வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சந்தைக்கு வந்த விலையில்லா லேப்டாப்!இலவசங்களால் கடன் சுமை

சந்தைக்கு வந்த விலையில்லா லேப்டாப்!
இலவசங்களால் தமிழனின் தலையில் தாங்க முடியாத கடன் சுமை!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினி வழங்குகிறது. இந்த திட்டத்தால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பயனடைவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது. இதற்கான செலவு ரூ. 10, 200 கோடி ஆகும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 9.12 லட்சம் மடிக்கணினிகள்  வழங்கப்படவிருக்கிறது. உலகத்தரத்துக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே மாணவர்களுக்கு “லேப்டாப்’ வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
“நல்ல திட்டம் தான்.. ஆனால்…” என சற்று பீடிகையோடு நம்மிடம் பேசினார் ஒரு கல்லூரிப் பேராசிரியர் –
“ஏற்கனவே லேப்டாப் வச்சிருக்கிற காலேஜ்ல ஸ்டூடண்ட்சுக்கும்  கவர்மெண்ட் ஃப்ரீ லேப்டாப் கொடுக்குது.. அவங்களுக்கு  ரெண்டு லேப்டாப் தேவையில்ல.. அதனால, புரோக்கர் மூலமா கவர்மெண்ட் கொடுத்த லேப்டாப்ப வெளிமார்க்கெட்ல வித்துடறாங்க.. அதுவும் கம்மியான விலைக்கு.. ஆமா.. ஒரு லேப்டாப்போட விலை 12000 ரூபாய் தான். அங்க இங்கன்னு ஒரு சில ஊர்கள்ல விற்க ஆரம்பிச்சிருக்காங்க.. லேப்டாப்ப விற்காத ஸ்டூடண்ட்ஸ் தான்.. பாருங்க சார் இப்படி பண்ணுறாங்கன்னு கம்ப்ளைண்டா சொல்றாங்க..” என்றவர்,“இன்னும் சில மாணவர்கள்  லேப்டாப்பின் அருமை தெரியாமல், பாட்டு கேட்பதற்கும், டி.வி.டி.ல படம் பார்ப்பதற்கும் யூஸ் பண்ணுறாங்க.. அந்த மாதிரி மாணவர்கள் வீட்டுல ‘எதுக்குடா டப்பா சைஸ்ல படம் பார்க்கணும்.. இத அப்படியே வித்து  அந்தப் பணத்துல எல்.சி.டி. டி,வி. வாங்கி பெரிசா படம் பார்க்கலாம்ல..’ என்று பெற்றோர்களே இலவச லேப்டாப்பை விற்பதற்கு தூண்டுகிறார்கள்.” என கவலைப்பட்டார்.

“மடிக்கணினியை நல்ல விதத்தில் பயன்படுத்தும் மாணவர்களும் இருக்கிறார்கள். போகப் போகத்தான் லேப்டாப்பை புரிந்து
கொண்டு அதைச் சரியான முறையில் உபயோகிக்க முற்படுவார்கள்..” எனச் சொல்லும் அந்தப் பேராசிரியர், ”தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.90 ஆயிரம் கோடி என்றும், தனிநபர் கடன் ரூ.15000 என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இது சரியான புள்ளிவிபரம் கிடையாது என மறுத்திருக்கும் கலைஞர் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.74,858 கோடி என்றும் தனி நபர் கடன் சுமை ரூ.12,054 என்றும் கூறியிருக்கிறார். இந்த அளவுக்கு கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசு, எல்லோருக்கும் லேப்டாப் என்பதைத் தவிர்த்து விட்டு, தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு வழங்கிட வேண்டும். மேலும், அரசு வழங்கிய லேப்டாப் சந்தையில் விற்பனைக்கு வருவதைத் தடுக்கும் வகையில் கண்காணித்திட வேண்டும்.” என்று அக்கறையுடன் அரசுக்கு ஆலோசனை கூறுகிறார்,இதற்கு முந்தைய  திமுக ஆட்சியில் இப்படித்தான் அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி சந்தைக்கு  விற்பனைக்கு வந்தது. இப்போது, அரசு வழங்கியிருக்கும் விலையில்லா மடிக்கணினியும் விற்பனைக்கு  வர ஆரம்பித்திருக்கிறது.

 தொடக்கத்திலேயே, அரசாங்கம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஊதுற சங்கை ஊதிவிட்டோம்
-சி.என்.இராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: