புதன், 18 ஏப்ரல், 2012

ஆப்கான் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த தாலிபான்கள்: 150 மாணவிகள் உயிர் ஊசல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வியை எதிர்க்கும் தாலிபான் தீவிரவாதிகள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீரில் விஷம் கலந்தனர். அந்த தண்ணீரைக் குடித்த 150 மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணத்தில் ரஸ்டாக் நகரில் உள்ளது நஸ்வான் மார்காசி பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பெண் கல்விக்கு எதிராக உள்ள தாலிபான் தீவிரவாதிகள் அந்த பள்ளியில் உள்ள குடிநீரில் விஷத்தைக் கலந்தனர். இதையறியாது அந்த தண்ணீரைக் குடித்த 150 மாணவிகளுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாலிபான்கள் குடிநீரில் விஷம் கலக்கவில்லை என்று உள்ளூர் தாலிபான் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்கா உதவியுடன் ஹமீத் கர்சாய் அதிபராவதற்கு முன்பு ஆப்கானிதானை தாலிபான்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. கர்சாய் ஆட்சியில் பெண்கள் கல்வி கற்கின்றனர், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தாலிபான்கள் பெண்கள் பள்ளிக்கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் கல்வி கற்க இடையூறு செய்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: