வெள்ளி, 6 ஏப்ரல், 2012

தனக்குத் தானே அரசு நிலத்தை 'ஒதுக்கி' கொண்ட மத்திய அமைச்சர்

Vilasrao Deshmukh and Sachin Tendulkar

தனக்குத் தானே அரசு நிலத்தை 'ஒதுக்கி' கொண்ட மத்திய அமைச்சர்: சச்சினுக்கு பாரத் ரத்னா கோருகிறார்!

 
மும்பை: மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மீது அடுத்து இரு வேறு நில மோசடி புகார்கள் எழுந்துள்ளன.
முதலில் ஆதர்ஷ் நில ஊழல் வழக்கில் பெயர் நாறிய இவர் இப்போது மும்பையில் மீண்டும் இரு நில விவகார வழக்குகளில் சிக்கியுள்ளார்.
மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2005ம் ஆண்டு விலாஸ்ராவ் முதல்வராக இருந்தபோது மும்பை போரிவலி பகுதியில் அரசுக்குச் சொந்தமான 23,840 சதுர அடி நிலம் மன்ஜாரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது.
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம் (அரசு வழிகாட்டுதலின்படி இதன் மதிப்பே ரூ. 30 கோடிக்கு மேல்.. மார்க்கெட் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டும்) வெறும் ரூ. 6.56 கோடிக்கு இந்த அறக்கட்டளைக்கு பல் மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்டது. இதில் விஷேசம் என்னவென்றால், இந்த அறக்கட்டளையே விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு சொந்தமானது என்பதே.ஆனால், விதிகளின்படி 2 ஆண்டுகளுக்குள் பல் மருத்துவக் கல்லூரியை தொடங்கியிருக்க வேண்டிய இந்த அறக்கட்டளை 4 ஆண்டுகளாக அதை சும்மா வைத்திருந்து, பின்னர் அந்த நிலத்தை வேறு 'கல்விப் பணிகளுக்காக' பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் வகையில் விதிகளைத் திருத்துமாறு மும்பை கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதன்மூலம் இந்த நிலத்தை அறக்கட்டளையின் பெயரில் விலாஸ்ராவ் தேஷ்முக் சுருட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.

இன்னொரு நில விவகாரம்:

அதே போல விலாஸ்ராவ் முதல்வராக இருந்தபோது இந்திப் படத் தயாரிப்பாளர் சுபாஷ் கெய்க்கு திரைப்பட நகரம் அமைக்க மும்பையில் புறநகர்ப் பகுதியில் ரூ. 50 கோடி மதிப்புள்ள 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். இதில் பல விதிமீறல்கள் நடந்துள்ளது உறுதியானது.

இதையடுத்து இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் நிலத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்குமாறு சுபாஷ் கெய்க்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுபாஷ் கெய் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், நில ஒதுக்கீட்டில் பல முறைகேடுகளள் நடந்துள்ளதால் நிலத்தை மீண்டும் அரசிடம் திரும்ப ஒப்படைக்குமாறு நேற்று உத்தரவிட்டது.

இவ்வாறு அறக்கட்டளை பெயரில் நிலத்தை சுருட்டியது, முறைகேடாக நிலத்தை இந்தி படத் தயாரிப்பாளருக்கு ஒதுக்கியது ஆகிய விவகாரங்களையடுத்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று வெடிக்கவுள்ளது.

சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்க தேஷ்முக் சிபாரிசு:

இந் நிலையில் மும்பை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் உள்ள விலாஸ்ராவ் கூறுகையில், இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதை சச்சின் தெண்டுகருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

இந்த தேஷ்முக் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கின் தந்தையாவார். அதாவது, நடிகை ஜெனீலியாவின் மாமனார்

கருத்துகள் இல்லை: