வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சிதம்பரத்தில் கனிமொழி பேசுகிறார். ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிருப்தி ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறைவாசம் கண்டு, ஜாமினில் வெளிவந்துள்ள கனிமொழி, வரும் 15ம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரத்தில் நடக்கும் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் கட்சியில் கசிந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், அரசியல் ரீதியில் கனிமொழி கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு கிளம்பியுள்ளது.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டங்கள், வரும் 9ம் தேதி மாவட்ட அளவில் நடக்கவுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கனிமொழியின் பெயரும் இடம் பெறவில்லை. சென்னை பனகல் மாளிகை முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார். வரும் 15ம் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து, மாவட்ட வாரியாகப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்தார்.

சிதம்பரத்தில் கனிமொழி: யார், யார்? எந்தெந்த மாவட்டங்களில் பங்கேற்றுப் பேசுவர் என்ற பட்டியலும் கட்சியில் தயாராகி வருகிறது.
சிதம்பரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசுகிறார் என்றும், அவரது பெயர், சிறப்பு பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல், திடீரென கட்சியில் கசிந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளி வந்த கனிமொழிக்கு, சென்னை விமான நிலையத்தில் தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

போர்க்கொடி: கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். தி.மு.க., பொதுக்குழுவில் கனிமொழிக்கு பதவி வழங்க விடாமலும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பார்த்துக் கொண்டனர். கனிமொழிக்கு கட்சியில் துணை பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் ராஜாத்தி வலியுறுத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் தனது துணை பொதுச் செயலர் பதவியை, கனிமொழிக்குத் தாரை வார்ப்பதற்காகவே ராஜினாமா செய்தார். ஜாமினில் கனிமொழி வெளியே வந்த பின், பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை சி.ஐ.டி., காலனியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மட்டும் அவர் பங்கேற்றார். மேலும், தி.மு.க., பொதுக்குழுவிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், கட்சி தொடர்பான பொதுக்கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்தார்.

ஆதரவாளர்கள் மகிழ்ச்சி: நீண்ட இடைவெளிக்குப் பின், கனிமொழி பேசுவதற்கு மேடையும், மைக்கும் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது. அதேசமயம், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: