திங்கள், 16 ஏப்ரல், 2012

சென்னையில் நகை அடகுக்காரர் பட்டப்பகலில் கொலை

சென்னை அருகே நெற்குன்றத்தில் அடகுக் கடை உரிமையாளரைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரவாயல் அருகே நெற்குன்றம் சக்திநகரைச் சேர்ந்த போராராம் மகன் குணாராம் (28). இவர் படேல் சாலையில் அடகுக் கடையுடன் நகைக் கடையும் வைத்திருந்தார்.
குணாராம் கடையில் நேற்று தனியாக இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் கடைக்கு வந்து நகைகள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கூடுதல் நகைகளை எடுக்க குணாராம் கடையின் பின்பகுதிக்குச் சென்றபோது கடையில் இருந்த அந்த இளைஞர் சட்டென குணாராமின் கழுத்தை கத்தியால் அறுத்து சாய்த்தார். பின்னர் லாவகமாக தாம் கொண்டுவந்த பேக்கில் நகைகளை அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 500 பேர் மதுரவாய ல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதே கடையில் கடந்த ஆண்டும் கொள்ளை நடந்தும் கொலையாளிகள் பிடிக்கப்படாத நிலையில் உரிமையாளர் கொலையும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேமராவில் கொள்ளையன்?
அடகுக் கடையில் 2 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன. இதில் ஒன்று கடையின் முன் பகுதியிலும், மற்றொன்று கடைக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளன.
இதில் கொலை மற்றும் கொள்ளையனின் உருவம் பதிந்து உள்ளது. இதனால் விரைவில் கொலையாளி பிடிபடக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொள்ளையனின் படத்தை வெளியிட்டு அவனைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 89399 66985, 99406 96901, 98409 30049, 98401 01077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 80 பவுன் என்று கூறப்பட்டாலும் பெரும்பாலானவை கவரிங் நகைகள் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: