சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கும், தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு பகுதியை குறைத்து காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சினையை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் எழுப்பினார்கள்.
அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
சட்டமன்ற கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அவரது விருப்பப்படி அறைகளை ஒதுக்க முடியும்.
உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அறைகள் ஒதுக்கப்படும். அந்த இடம் எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல. பேரவை தலைவர் விருப்பப்படி உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கவோ, மாற்றி அமைக்கவோ அதிகாரம் உண்டு. அதுபோன்று இந்த அறையும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் கற்பிக்க இயலாது.
அவைத் தலைவரின் விருப்பப்படி தற்போதைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தவறாக விமர்சனம் செய்யக்கூடாது.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கு பேரவை தலைவர்தான் அறை ஒதுக்குகிறார். அதற்காக அதை பட்டா போட்டது போல பேசக்கூடாது. அதில் மாற்றம் செய்ய சபாநாயகருக்கு முழு அதிகாரம் உண்டு.
அமைச்சர் செங்கோட்டையன்:
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 61 பேர் இருந்தோம். அதற்கு ஏற்ப எங்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதை ஒரு பிரச்சினையாக எடுக்க கூடாது. (இதையடுத்து தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்கள் கருத்தை பதிவு செய்ய முயன்றார்கள்)
சபாநாயகர்: இருக்கும் அறையில் பெரிய அறை உங்களுக்கு வழங்கப்பட்டதுதான். எனவே தேவையில்லாமல் கருத்துக்களை தெரிவிக்காதீர்கள்.
அமைச்சர் செங்கோட்டையன்:
சபாநாயகர் தீர்ப்பு வழங்கிய பிறகு அதுபற்றி விவாதிக்க முடியாது. இதையடுத்து தே.மு.தி.க. வினர் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து விட்டு வெளிநடப்பு செய்தனர். சபையில் இருந்து வெளியேறிய பிறகு தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 மாதமாக எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை அவமதிப்ப தற்காகவே அறையின் அளவை பாதியாக குறைத்து விட்டார்கள். எங்கள் அலுவலகத்தில் உதவியாளர் அறையை மட்டும் மாற்றப் போகிறோம் என்று சொல்லிவிட்டு 3 நாள் விடுமுறையில் அறையை பாதியாக குறைத்து விட்டார்கள்.
30 பேர் அமரும் வகையில் இருந்த அறை தற்போது 10 பேர் கூட இருக்க முடியாத அளவுக்கு சுருக்கப்பட்டு விட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை. எங்கள் கட்சித் தலைவரை அவமதிக்கும் வகையில் உள்ள இந்த அறை எங்களுக்கு வேண்டாம் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டோம்.அந்த அறையில் கம்ப்யூட்டர், மேஜை நாற்காலிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். எங்கள் தலைவரை அவமதித்ததால் எங்களுக்கும் அறை வேண்டாம் என்று கடிதத்தில் கூறியுள்ளோம். இனி நாங்கள் அந்த அறையை பயன்படுத்தமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக