்துறையின் இந்த மாற்றத்தை சசிகலா சின்டிகேட் ஆட்கள் உள்ளேயும், வெளியேயும் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அதன் பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை துவங்கினார்கள். சசிகலாவுக்கு திவாகரன் மீது பாசம் அதிகம் என்பதால், பாசத்தை வைத்தே ஆளை வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
அதற்காக வந்ததுதான், டபுள் நெஞ்சுவலி என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
திருச்சி மத்திய சிறையில் இருக்கும் திவாகரன், தனக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொன்னார்.
முதலில், மத்திய சிறையுடன் அஃபிலியேட்டட் ஆன மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். “உடலில் எவ்வித பிரச்னையும் இல்லை” என்றார்கள். அதை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.
மீண்டும் மறுநாள் காலை, தனக்கு நெஞ்சு வலிப்பதாக மறுபடியும் கூறினார் திவாகரன். இம்முறை, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அவர்களாலும் இவருக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பொதுப்படையான சில மருந்துகளை வழங்கினர்.
இதற்கிடையே திவாகரனுக்கு நெஞ்சுவலி என்ற விஷயம், கார்டனில் இருந்த சசிகலாவுக்கு உருக்கமான முறையில் அவர்களது உறவு முறை டாக்டர் ஒருவரால் சொல்லப்பட்டது. திவாகரன் கைதியாக போலீஸ் சூழ கொண்டு செல்லப்படும் போட்டோக்கள் சிலவும், சசிகலாவின் பார்வைக்காக மற்றொரு நபர் மூலம் கார்டனுக்குள் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த போட்டோக்களில் தளர்ந்த நடையுடன் திவாகரன் பரிதாப போலத்தில் நடந்து செல்லும் காட்சியைப் பார்த்தால், சசிகலா எப்படியும் தனது மேக்ஸிமம் ‘சக்தியை’ உபயோகித்து, திவாகரன் தொடர்பான சாதகமான ஆர்டரை பெற்று விடுவார் என்று இப்போது சசிகலா சின்டிகேட் வட்டாரங்களில் நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
பார்க்கலாம், சசிகலாவின் சக்தி எதுவரை போகிறது என்பதை!

கருத்துகள் இல்லை: