செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

நீலவேந்தன்
பேச்சாளர், கவிஞர்
பொதுவாக ஒரு புத்தகம் படித்து முடித்தவுடன் நமக்குள் ஏதேனும் ஒரு சலசலப்பையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த வேண்டும். சமீப காலத்தில் அவ்வாறு படித்து முடித்தவுடன் எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம், எழுத்தாளர் வே,மதிமாறன் அவர்கள் எழுதியுள்ள காந்தி நண்பரா? துரோகியா? என்கிற புத்தகம்.
நாம் எல்லோருமே போருக்குப் போகிறோம் பெரும்பாலான சமயங்களில் ஆயுதம் ஏதும் இல்லாமலே! காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி! அம்பேத்கரின் விரோதி!! ஏன்? எப்படி? என்று கேட்டால் தெரியாது. காந்தி நமக்கு எதிரி என்று உணர்ச்சியூட்டப்பட்டிருக்கிறோம். அறிவூட்டப்பட்டிருக்கிறோமா?
காந்தி எதிரிதான் என்று அறிவூட்டியிருக்கிறார் மதிமாறன்.
இன்றைக்கு ஒரு நபர் வெளிநாட்டுக்குப் படிக்கப்போனாலே பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக்கொள்ளும் காலத்தில், இன்றைக்குச் சரியாக 96 ஆண்டுகளுக்கு முன்பாக 1916ம் ஆண்டில் தனது 25ம் வயதில் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் துறை தொடர்பான கருத்தரங்கில் தன்னார்வமாக கலந்து கொண்டு முன்வைத்த இந்தியாவில் சாதிகள் – தோற்றம், வளர்ச்சி, அமைப்பியக்கம் எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
இன்றைக்கும் சாதியம் பற்றிய எவரொருவரின் ஆய்வும் இந்தக்கட்டுரையைத் தொடாமல் முடிந்து விடாது. ஆனால் புரட்சியாளரின் இத்தகைய மேதைமைத்தனத்தையும், சாதி ஒழிப்புச்சிந்தனையையும் புறம் தள்ளிவிட்டு, அவர் சொந்த சாதியினர் என்பதற்காகவே தலித்துகள் அவரைப்போற்றுவதும், அவர் சொந்தசாதியினர் இல்லை என்பதற்காக பிறசாதியினர் அவரைப்புறந்தள்ளுவதும் புரட்சியாளருக்கு இழைக்கப்படும் மேலுமொரு அவமானமாகும்.
அத்தகைய புரட்சியாளர் அம்பேத்கர் அம்பலப்படுத்திய ராமராஜ்ஜியத்தை தூக்கிப்பிடித்த காந்தியின் அயோக்கியத்தனத்தை காந்தியின் வரிகளில் இருந்தே அம்பலப்படுத்தியுள்ள எழுத்தாளர் மதிமாறன் அவர்களின் சமூகக்கடமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
நூலின் 16ம் பக்கத்தில் சொந்த நாட்டு மக்களிடம் தீண்டாமையயும், வெளிநாட்டுக்காரர்களிடம் அடிமை உணர்வையும் காட்டுகிற பார்ப்பனர்களைப்போல தென்னாப்பிரிக்காவில் காந்தி நடந்து கொண்டார் என்று காணப்படுகிற வரிகள் ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்த செய்தியாகும்.
இந்த செய்திக்கு ஆதாரமாக தென்னாப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட பயணத்தின்போது, நடந்த நிகழ்வுகளை அதிலும் குறிப்பாக காந்தியின் வார்த்தைகளில் இருந்தே சுட்டிக்காட்டி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு பொய்யை வைத்து “மகாத்மா” என்கிற பிம்பத்தை கட்டியமைத்திருக்கிறார்கள் எனும் செய்தி அதிர்ச்சியானது மட்டுமல்ல! தெருத்தெருவாக எடுத்துச்செல்லப்பட்டு மக்களை விழிப்பூட்ட வேண்டிய செய்தியாகும்.
ஏதோ காந்தியைத் திட்டுவதினாலேயே நம் கொள்கை எதிரிகளான கோட்சே வகையறாக்கள் மகிழ்ந்து விடக்கூடாது என்று, காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!! என்று இரு பெரும் கருத்தியல் எதிரிகளையும் சம தொலைவில் வைத்து பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்து விட்டார்.
கோவணம் கட்டிய காந்தி கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.
கோட் சூட் போட்ட அம்பேத்கர் தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்தார் என்ற வரிகளில் முற்போக்கு முகமூடி போட்ட அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஏராளம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியத்துணைக்கண்ட அரசியலை சாரமாக்கி புரிந்துகொள்ள ஏதுவான வகையில் போட்டிருக்கிற அம்பேத்கர், பெரியார் காந்தி படங்களைத் தாண்டி எதுவும் சொல்வதற்கு இல்லை.
காந்தியின் எழுத்துக்களில் இருந்தே தான் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு காந்தியை ஆதரிக்கட்டும் என்று எழுத்தாளர் மதிமாறன் விடுக்கிற சவாலுக்கான பதிலை வாய்ச்சொல் வீரர் தமிழருவி மணியன் வகையறாக்களுக்கே விட்டு விடுகிறோம்.
இந்த புத்தகத்தை வாசிப்பதோடு நின்றுவிடாமல் தமிழகத்தின் சேரிகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அம்பேத்கரிஸ்டுகளிடம் இருக்கிறது. அது அவர்களின் கடமையாக கருத வேண்டியதில்லை. அது அம்பேத்கரிஸ்டுகளின் பணியை எளிமையாக்க வந்த வாய்ப்பு என்பதால்.
வன்கொடுமை ஒழிக்க தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தீண்டாமையை ஒழிக்க சாதியை ஒழிக்க வேண்டும். சாதியை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். இந்து மதம் தனது கோரமான முகத்தை காந்தி முகமூடி அணிந்து மென்மையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.
ஆக, காந்தியை அம்பலப்படுத்துவதே, தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பதால், தங்கள் பணியைச் சுலபமாக்க வந்துள்ள கருத்தியல் ஆயுதமான இந்தப்புத்தகத்தை ஏந்திக்கொண்டு சாதி ஒழிப்புப்போருக்கு போவோம் வாருங்கள் என்று உரிமையுடனும் தோழமையுடனும் அழைக்கிறேன்!
போர் ஆயுதம் தந்த எழுத்தாளர் மதிமாறனுக்கு எங்கள் நன்றியை வார்த்தைகளால் சொல்லப்போவதில்லை. சாதி ஒழிப்புப்போரை முன்னைவிட வேகமாக எடுத்துச்செல்லும் செயலால் காட்டுவோம்!!
 என்றும் சாதி ஒழிப்புப் பணியில்
நீலவேந்தன்.

கருத்துகள் இல்லை: