வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வீடியோ கேம்ஸ்' கண்ணிற்கு கடும் பாதிப்பு 30 வயதில் மாரடைப்பு:


மதுரை: ""கோடை விடுமுறை விட்டாச்சு... ஏரியா பசங்க சேர்ந்து ஜாலியா கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடலாம் தான். ஆனால் ஒருத்தன்கூட வெளியே வரமாட்டேன்றாங்க. கேட்டால், கம்ப்யூட்டரிலேயே குத்துச்சண்டை, கிரிக்கெட் எல்லாம் விளையாடுறதா சொல்றாங்க,'' - இது கம்ப்யூட்டர் இல்லாத ஒரு அப்பாவி சிறுவனின் ஆதங்க குரல்.

முன்பெல்லாம், பள்ளி விடுமுறை விட்டால் போதும். விளையாட்டு மைதானங்கள் "ஹவுஸ்புல்' ஆகும். (இப்போ நகரில் எங்கே விளையாட்டு மைதானம் இருக்கிறது? என நீங்கள் கேட்பது புரிகிறது) பல்வகை விளையாட்டுகளால் உடலும் வலுவாகும். ஆனால் இன்று கம்ப்யூட்டர்தான் மாணவர்களுக்கு கதி. நண்பர்கள், உறவினர்களை மறந்துவிட்டு, கம்ப்யூட்டர் முன் "தவம்' இருக்கின்றனர். அது அறிவுசார்ந்த தேடுதலுக்காக அல்ல.
விளையாட்டிற்காக. அதற்கேற்ப, மதுரையில் விளையாட்டு தொடர்பான வீடியோ "டிவிடி'க்கள் விற்பனை களைகட்டுகிறது. கார், பைக் ரேஸ் எல்லாம் மாணவர்களுக்கு பழசாகிவிட்ட நிலையில், இன்று குத்துச்சண்டை, கிரிக்கெட், துப்பாக்கிச்சூடு, திருடன் - போலீஸ் விளையாட்டு, விமானம், ரயிலை இயக்குவது, பெண்களுடன் பீச் வாலிபால் என விளையாட்டு "டிவிடி'க்களை அதிகம் வாங்குகின்றனர். 510 விளையாட்டுகள் ஒரே "டிவிடி'யில்கூட கிடைக்கிறது. இதனாலேயே "டிவிடி'க்களின் விலை, தரத்திற்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.2700 வரை விற்கப்படுகிறது. கடந்தாண்டைவிட இந்தாண்டு, விலை ரூ.20 சதவீதம் அதிகரித்துள்ளது. கல்வி, பொதுஅறிவு சம்பந்தப்பட்ட "டிவிடி'க்கள் இருந்தாலும், அதை மாணவர்கள் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். உடல் வலிமை, திறமைகளை வெளிப்படுத்தும் கோடை கால பயிற்சிகள் பக்கம்


இவர்கள் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. ""கோடையில் வழக்கமாகவே விற்பனை அதிகரிக்கும். சீசன் இல்லாத போது, தினமும் 10 "டிவிடி' விற்பனையாகும். தற்போது 50 "டிவிடி' விற்பனையாகிறது. விலையை பற்றி மாணவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை தரமான "டிவிடி'க்கள்தான்,'' என்கின்றனர் விற்பனையாளர்கள். "டிவி'க்கள்தான் மாணவர்களை திசை திருப்புகிறது என்றால், இன்று "வீடியோ கேம்ஸ்', மாணவர்களுக்கு நண்பனாக, உறவினராக இருந்து, உடல், மனநலத்தை பாதிக்க செய்கிறது என்பது உண்மை. இனியாவது பெற்றோர் விழிப்பார்களா?
விடுமுறையை பயனுள்ளதாக்க மாணவர்களுக்கு சில "டிப்ஸ்'
* நூலகங்களில் உறுப்பினராகி, புத்தகங்கள் படிக்கலாம்.
* விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளலாம்
* பாடல், இசை, நடனம், கைவினை என மனதிற்கு பிடித்த விஷயங்களில் பயிற்சி பெறலாம்
* யோகா, தியானம் பயிலலாம்
* 18 வயது ஆகி விட்டால் டிரைவிங் படிக்கலாம்

* நகருக்குள்ளேயே பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு சென்று அவற்றை அறியலாம்
* பேச்சு, எழுத்து பயிற்சிக்கு செல்லலாம்
* தன்னம்பிக்கை பயிற்சி முகாம்களில் பங்கேற்கலாம்
* அம்மா, அப்பா பிறந்த கிராமங்களுக்கு சென்று உறவுகளை புதுப்பிக்கலாம்
* நம்மை சுற்றி உள்ள மரங்கள், பறவைகள் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்
* சேவை அடிப்படையில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கலாம்.

கண்ணிற்கு கடும் பாதிப்பு மதுரை கண் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது : ஒரு நிமிடத்திற்கு 15


முதல் 20 முறை கண்இமைகளை மூடி திறக்கிறோம். "வீடியோ கேம்ஸ்' விளையாடும்போது, இமைகளை மூடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர், "டிவி'க்களை பார்க்கும்போது, கருவிழி முன்னால் ஈரப்பசை காய்ந்து விடும். இதனால் கண் சிவந்து, உறுத்தல் அதிகரிக்கும். கூர்மையாக பார்க்கும்போது, தலைவலி ஏற்படும். ஆர்வம் காரணமாக படிப்பு உட்பட மற்ற விஷயங்களில் கவனசிதறல் ஏற்படும்.

ஓடி விளையாடு...இல்லையேல் 30 வயதில் மாரடைப்பு:
மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்குமணி: உடல் உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்காருவதால், உடல் பருமன் ஏற்படுகிறது. தவிர,
எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். இதனால், பித்தப்பையில் கல், கால் மூட்டு தேய்மானம், சிறுவயதிலேயே சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், கொழுப்பு சத்து அதிகரிப்பு

ஏற்படும். இதுபோன்ற காரணங்களால், 30 வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தினமும் 4 கி.மீ., தூரம் நடப்பதும், ஓடி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் நல்லது.
"வீடியோ கேம்ஸ்' ஒரு போதை! மனநல டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் கூறியதாவது: மாணவர்களுக்கு தொலைநோக்கு பார்வை, பொதுஅறிவு, ஆளுமை தன்மை போன்றவற்றை வளர்ப்பதற்காகவே கோடை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இன்று அறிவுசார்ந்த நூல்களை படிப்பதில்லை. விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. எந்நேரமும் "வீடியோகேம்ஸில்' கவனம் இருப்பதால், மனநலம் மட்டுமல்ல, உடல்நலமும் பாதிக்கும். இது ஒரு வகை போதை. நண்பர்களுடன் பழகி, விளையாடினால்தான் ஒழுக்கம், ஆளுமை தன்மை போன்றவற்றை கற்க முடியும். விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். இயற்கை, சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். அதைவிடுத்து, 4 சுவர்கள், ஒரு கம்ப்யூட்டர்தான் உலகம் என இருந்துவிடாமல் இருக்க, தேவையான முயற்சிகளை பெற்றோர்தான் எடுக்க வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை: