புதன், 18 ஏப்ரல், 2012

டில்லி மாநகராட்சி தேர்தல் BJP மூன்றையும் கைப்பற்றியது.

புதுடில்லி: தலைநகர் டில்லியில், புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளுக்கும் நடந்த தேர்தலில், மூன்றையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. இரண்டை தனிப் பெரும்பான்மை பலத்துடன் பிடித்தாலும், ஒன்றை சுயேச்சைகள் ஆதரவுடன் பிடிக்கிறது.
பிரிக்கப்படாமல் இருந்த டில்லி மாநகராட்சி, பா.ஜ., வசமிருந்தது. இங்கு 2007ல் நடந்த தேர்தலில், பா.ஜ., 164 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 67 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் 17 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தற்போது, டில்லி மாநகராட்சி, வடக்கு டில்லி, தெற்கு டில்லி மற்றும் கிழக்கு டில்லி என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கு மற்றும் தெற்கு மாநகராட்சிகளில், தலா 104 வார்டுகளும், கிழக்கு மாநகராட்சியில், 64 வார்டுகளும் உள்ளன. இந்த மூன்று மாநகராட்சிகளிலும், கடந்த 15ம் தேதி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம், ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு கோடியே பதினைந்து லட்சம் வாக்காளர்களில், 55 சதவீதத்தினர் ஓட்டளித்தனர்.

காலையில் துவக்கம்: தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி, நேற்று காலை துவங்கியது. மொத்தமுள்ள 272 வார்டுகளில், நேற்று மாலை வரை, 206 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாரதிய ஜனதா கட்சி, 106 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 60, பகுஜன் சமாஜ் 14, ராஷ்டிரிய லோக்தளம் 3, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகள், தலா இரண்டு இடங்களிலும், சுயேச்சைகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தெற்கு டில்லி: தெற்கு டில்லி மாநகராட்சியில், மொத்தமுள்ள 104 வார்டுகளில், பா.ஜ., 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 30 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், 26 இடங்களில் முன்னிலை வகித்தன. வடக்கு டில்லி மாநகராட்சியில், மொத்தமுள்ள 104 வார்டுகளில், பா.ஜ., 61 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மற்ற இடங்களில் முன்னிலை வகித்தனர். கிழக்கு டில்லி மாநகராட்சியில், மொத்தமுள்ள 64 வார்டுகளில், பா.ஜ., 34 வார்டுகளைப் பிடித்தது. காங்கிரஸ் 26 இடங்களைப் பிடித்தது. தெற்கு டில்லி மாநகராட்சியில், தனிப் பெரும் கட்சியாக மட்டுமே, பா.ஜ., வந்துள்ளது. அதனால், சுயேச்சைகள் உதவியுடன், மேயர் பதவியை பிடிக்கும். அடுத்த ஆண்டு, டில்லியில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான அரை இறுதிப் போட்டியாகவே, இந்தத் தேர்தலை தேசிய கட்சிகள் கருதின. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: