சென்னை சத்யம் தியேட்டரில் கர்ணன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா. எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகக் காட்சி. சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா புதிய தொழில்நுட்பத்தில் டப் செய்யப்பட்டு பாலிவுட்டுக்குப் போகிறது. கால இயந்திரத்தில் பயணம் செய்வதுபோல இருக்கிறதா? இன்னும் சில பழைய படங்களும்கூட புதிய தொழில்நுட்ப வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றன. மீண்டும் ரசிகர்களைச் சந்தித்துள்ள கர்ணன் படத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பும் வசூலும்தான் காரணம்.
சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், முத்துராமன், அசோகன், சாவித்திரி எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படமாக கர்ணன் இருக்கிறது. நல்ல தமிழில் பேசப்படும் வசனங்கள். அந்தக் காலத்திலேயே ஹாலிவுட் படங்களைப்போல எடுக்கப்பட்ட காட்சிகள். இனிமையான பாடல்கள் என 1964 இல் வெளிவந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சித்திரம்தான் கர்ணன். அந்தப் படம் மீண்டும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது தமிழ்த் திரையுலகில் அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் 70 தியேட்டர்களில் வெளியான கர்ணன், இதுவரையில் ஒரு கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக கர்ணன் ஒடிக்கொண்டிருக்கிறான். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் குடும்பம் குடும்பமாகப் போய் பார்த்துவருகிறார்கள். பத்திரிகையாளர் காட்சியில் திருமதி. ஓய்ஜிபியும் ஆர்வத்துடன் கர்ணன் படத்தைப் பார்த்து ரசித்தார். கர்ணன் உருவாக்கிய புரட்சியில் ஏவிஎம் நிறுவனம் தங்களது பழைய படங்களை புதுப்பித்து வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறது. அந்த வரிசையில் எம்ஜிஆர் நடித்த படகோட்டி படம் வெளிவருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல டி.ராஜேந்தர், மைதிலி என்னைக் காதலி படத்தை நவீன தொழில்நுட்பம் க்லந்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தனக்கு சிறிய வயதில் பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய படமான கர்ணனை தூசுதட்டி எடுத்து நவீன குழந்தையாக்கி வெளியிட்டுள்ளவர் திவ்யா பிலிம்ஸ் சாந்திசொக்கலிங்கம். ராஜ் டிவி நிறுவனத்திடமிருந்து நெகட்டிவ் பெற்றிருக்கிறார். தசஇயிடம் பேசிய அவர், "எங்கள் குடும்பமே கர்ணன் படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும். அடிக்கடியும் பார்த்து ரசிப்போம். எங்களுக்கு ரொம்பவும் பிடித்த படம். அடுத்த தலைமுறைக்கும் தெரியவேண்டும் என்ற நோக்கில்தான் கர்ணனை வெளியிட்டோம். ஆனால் அதற்குக் கிடைத்துள்ள வரவேற்பு பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தின் நெகட்டிவ் அழியும் நிலையில் இருந்தது. அதை புதுப்பித்து டிஐ செய்திருக்கிறோம். ஒலியை டிடிஎஸ் 5.1 தொழில்நுட்பத்தில் மாற்றியிருக்கிறோம். இதற்கான பணிகளை 3 ஆண்டுகளாகச் செய்துவந்தேன். என் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது" என்று சொல்லும் அவர், ராஜ் டிவியுடன் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், இயக்குநர் டி.ராஜேந்தர் என பல பிரபலங்கள் கர்ணனைப் பார்த்து ஆச்சரியத்துடன் அவரிடம் பாராட்டியிருக்கிறார்கள்.
இது பழைய வீட்டுக்கு வெள்ளையடிக்கிற கதைதான் என்று தசஇயிடம் பேசுகிறார் திரைப்பட விநியோகஸ்தரும் சினிமா ஆர்வலருமான ராமானுஜம். மேலும் பேசிய அவர், "கர்ணன் படம் எடுக்கப்பட்ட காலத்தில் அதில் நடித்தவர்கள் ரொம்பவும் பிரபலமாகவில்லை. இன்று அவர்கள் ஜாம்பவான்களாகப் போற்றப்படுக்கிறார்கள். இன்றைய தலைமுறைக்கு அது புதிய செய்தி. பழைய படங்களை புதிய தொழில்நுட்பத்தில் மாற்றமுடியுமா? என்ற விடைக்கு பதிலும் மரியாதையும் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து சிலர் உற்சாகமடைந்துள்ளனர். இது சிவாஜி, எம்ஜிஆர் படங்களுக்கு மட்டுமே பொருந்தும். இருவரையும் ரசிக்கிறவர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்" என்கிறார். கர்ணனைத் தொடர்ந்து தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், வசந்த மாளிகை ஆகிய படங்களும் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க தயாராகிவருகின்றன என்று தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள். இப்படங்களில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நெகட்டிவ் அழிந்துவிட்டதாம். சிவாஜியின் தீவிர ரசிகரும் குடும்ப நண்பருமான ஓய்.ஜி. மகேந்திரன், வசந்தமாளிகை படத்தை புதுமை செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம்.
கர்ணன் மகன் விருஷசேனனாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். அவருக்கு தற்போது வயது 60. படத்தில் நடித்தபோது 12. தசஇயிடம் பேசிய சுரேஷ், பழைய ஞாபகங்களில் மூழ்குகிறார். தற்போது கர்ணன் வெளியிடப்பட்டுள்ளதை நம்பவே முடியவில்லை என்று வியந்துபோகும் அவர், புதிய தலைமுறைக்கு நல்ல வாழ்வியல் நெறிகளை இந்தப் படம் அறிமுகப்படுத்தும் என்று நம்பிக்கையும் தெரிவிக்கிறார். "பள்ளியில் படித்தபோது நாடகங்களில் நடித்துவந்தேன். அதைப் பார்த்த குடும்ப நண்பர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். நாங்கள் விளையாட்டாகச் சொல்கிறார் என்று நினைத்தோம். உண்மையில் அது ஒரு நாள் நடந்தது. முதலில் ஏஸி. திருலோகசந்தர் இயக்கிய காக்கும் கரங்கள் படத்தில் ஜூனியர் எஸ்எஸ்ஆராக நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அடுத்து பிஆர். பந்துலுவின் கர்ணன் படத்தில் நடித்தேன். இன்று நினைத்தாலும் சிவாஜியுடன் நடித்த நினைவுகளை சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன" என்கிறார் சுரேஷ்.
பாட்ஷா படத்தைப் பற்றி கருத்துத் தெரிவிக்கிற ரஜினிலைவ்.காம் ஆசிரியர் சங்கர், ''வடஇந்தியாவில் ரஜினிக்கு நல்ல புகழ் இருக்கிறது. அந்தப் படம் தமிழில் வெளிவந்த காலத்திலேயே மாணிக்பாட்ஷா என்ற பெயரில் இந்திக்கு மொழிமாற்றம் செய்யப்படும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அது ஏனோ வெளிவரவில்லை. அந்த முயற்சியை இப்போது வேறு நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது. டிஜிட்டல் கலர் டெவலப்பிங் செய்து புதிய நெகட்டிவ் தயார்செய்துள்ளனர். மேலும் ஸ்ட்ரீயோ போனிக் வடிவில் இசையைச் சேர்த்துள்ளனர். அதனால் இப்படம் உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்'' என்கிறார். இப்படம் வடஇந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் ஏப்ரல் மாத இறுதிக்குள் 1000 தியேட்டர்களில் வெளியிடப்பட இருக்கிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் உருவாகும் புதிய படங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ரசனையை மெல்ல இழந்துவருகின்றன. இந்நிலையில் செய்நேர்த்தியும் நல்ல கதையும் உரையாடலும் கொண்ட பழைய படங்கள் மீண்டும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கின்றன.
நன்றி: சண்டேஇந்தியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக