ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தனியே "வாக்கிங்' செல்லும் பிரபலங்கள் பீதி

திருச்சி: நடைபயிற்சி சென்ற முன்னாள் அமைச்சர்கள், பிரபலங்கள் படுகொலை செய்யப்படுவது, காலையில் தனியாக, "வாக்கிங்' செல்லும் தமிழக பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பிரபலங்கள் அனைவரும், "வாக்கிங்' செல்லும்போது, எந்தவித தற்காப்பும் இல்லாமல், அலட்சியமாக இருந்ததே அவர்களது உயிர் பறிபோக முக்கிய காரணமாக உள்ளது.

தொழில்போட்டி, கட்டப்பஞ்சாயத்து, அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்னாள் அமைச்சர்கள், பிரபலங்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, காலை நேரத்தில் தனியாக, "வாக்கிங்' சென்ற பிரபலங்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த பாலன், தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த 2001ம் ஆண்டு பாலன், மயிலாப்பூர் வீட்டிலிருந்து, "வாக்கிங்' செல்லும்போது, கடத்திக் கொலை செய்யப்பட்டார். இவரை கடத்தி கொலை செய்த கும்பல், இவர் தனியாக செல்வதை நோட்டமிட்ட பிறகு, அவரை கொலை செய்துள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், 2003ம் ஆண்டு மதுரையில் "வாக்கிங்' செல்லும்போது படுகொலை செய்யப்பட்டார். இவரும் தனியாக சென்று கொலை கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அடுத்ததாக கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தன் நண்பர் பொன்ராஜ் என்பவருடன், "வாக்கிங்' சென்றார். இருவரையும் கொலை கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

சில தினங்களுக்கு முன் தனியாக "வாக்கிங்' சென்ற முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கொலை கும்பலால் கடத்தி, கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். ராமஜெயம் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளார். தனியாக, "வாக்கிங்' செல்லும்போது, அவர் ஏன் துப்பாக்கியை எடுத்துச் செல்லவில்லை என்று தெரியவில்லை. பெரும்பாலும் யாராவது இவருடன் துணைக்குச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் ராமஜெயம் ஏன் தனியாக சென்றார்? என்பது பற்றி அவரது மனைவி லதா போலீஸ் விசாரணையில் தெரிவித்தால் தான் தெரியும். பிரபலங்கள் கொலை செய்யப்பட்ட அடுத்தடுத்த சம்பவங்களில் ஆலடிஅருணாவை தவிர அனைவரும் தனியாக சென்று கொலை கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். ஒரு பகுதியில், "ராஜா' போல் வலம் வந்த வி.ஐ.பி., க்கள், "இது நம்ம ஏரியா தானே? யார் நம்மை என்ன செய்ய முடியும்?' என்ற அஜாக்கிரதையும், அலட்சியமுமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. துணைக்கு யாரையும் அழைத்துச் செல்லாமலும், தற்காப்பும் இல்லாமல் சென்றதே அவர்களது உயிர் போக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: