பெங்களூரு சந்திரம்மா லே-அவுட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 39; சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவர், திருப்பூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதால், நண்பர்கள் அதிகம் உள்ளனர். இன்டர்நெட் மூலமும் பல நண்பர்கள் உள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன், திருப்பூரை சேர்ந்த இந்துமதி என்பவருடன் நெட் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நெட் மூலம் தொடர்ந்து நட்பை வளர்த்துக் கொண்டோம்; காதலாகவும் மாறியது. ஊர் மட்டுமே தெரிந்த நிலையில், யார்? எப்படி இருப்பார் என்பது கூட தெரியாது. ஒருமுறை, நேரில் சந்திக்கத்தான் முடியவில்லை; புகைப்படத்தையாவது பார்க்க வேண்டும் என கேட்ட போது, இ-மெயில் மூலம் அழகான பெண் போட்டோவை அனுப்பி வைத்தார்."இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் உள்ளதாக கூறி, என்னிடம் பணம் கேட்டார். நானும் வங்கி ஏ.டி.எம்., மூலம் 15 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பி வைத்தேன். தொடர்ந்து நேரில் சந்திக்க வேண்டும் என கூறியபோது, தொடர்பை துண்டித்துக் கொண்டார். பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் சிக்கவில்லை. இதில் மோசடி நடந்துள்ளதாக சந்தேகப்படுகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
திருப்பூர் ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி அடைந்தனர். எட்டு ஆண்டுகளாக இந்துமதி என்ற பெண்ணாக நடித்து, ராமமூர்த்தியை ஏமாற்றியவர், திருப்பூர் முதலிபாளையம் வட்டகாட்டு புதூர் நாகராஜன், 35, எனவும், ரெடிமேட் கடை ஊழியர் எனவும் தெரியவந்தது. இன்டர்நெட் மூலம் ராமமூர்த்தியின் விபரங்களை பார்த்தவர், பெண் பெயரில் தொடர்பு கொண்டு, நட்பை வளர்த்துள்ளார். இவரிடம், பணப்புழக்கம் அதிகம் இருப்பதை தெரிந்துகொண்டு, அவ்வப்போது பணம் கேட்டு 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது. நாகராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக